புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

கறிமுல்லை

வேறு பெயர் - முன்னை, அரணி, நறுமுல்லை, சொதிமுல்லை

தாவரவியற்பெயர் - Premna integrifolia (பிரேம்னா இன்ரகிரிபோலியா)

குடும்பம் - Verbenaceae (வேபினேசியே)

சிங்களப் பெயர் - மீதி

சமஸ்கிருதப் பெயர் - அக்னிமந்த

முல்லையில் இரண்டு முக்கிய பிரிவுகளுள் (1) கொடுமுல்லை, (2) மரமுல்லை. மரமுல்லையில் பசுமுல்லை, எருமைமுல்லை, காட்டுமுல்லை, பேய்முல்லை என்ற பேதங்களுள்ளன. பசுமுல்லை, எருமைமுல்லை என்பன உணவாகவும், மருந்தாகவும் பாவிக்கத்தக்கன.

முல்லை உலர்வலயத்துக்குரிய சிறு மரமாகும். இலங்கையின் வடபகுதியானது பண்டைய காலத்தில் இரண்டு தீவுகளாக இருந்ததாகவும் அதில் வலிகாமம் மற்றும் தீவகம் அடங்கலாக இருந்த பாகம் பெருந்தீவாக நாகதீபம் அல்லது மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டதாகவும், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்கள் சிறுதீவாக எருமை முல்லைத்தீவு என்று அழைக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகின்றது.

அதாவது எருமை முல்லை மரம் இப்பகுதியில் மிகுதியாகக் காணப்பட்டமையாலேயே அப்பிரதேசம் எருமை முல்லைத்தீவு என்று அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். தற்காலத்திலும் வடபகுதியில் தரிசு நிலங்களிலும், பற்றைக் காடுகளிலும் பரவலாக கறிமுல்லைமரம் வளர்ந்து காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

முல்லைமரத்தண்டு வைரமானது. வெண்மை, அல்லது வெள்ளை கலந்த மண்ணிறமானது. நன்கு சடைத்து, கிளைத்துக் காணப்படும். தண்டு, கிளைகளில் இடைக்கிடை முட்கள் காணப்படும். இலைகள் - தனியிலைகள் எதிரான இலை ஒழுங்கு முட்டை வடிவானவை. விளிம்பு அழுத்தமற்று பற்களுடையதாக இருக்கும். இலைநுனி கூரானது. (பசுமுல்லையின் இலை விளிம்பு அழுத்தமாக இருக்கும்) பூந்துணர்முனைக்குரிய, குஞ்சங்களாக காணப்படும். பூக்கள் சிறியவை.

கறிமுல்லை வேரானது சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ள தசமூலம் என்னும் கூட்டுச்சரக்கில் ஒன்றாகச் சேருகிறது. வாதநோய்களைப் போக்கவல்லது. இலையானது மலச்சிக்கல், சிறுநீரெரிவு, பித்த தோடம், உட்காய்ச்சல் என்பவற்றை நீக்கும்.

“திகழ்முன்னையிலையுட்காய்ச்சல் வருபிரமேகம் பித்த மாற்றுநன் மண்முண்டாமே”

என்கிறது சித்த வைத்தியம். மேலும் கறிமுல்லை இலையில் இரும்புச் சத்து அதிகமிருப்பதால் குருதிச் சோகையையும் நீக்கவல்லது. கறிமுல்லை இலையை வாரத்தில் இரண்டு நாட்களாவது உணவில் சேர்த்து வரல் நன்மை பயக்கும். முக்கியமாக மழைக்காலத்தில் கீரை வகைகள் கிடைப்பது அரிது என்பதால் அக்கால்தில் கீரைக்குப் பதில் கறிமுல்லை இலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

முன்னையிலையானது பெரும்பாலும் சொதியாகத் தயாரிக்கப்படுவதால் அதற்குச் சொதிமுல்லை என்றும் பெயர் வழங்கப்படுகிறது. எருமை முன்னை அல்லது பசுமுன்னையிலையை உணவாகப் பயன்படுத்தலாம்.

