புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...

நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...

பன்னாமத்தின் பக்கங்கள் 4

இந்திய சுதந்திர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டம் அது. 1927 ஆம் ஆண்டு வரலாற்றின் வரிகளில் களிநடனம் புரிகின்றது. முதலாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் தொழிலாளர் விவசாயிகளின் அரசியல் நிறுவனங்களும் உருவாகின.

மாத்தளை மங்கையர்க ளுக்கு வாழ்வளித்த பாக்கியம் அம்மையார்

நாடு கடந்த இந்திய புரட்சியாளர்களின் மையங்களுக்கும் சோவியத் ஆட்சிக்கும் இடையே தொடர்புகள் 1918 களிலேயே ஏற்படத் தொடங்கின. தேசிய புரட்சியாளர்களின் வட்டாரங்களில் மாக்சிசம் புகுவதற்கு இத்தொடர்புகள் உதவின 1918 - 1923 காலப்பகுதியில் சி.வி லெனின் உட்பட சோவியத் தலைவர்களான மாஸ்கோ தாஷ்கண்ட் நகரங்களில் சந்தித்த இந்திய தலைவர் மிகப் பெரிய உளப்பதிவிற்குள்ளாகினர். 1927 இல் தன் தந்தை மோதிலால் நேருவுடன் ஸ்ரீ ஜவஹர்லால் நேருஜி சோவியத் நாட்டிற்கு விஜயம் செய்தார்.

1927 இல் அண்ணல் மகாத்மா காந்திஜி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது மாத்தளைக்கு வருகை தந்து மாத்தளை பாக்கிய வித்தியாலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய இந்நிகழ்வு, 1927 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் அமரர் கந்தசாமி ஐயா தலைமைதாங்க மாத்தளையின் அன்று பிரபல கொத்தனராகத் திகழ்ந்த ஜனாப் ரி.எம்.இப்ராஹிம் தங்க முலாம் பூசப்பட்ட மேசன் கரண்டியில் சீமெந்து கலவையினை வெகு பக்குவத்துடன் அள்ளித்தர காந்தி ஜி அடிக்கல்லினை நாட்ட நடந்தேறியது.

1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் சேர்.பொன் இராமநாதன் இக்கல்லூரியின் கட்டடத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார். இக்கல்லூரியின் முதல் அதிபர் பிரித்தானியாவைச் சேர்ந்த செல்வி லேலண்டா ஆவார். ஆங்கில மொழியில் கல்வியினைத் தொடங்கிய இப்பாடசாலையில் தமிழ் மாணவர்களை மட்டுமன்றி இஸ்லாமிய, சிங்கள பிள்ளைகளும் சேர்ந்து தம் ஆரம்பக் கல்வியினைத் தொடங்கியுள்ளனர். குறுகிய இன, மத பேதங்களுக்கு அப்பால் நின்று செயலாற்றி தேசியத்தலைவராக மிளிர்பவர் சேர்.பொன் இராமநாதனும் அவர் குடும்பத்தினரும்.

யுத்த காலத்தில் தம் உயிரையும் துச்சமாக மதித்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு சிங்களத் தலைவர்களை காப்பாற்றியவர். இவரையும், சேர்.பொன் அருணாசலம் முதலான குடும்பத்தவரையும் இலங்கையர் இன்றும் தம் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடி மகிழ்கின்றனர். கந்தசாமி ஐயாவின் புத்திரர் அமரர் க.குமாரசுவாமி கெளரவ பக்தர் மகாதேவா போன்ற பெரியார்கள், இந்த மாத்தளை மண்ணில் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை அவ்வப்போது எடுத்துக்கூறி மகிழ்ந்தமை இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. இப்பெரியார்களின் எண்ணக்கருவில் உதித்த இக்கலாசாலை தேசிய ஒற்றுமையின் ஒரு சின்னமாகும்.

“வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிந்தார்” என்று பாடினார் பாட்டுக்கொரு புலவர் பாரதி. “ஏட்டையும் பெண்கள் தொடாமல் இருந்த இருண்ட காலத்தை மாற்றியமைக்க பாட்டு; மட்டும் போதுமா?” இலக்கியம் இயக்கவடிவம் பெற வேண்டும் அல்லவா?

