புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
எண்ணமும் எழுத்தும்

எண்ணமும் எழுத்தும்

வாசித்ததை ஒப்புவிக்கும் மாணவனாக தன்னைச் சித்தரித்து, நூல்களை வாசிக்கவும், வாசித்தவற்றைப் பற்றியே யோசிக்கவும் எழுதவும் தன்னை ஆட்படுத்திக்கொண்ட எழுத்தாளர் எஸ்.சந்திரபோஸ், ஆசிரியப் பணிக்கமைய தந்த படைப்புதான் எண்ணமும் எழுத்தும்.

பாரதியிலிருந்து நம் மண் படைப்பாளிகள் வரை சரிதைகளை விலாவாரியாகத் தந்துள்ளார் நூலாசிரியர். சாதிபேதத்தை சாடிய பாரதியின் வரிகளில் பைந்தமிழ் பாடல், தலாட்டுப்பாடல், தோத்திரப் பாடல் என ஆழ்ந்து விரிவாகப் பதியப்பட்டுள்ளது.

‘குறமகள்’ புனைப்பெயருக்குள் மறந்திருந்த மூத்த பெண் எழுத்தாளர் வள்ளிநாயகி இராமலிங்கத்தின் சரிதையோடு, தொடரும் அவரது நேர்காணலில் பெண்ணியம் என்பது ஆரவாரமான கோஷமல்ல. நியாயத்தின் குரலே பெண்ணியம் என்ற ஆணித்தரமான கருத்துக்கள் ஒவ்வொரு வாசகனும் வாசித்து அறிய வேண்டிய ஒன்று என்கிறார்.

எழுத்தில் தீட்டு, தூய்மை என்று எதுவுமே இல்லை. சிந்தனையில் நேர்மையும் சொல்லில் கபடமின்மையும் இருந்தால் போதும் அதுவே எழுத்தின் மகிமையென அடித்துக்கூறும் எஸ்.பொ.வின் வரலாறு.

முற்போக்கு எழுத்தாளர்களில் மூலவர்களுள் ஒருவரான பிரேம்ஜி என்ற நாமத்தில் பதியப்பட்ட ஸ்ரீ கதிர்காம தேவஞான சுந்தரத்தின் அனுபவ மீட்டல், பொதுவுடமைவாதியும் சமூக சமத்துவப் போராளியும் இலக்கியவாதியுமான கே.டானியலின் கருத்துக்கள்,

என்றும் வாடாமல்லிகையாகவிருந்து மணம் கமழும் மல்லிகை ஆசிரியர் வாழ்நாள் சாதனையாளர் டொமினிக் ஜீவாவின் கடந்துவந்த பாதை,

கிராமத்து மண் வாசனை மாறாத படைப்பாளி தெணியானின் சரிதை, அரை நூற்றாண்டுக்கு மேல் எழுத்துலகில் சஞ்சரிக்கும் என்.கே.ரகுநாதன், மலையக இலக்கியத்தோடு ஈழத்து இலக்கிய வளம் கண்ட தெளிவத்தை ஜோசப் போன்றோரின் சரிதைகளோடு அவர்களின் சாதனைகளையும் உள்ளடக்கிய இந்நூல் ஈழத்து படைப்பாளிகளின் சரித்திர சான்றாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

நூலாசிரியரின் சிறுகதை, கவிதை, வன்னிவளம் பற்றிய கட்டுரைகளுடன் நம் நாட்டு படைப்பாளிகளின் சரிதையும் நூலுக்கு அணி சேர்க்கின்றன. ஒவ்வொரு வாசகனும் இந்நூலைப் படித்து பயன்பெறுவது அவசியம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.