முன்னையிலைப் பாற்சொதி

தேவையான பொருட்கள்

* முன்னையிலை - 1கைப்பிடியளவு

புளிப்பு மாங்காய் - 1

வெங்காயம் - தேவையான அளவு

பச்சைமிளகாய் - 4, 5

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - 1 பாதி

முல்லையிலையைச் சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும். மாங்காயைத் தோல்சீவி விரல் நீள துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து, அடுப்பேற்றி நன்கு கொதிக்க வைக்கவும். மாங்காய், முன்னை இலை என்பன அவிந்ததும் இறக்கிக்கொள்ளவும் இச் சொதியை சோறு அல்லது பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். மாங்காய் கிடைக்காவிடின் ஏனையவற்றை அவித்து இறக்கி, ஆறவிட்டு தேசிப் புளிசேர்த்தும் உபயோகிக்கலாம். கறிமுல்லை இலையைப் பருப்புடன் சேர்த்துப் பருப்புக்கறியாகவோ, அல்லது நெய்விட்டு வறுத்து வறையாகவோ அல்லது இலைக் கஞ்சியில் சேர்த்தும் உணவாக உண்ணலாம். மலச்சிக்கல், குருதிச்சோகை, வாய்வுப் பிடிப்பு, மூட்டுவாத நோய்களால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முல்லையிலை ஒரு சிறந்த மூலிகையுணவாகும்.

களா

வேறு பெயர் - கிளா, கிளாத்தி,

தாவரவியற்பெயர் - carissa carandas (கரிசா கரண்டஸ்)

குடும்பம் - Apocynaceae (அப்போசயனேசியே)

சிங்களப் பெயர் - கரம்ப

கிளா அல்லது களாவில் சிறுகளா, பெருங்களா என்ற பேதங்களுண்டு. இது உலர்வயங்களில் காணப்படும் ஒரு செடியாகும். இதன் முனையரும்புகள் முட்களாகத் திரிபடைந்திருக்கும் தண்டை ஒடித்தால் பால்வரும் இது போலி இணைக்கவர் முறையில் கிளைவிடும். தனி இலைகள், எதிரான இலை ஒழுங்கில் காணப்படும். நீள்வட்ட வடிவானவை. பூந்துணர் நுனி வளராமுறையானது. பூக்கள் வெள்ளை நிறம். காய் பச்சை நிறம் மிகவும் புளிப்புச் சுவையுள்ளது. பழம் கருமைநிறம். இனிப்புச் சுவையுள்ளது. சுண்டங்காயளவானது. சிலர் இதை செம்மாங்காய் என்றும் அழைக்கின்றனர். களாக்காயினால் தாகம், நாச்சுவையின்மை, பித்தம், வாந்தி, இரத்தபித்தம் என்பன நீங்குவதுடன் நல்ல பசியும் ஏற்படும் என்று கூறுகிறது சித்தவைத்தியம்.

“ மாட்டிய களாக்காய் தாகமரோசிகம் பித்தவாந்தி

வாட்டிய ரத்த பித்த மடித்திடும் பசியுண்டாமே”

எனவே, காய்ச்சல் காரணமாக நாச்சுவையற்றும், பசிகுறைந்தும் இருப்பவர்களும், வாந்தி தாகம், பித்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் தமது உணவில் களாக்காயைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிவாரணம் பெறமுடியும். சாதாரணமாகவும் களாக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

களாக்காய் ஊறுகாய் அல்லது தொக்கு

தேவையான பொருட்கள்

களாக்காய் - 100 கிராம் (அல்லது கிடைக்கக்கூடிய அளவு)

செத்தல் மிளகாய் - 25 கிராம்

வெந்தயம் - 2 தேக்கரண்டி

மஞ்சள் - 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - சிறு துண்டு

களாக்காயைச் சுத்தம் செய்து இரண்டிரண்டாக வெட்டிக்கொள்ளவும். மிளகாய், வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் என்பவற்றை வறுத்து இடித்து தூளாக எடுத்துக் கொள்ளவும். ஈயம் பூசிய சட்டி அல்லது தாச்சியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை அதில் விடவும். எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டு வெடித்ததும் வெட்டிவைத்த களாக்காய்களை அதில் போட்டு நன்கு வதக்கவும். காய்கள் வதங்கியதும் பொடி செய்து வைத்த மிளகாய்த்தூள் முதலியவற்றையும் தேவையான அளவு உப்புத்தூளையும் போட்டு நன்கு கிளறி, இறக்கி, ஆறவிடவும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.