நம் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தேவாரம், திருவாசகம் முதலான பக்திப் பாசுரங்களைப்பாடியதோடு மட்டுமன்றி திருத்தலங்களுக்குச் சென்று, தொண்டாற் றினார்கள். இந்தவகையில் அமரர் கந்தசாமி ஐயாவும், அமரத்துவம் அடைந்த செல்வம் பாக்கியம் அம்மையாரும் பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் பாக்கியம் தேசிய கல்லூரியை அமைத்து செயல்புரிந்தனர்.

“பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீராது” என்று பாஞ்சாலி சபதத்தைப் பாடி, பாரதிவலியுறுத்தினார். ஆழப்புதைந்த தேயிலைச் செடியின் அடியில் புதைந்த, பெற்றோரின் சிதையில், தாமும் கொழுந்து கிள்ளி தோட்டமின்றி தேய்ந்திட்ட மலையக மங்கையர்களின் வாழ்வில், மாத்தளை மங்கையர்களின் வாழ்வில் ஒளி விளக்காகத் திகழ்வதுதான், மாத்தளை பாக்கியவித்தியாலயமாகும்.

வசதி படைத்தோர் பல இலட்சங்களை அள்ளிக்கொடுத்து தம்பிள்ளைகளை வேறு பெண்கள் கல்லூரிகளில் சேர்த்து விடுகின்றனர். அப்பாவி, ஏழை, நடுத்தர குடும்ப சிறுமிகளுக்கு அன்றுமுதல் அடைக்கலம் தரும் கல்விமாதா, பாக்கியம் மகளிர் பாடசாலையே ஆகும். இதில் கல்வி கற்ற பல்லாயிரக்கணக்கானோர் தம்வாழ்வை வளப்படுத்தியுள்ளனர். பட்டதாரிகளாக சட்டத்தரணிகளாக உயர் பதவிகளில் மிளிர்கின்றனர். ஆசிரியைகளாக பணிபுரிவோர் ஆயிரமாயிரமாவர். காலத்தால் மறையாத என்றும் நிலைத்துப் போற்றத்தக்க கல்விப்பணியாற்றியவர், கலாநிதி பதியுதீன் முஹம்மத் ஆவார். (தொடரும்...)

அவர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டு இப்பகுதியில் இஸ்லாமியரின் கல்வி மேம்பாட்டிற்கு தொண்டாற்றியவர், மாத்தளை எஸ்.எச்.வதூத். இவரும் பாக்கியம் தேசிய கல்லூரியிலேயே அரிச்சுவடியினை ஆரம்பித்துள்ளார். இதுபோல் இன்று மாத்தளை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாகத் திகழும், ரோஹண திசாநாயக்க தமிழ்மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமய கலாசார வளரச்சிக்கும் பல கோடி நிதியினை வாரி வழங்குகின்றார்.

போக்குவரத்து பிரதி அமைச்சராக விளங்கும் இவர் தன் ஆரம்பக்கல்வியை இங்கேயே தொடங்கியதாக பெருமையுடன் கூறுவார். எளிமையும் இனிய சுபாவமும் கொண்ட இவ் அம்பாள் பக்தர், தாய்ப்பால் அருந்திய இக்கல்லூரிக்கு ஆற்ற வேண்டிய சேவை ஒன்று உண்டு. அதுதான் முன்பு இக்கல்லூரி அமைந்துள்ள கிழக்கு வீதி மாத்தளை தபால் கந்தோரில் தொடங்கி, மணிக்கூண்டு கோபுரம்வரை, “கந்தசாமி மாவத்தை” கந்தசாமி வீதி என பெயர் பூண்டு திகழ்ந்தது. மாத்தளை மாநகர பெயர்ப்பலகை ஏட்டில் இன்னும் அப்பெயரே உள்ளது எனத் தெரிய வருகின்றது. இவ் வீதியின் பெயரை வழக்கொழிந்து விடாது. காப்பாற்றி மீண்டும் இப்பெயரை நிலைநாட்டுவது பழைய மாணவரான பிரதி அமைச்சருக்கு மென்மேலும் புகழ்சேர்க்கும் கைங்கரியமாகும். அத்தோடு பாக்கியம் அம்மையாருக்கு தனது பெருஞ்சேவையினையும் சமர்ப்பிக்கும் வண்ணம், மணிக்கூண்டு கோபுர சந்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை செல்லும் வீதி தர்மபால மாவத்தை எனத் திகழ்கின்றது. இவ்வீதியில்தான் இலங்கையின் முதல் தேசாதிபதி சேர் வில்லியம் கோபல்லாபவின் இல்லம் அமைந்துள்ளது.

