புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
ஆசிரியர் சேவையை அற்புதப்பணியாக கருதிய நாங்கல்ல இனாயா டீச்சர்

ஆசிரியர் சேவையை அற்புதப்பணியாக கருதிய நாங்கல்ல இனாயா டீச்சர்

ஆசிரியர் சேவையென்பது ஓர் அற்புதமான பணி. மாணவர் உள்ளங்களில் குடிகொள்ளும் ஓர் அருமையான பணியாக இதனை கருதமுடியும். இது சகல ஆசிரியர்களுக்கும் பொருந்தாது.

ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்யும் ஆசிரியர்களுக்கே இது பொருந்தும். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் தியாகத்துடனும் தமது சேவையை வழங்கி மக்களின் நன்மதிப்பையும் இறை திருப்தியையும் அடைவோர் சிலர். இவ்வாசிரியர் பணியை இறை பணியாக கருதி செயற்பட்ட ஒருவேரே மர்ஹுமா மெளலவியா ஹாஜியானி வை.பி இனாயா டீச்சர். கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதியின் வரக்காபொல பிரதேச செயலக பிரிவிலுள்ள நாங்கல்லை எனும் கிராமத்தில் முஹம்மது யூனுஸ் உம்மு ரiதா தம்பதிகளுக்கு மூத்த மகளாக 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் பெற்ற இவர், பின்னர் கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் பிரவேசித்து 1970 ஆம் ஆண்டு மெளலவியா பட்டம் பெற்று வெளியேறினார். ஆரம்ப காலம் முதல் சமூக பணியில் தன்னை அர்ப்பணித்த இவர் அதற்கு ஏற்றாற்போல் ஆசிரியர் பணியையே தொழிலாகவும் தேர்ந்தெடுத்தார்.

இதன் அடிப்படையில் 1973 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரும் தான் கற்ற பாடசாலையுமான நாங்கல்லை முஸ்லிம் வித்தியாலயத்திலேயே ஆசிரியர் நியமனம் பெற்று தனது சமூக பணியை ஆரம்பித்தார். 1975, 1976 ஆம் ஆண்டுகளில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இணைந்து பயிற்சி பெற்றார். அங்கு பயிற்சியை முடித்துக்கொண்ட அவர், 1977 ஆம் ஆண்டு வரக்காபொலை கொடவெல முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்ற சென்றார். அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு வரக்காபொலை பாபுல்ஹஸன் மத்திய கல்லூரிக்கு மெளலவியா ஆசிரியையாக இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

இக்கல்லூரியில் தனது பணியைத் தொடர்ந்த காலப்பகுதியில் அவர் ஓர் ஆசிரியர் என்பவர், எவ்வாறு பணியாற்ற வேண்டும்? அதிபருக்கும் ஆசிரியருக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு அமைய வேண்டும்? ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். அன்னாரின் அர்ப்பணிப்பும் தியாக சிந்தையும் மாணவர்கள் மீதான பற்றும் சகல ஆசிரியர்களுடனான தொடர்பும் அதிபருக்கான கட்டுப்பாடும், இறை அச்சமும் அவர்களுக்கே தனித்துவமானதாகக் காணப்பட்டது. ஓய்வு நேரம் என்பதோ விடுமுறை காலம் என்பதோ அவரது அகராதியில் இல்லாத வசனங்களாகும்.

1978 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை இக்கல்லூரியில் பணிபுரிந்த 19 ஆண்டு கால பகுதியில் அவரது சேவை இக்கல்லூரி வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாகும். மாணவர்களின் ஒழுக்க விடயங்களில் மிகவும் கரிசனையோடு இருந்த இவர் மாணவர்களுக்கு அன்பு காட்டிய அதே நேரம் தவறு செய்யும் சந்தர்ப்பங்களில் கண்டிக்கவும் தவறவில்லை.

குறித்த காலப்பகுதியில் கலைமானி பட்டப்படிப்பையும், பட்டபின் படிப்பையும் பூர்த்தி செய்தார். 1988 ஆம் ஆண்டு திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்தி செய்தார். 1997 ஆம் ஆண்டு மீண்டும் தனது சொந்த ஊரான நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். 2001 ஆம் ஆண்டு இல்லற பந்தத்தில் இணைந்துகொண்ட இவர் 2006 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்றதன் பின்னரும் தனது சமூக பணியை கைவிடவில்லை. அதன் ஓர் அங்கமாக அப்பிரதேச மாணவிகளுக்கான மஜ்லிஸ் எனும் ஆன்மீக பயிற்சி பாசறையை ஆரம்பித்து அப்பிரதேச மாணவிகளுக்கு ஆன்மீக பயிற்சியை வழங்கினார். 2008 ஆம் ஆண்டு பிரத்தியேகமான பெண்கள் மத்ரஸா ஒன்றையும் நடத்தி சென்றார்.

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 61 ஆவது வயதில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி இவ்வுலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.