நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
கவின்மிகு குவைத்தில் தோன்றிய புது ஆசியா!

கவின்மிகு குவைத்தில் தோன்றிய புது ஆசியா!

புது ஆசியாவை உருவாக்க குவைத்தில் கூடிய தலைமைகள்

மலரும் நினைவுகள்

குபேர நாடு குவைத்!

ஆசியாவிலுள்ள மக்களின் வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு குவைத் நாட்டின் தலைமகன் வழங்கிய சன்மானம் முன்னூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

செல்வம் பொங்கி வழியும் இந்நாட்டின் அமீர் (தலைவர்) மேன்மைக்குரிய ஸேக் ஸபாஹ் அல்-அஹ்மத் அல்-ஸபாவின் உள்ளத்தில் பீரிட்டெழுந்த உணர்வு அலைகளை அடக்க முடியாமல், ஆசிய மக்களுக்கு மனமுவந்து வழங்கிய இந்த பரிசுப் பொட்டலம் உலகில் வேறெந்த நாடும் அளிக்காத - அளிக்கவும் முடியாத - பணத்தொகையாகும்.

குவைத் விமான நிலையத்தில் எமது ஜனாதிபதி வரவேற்கப்படுகிறார்.

ஆசிய மக்களின் ஒட்டுமொத்தமான தோழமையின் பிரதிபளிப்பாய் குவைத்தில் உதயமாகியது. ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புக் கூட்டத்தொடர் உச்சிமாநாடு (Asia Cooperation Dialogue) துல்-ஹஜ் மாதத்தின் தலைப்பிறை வெள்ளிக்கீற்று கிழக்கு வானில் தோன்றிய அதேவேளை, ஒரு புதிய ஆசியா உலகு மண்ணில் உதயமாகிறது.

ஸர் ஜோனின் சண்டித்தனம்

இந்தக் கூட்டமைப்பின் முதல் உச்சிமாநாட்டை குவைத் அமீர் மாளிகை மணி மண்டபத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில் இந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பித்துவைத்தார் அந்நாட்டின் அமீர். ஆசியாவில் பலமிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இங்கு அமர்ந்திருந்து, பலத்த கரகோஷத்துடன் குவைத் ஷேக்கின் அறிவித்தலை வரவேற்றனர்.

சீனா, ரஷ்யா, மொங்கோலியா, ஈரான், இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ் அத்தோடு எமது குட்டி இலங்கையும் குவைத்தில் கூடின.

இம்மாநாடு ஒரு புது ஆசியாவை உருவாக்குமென பல நாட்டுத் தலைவர்கள் தத்தமது ஆரம்ப உரைகளின் பொழுது, தெளிவாகச் சொன்னார்கள்.

ஆசியாவுக்கு புத்துயிரளித்த 1955 ஆம் ஆண்டில் இந்தோநேசியாவின் பந்தூன் (Ban dung) முதல் மாநாடு நடந்தேறியது. அணிசேரா உச்சி மாநாட்டின் தோற்றத்துக்கு பிறகு இந்த பந்தூன் மகாநாடே அடித்தளமாக அமைந்தது.

பந்தூன் மகாநாட்டிலும் அன்று இலங்கையும் பங்குபற்றியது. அன்றைய பிரதம அமைச்சராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவலை பந்தூன் மகாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்ற சம்பவத்தை என் நினைவலைகளை பின்னோக்கிச் செலுத்திப் பார்க்கினிறேன்.

“கம்யூனிச வாதத்தை தொலைத்துக் கட்டுவதற்கு எந்தப் பிசாசுடனும் கைகோர்த்து செல்வதற்கு நான் தயார்” என்று சேர் ஜோன் கொத்தலாவல இந்த மாநாட்டில் வீரமுழக்கம் செய்தார்.

ஏனைய சில உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் இக்கூற்று காரணமாக சலசலப்பு ஏற்பட்டபொழுது, அன்றைய ஆசிய நாட்டு பெரும் தலைவர்களான பண்டித ஜவஹர்லால் நேரு, மார்ஷல் டிடோ, சுஹார்தோ, அன்குருமா, கமால் அப்துன் நாஸர் போன்றவர்கள் உடன் முன்வந்து பந்தூன் மாநாட்டில் வெடிப்பு ஏற்படாதவண்ணம் மிகவும் சமயோசிதமாக சந்தர்ப்பத்தை சமாளித்தார்கள் என்பது வரலாறு.

ஆனால் இன்று இந்த குவைத் மாநாட்டில் சீனா, ரஷ்யா இருபெரும் கம்பியூனிச நாடுகளோடு ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற கஸ்கஸ்தான் உட்பட அரபு, பாரசீக, மலாய், ஹிந்தி, உருது பேசுகின்ற நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக கூடி நின்று முழு ஆசியாவுக்கும் பெருமை நேர்த்தனர்.

இங்கு எந்தவித சலசலப்போ, உடைப்போ, கீறலோ ஏற்படவில்லை என்பது ஒட்டுமொத்தமான உண்மை. அன்பும் பரிவும் பாசமும் விதவிதமான கலை, கலாசார, மொழி - மதங்களுக்கு சொந்தக்காரர்களான 34 நாடுகளின் தலைவர்கள் பட்டுநூல் போன்று இழையோடி ஒன்றாக இணைந்தார்கள்.

புது நாகரீகத்தின் தோற்றம்
மாநாட்டில் இலங்கைக்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எம்.பீ க்களான சஜின் வாஸ் குணவர்தன, ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர்.

பார்ப்பதற்கு அழகாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இந்நாட்டுத் தலைவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

“நாம் ஒரு புது உலகை உருவாக்க வேண்டும்” என்ற குவைத்தின் அமீர் உறுதிபூணும்பொழுது, “வேறு எந்த நாட்டினதும் விளையாட்டுத் திடலாக நாம் இனி இருக்கப்போவதில்லை” என்று சூளுரைத்தார் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தலைவர்கள் செய்த இந்த உறுதிப் பிரமானத்தை மண்டபம் நிறைய அமர்ந்திருந்த பிரதிநிதிகள் அனைவரும் மகிழ்ச்சி ஓசை எழுப்பியும் கரகோஷம் செய்தும் வரவேற்றனர். ஆசியாவில் ஒரு புது நாகரிகத்தைத் தோற்றுவிக்கும் பங்குதாரர்களாக இந்த 34 நாட்டுத் தலைவர்களும் வரலாற்றில் இடம்பெறுவர்.

மனித சக்தி, இயற்கை வளம் அனைத்தையும் ஒன்று திரட்டி, தமக்கென ஒரு புது வழியைத் தோற்றுவித்து, அதன் மூலம் உலகில் மிகப் பலமிக்க ஒரு சக்தியாக, ஆசிய நாடுகளை ஒரு தனிச் சங்கிலியால் இணைக்கும் பணியை இத்தலைவர்கள் குவைத்தில் எமக்கு உருவாக்கித் தந்துள்ளனர். மேற்குலக நாகரிகம், மேற்குலக ஆயுத பலம் போன்றவற்றை கிழக்கு தோற்கடிக்கும் ஒரு அத்தியாயத்தின் தோற்றமே இந்த குவைத் உச்சி மாநாடாகும்.

இதற்கென இம்மாநாட்டின் தலைவர்கள் வழங்கிய ஆலோசனைகள் என்ன? அதையும் பார்ப்போம்........!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]