இவ்வீதியிலிருந்து பிரிந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தினுள் பாக்கியம் தேசிய கல்லூரியை இணைக்கும் ஒழுங்கையுள்ளது. ஒழுங்கை கல்லூரியை சென்றடையும் போது, தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் அலங்காரவளைவு அதனைத்தொடர்ந்து விளையாட்டு மைதானம். அதனையொட்டி பாடசாலைக்கட்டடங்கள் தொடர்கின்றன.

ஒரு பாலகனாக மழலைச்சிறுவனாக துள்ளி நடைபோட்டு, பாலர் வகுப்பிற்கு நடை பயின்று கல்வி கற்க வந்த அன்பு நெஞ்சர் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க பாக்கியவித்தியாலயத்தையும் தர்மபால மாவத்தையையும் இணைக்கும் இவ் ஒழுங்கைக்கு பாக்கியம் அம்மையாரின் பெயரைச் சூட்டினால் வரலாற்றில் தடம் பதிப்பார் அல்லவா?

பிரதி அமைச்சர் ரோஹண, எழுத்தாளர்களை - கலைஞர்களை மதிப்பதில் முன்னிற்பவர். தமிழ் நூல்கள் வெளியீடு, இலக்கிய விழாக்கள் என்றால் தவறாது சமூகமளித்து சிறப்பிப்பவர். வாஞ்சையுடன் பழகும் இவர் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் “தமிழ் மக்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? வடிவேல் ஐயா கூறுங்கள்....கூறுங்கள்” என வினவும் பெருந்தகை. மாத்தளை மாநகர முதல்வராக தொடங்கி இன்று பாராளுமன்ற பிரதிநிதியாக விளங்கும் இவர் இதனை நிறைவேற்றுவார் என்று தமிழ் நெஞ்சங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன.

பன்னாமத்தின் பக்கங்கள் தொடரில் முதல் அத்தியாயத்திலே அமரர் அபுதாலிப் அப்துல் லத்தீப்பின் பன்முகப்பட்ட ஆற்றலில் நாம் அறிந்த சிலவற்றை முன்வைத்தோம். கடந்தவாரம் மாத்தளை பகுதியில் பிரபல சமூக, சமய சேவையாளர் மாரிமுத்து விக்னேஸ்வர சேதுராமன் மறைந்தது பெரும் சோகமாக விளங்கியது. விக்னேஸ்வர சேதுராமன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர். அமரர் செளமிய மூர்த்தி தொண்மானின் பாசறையில் வளர்ந்தவர்.

இரு இலக்கிய சஞ்சிகைகளை தனது சொந்த செலவில் வெளியிட்டவர். மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம். சுது கங்கை ஏழு முகக் காளியம்மன் தேவஸ்தானம் ஆகியவற்றின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். மடுல்கலை பகுதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு முன்னின்று முகம் கொடுத்தவர். 1974 காலப்பகுதியில் தொழிலாளர்கள் பஞ்சம், பசிக்கொடுமைக்கு முகம் கொடுத்தபோது அவர்களுக்கு உதவி “அரிசிக்காரர்” எனப் பெயர் பெற்றவர்.

இவரின் இறுதிக் கிரியைகளில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். இவரின் இறுதிக் கிரியைகளின் பின்னர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க நான் இரங்கல் உரை ஆற்றினேன். இதன் பின்னர் முன்னாள் இரத்தோட்டை தமிழ் வித்தியாலய அதிபர் திருவாளர் கணபதிப்பிள்ளை என்னை சட்டத்தரணி எஸ்.எம்.சவாஹிர் சந்திப்பதற்காக தேடிக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

அந்த பெருங்கூட்டத்தில் அவரையும் சட்டத்தரணி நுவரெலிய ஏ.பி.கணபதிப்பிள்ளையையும் சந்தித்தேன். ஏ.ஏ.லத்திப்புடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்த சட்டத்தரணி தோழர் சவாஹிர் தினகரன் கட்டுரையை தான் படித்ததாகவும், லத்தீப் பல்வேறு புனைபெயரில் எழுதிய கட்டுரைகளையும் ஆக்கங்களை வெளியிடவும் அவற்றைத் தொகுக்கவும், ஒரு குழுவினை உருவாக்க வேண்டுமென எடுத்துக் கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.