புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
சுப்பர் சொனிக் மனிதனை தெரியுமா ?

சுப்பர் சொனிக் மனிதனை தெரியுமா ?

ஃபீலிக்ஸ் பொம்காட்னர் தெரியமா? அண்மைக்காலத்தில் உலகின் மூலை முடுக்குகள் எங்கிலும் அடிபட்ட பெயர் தான் இந்த ஃபீலிக்ஸ் பொம்காட்னர். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அப்படியாயின் உலகில் என்ன நடக்கிறது என்று நீங்கள் தெரியாமல் இருக்கிaர்கள் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

ஒலியை விட வேகமாகப் பயணிக்கும் மிகை ஒலித்தாரை விமானங்கள் (சுப்பர் சொனிக் விமானங்கள்) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிaர்களா? இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் தான் அவை எம் நாட்டு மக்களுக்கு அறிமுகமாகியிருந்தன. மிகை ஒலித்தாரை விமானங்கள் என்பதை விட சுப்பர் சொனிக் விமானங்கள் என்ற பதம் எம்மவர் பலருக்கும் நன்றாக நினைவிருக்கும். அந்த விமானங்கள் ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணிக்கவல்லவை. விமானம் கடந்து பல மைல் தொலைவில் சென்ற பின்னர் தான் அந்த விமானத்தின் ஒலியைக் கேட்ட அனுபவம் எம்மில் பலருக்கு இப்போது நினைவுக்கு வந்திருக்கும். இத்தகைய மிகை ஒலித்தாரை விமானத்தின் வேகத்தில் ஒரு தனி நபர் வானிலிருந்து குதித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இல்லையல்லவா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த நபர் தான் ஃபீலிக் பொம்காட்னர். வானிலிருந்து குதித்து சாகசம் செய்வதை வழக்கமாகக் கொண்ட ஃபீலிக் மெக்சிக்கோவின் பாலைவனப் பகுதியில் இந்த சாதனை நிகழ்வை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.

1969 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஒஸ்திரியாவின் சல்ஸ்பேர்க் பகுதியில் இவர் பிறந்தார். வானிலிருந்து குதித்து சாகசம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட ஃபீலிக்ஸ் 1999 இல் உலக சாதனையை நிகழ்த்தினார். அப்போதைய காலத்தில் உலகிலேயே உயரமாகக் கருதப்பட்ட கோலாலம்பூரின் (மலேசியா) இரட்டை கோபுரங்களின் உச்சியிலிருந்து பரசூட்டிலே கீழே குதித்து உலகின் உரயமான பரசூட் பாய்ச்சல் என்ற சாதனையை நிலை நாட்டினார்.

அவரது வான் சாகசம் செய்யும் உத்வேகம் அத்துடன் நின்றுவிடவில்லை. 2003 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாய்க்குக் குறுக்காக வானில் பாய்ந்து கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். அது மட்டுமன்றி ரியோ டி ஜெனிரோவில் அமைக்கப்பட்டிருக்கும் யேசுபிரான் சிலையின் கைகளிலிருந்து குதித்ததன் மூலம் மிகவும் தாழ்வான தளத்திலிருந்து பாய்ந்து சாகசம் செய்தமைக்கான சாதனையையும் நிலைநாட்டினார். அவற்றுடன் அவரது சாதனை வேகம் தடைப்படவில்லை. வானிலிருந்து குதித்து சாகசம் செய்வதில் அவர் தொடர்ந்தும் பல உலக சாதனைகளை நிலை நாட்டி வந்தார். 2010 இலிருந்து விஞ்ஞானிகள் குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டு ரெட் புள் நிறுவனத்தின் ஆதரவுடன் வானில் அதிக உயரத்திலிருந்து குதிக்கும் சாதனையை நிலைநாட்ட அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடம் அவர் தன் சாதனைக்கு முன்னதாக இரு பரீட்சார்த்த பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டினார். கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி சுயாதீனமான வீழுகையின் கீழ் 3 நிமிடங்கள் 45 செக்கன்கள் பயணித்த அவர் தனது பரசூட்டைம் திறக்கும் போது வேகம் மணிக்கு 580 கிலோ மீற்றர்கள் ஆகும். அவர் தரையை வந்தடைய மொத்தமாக 8 நிமிடங்கள் 8 செக்கன்கள் எடுத்தது. ஏறத்தாழ 21.7 கிலோ மீற்றருக்கும் அதிகமான உயரத்திலிருந்து பரசூட்டின் உதவியுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கிய மூன்றாவது வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.

அதே போல கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி இரண்டாவது பரீட்சார்த்த பாய்ச்சல் நடைபெற்றது. அது 69,640 அடி உயரத்திலிருந்து நடைபெற்றது. அந்த உயரத்தைச் சென்றடைய அவருக்கு எடுத்த நேரம் 90 நிமிடங்கள் ஆகும். அந்த உயரத்திலிருந்து குதிக்கும் போது சுயாதீன வீழுகையின் கீழ் 3 நிமிடங்கள் 48 செக்கன்கள் பயணித்த அவர் பின்னர் தனது பரசூட்டைத் திறந்தார்.

அவரது சாதனைப் பாய்ச்சலை இம்மாதம் (ஒக்டோபர்) 9ஆம் திகதி நிகழ்த்துவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சீரற்ற காலநிலை காரணமாக அது 14 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. அன்று நியூ மெக்சிக்கோவில் 39 கிலோ மீற்றர் உயரத்திலிருந்து வான் பாய்ச்சலை நிகழ்த்தி உலக சாதனை புரிந்தார் பொம் கார்ட்னர். சுயாதீன வீழுகையில் அவர் பெற்ற வேகம் மணிக்கு 1327 கிலோ மீற்றர்கள் ஆகும். அத்துடன் முதன் முதலாக எந்தவொரு வாகனத்துக்குள்ளிருந்தும் பயணிக்காமல் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணித்த முதலாவது நபர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

பொம் கார்ட்னரின் இந்த துணிகர முயற்சியானது எதிர்காலத்தில் அனர்த்தம் ஒன்றின் போது விமானிகளையும் விண்வெளி வீரர்களையும் கூட காப்பாற்ற உதவலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மரணத்தை விஞ்சும் இந்த முயற்சியானது பூமியிலிருந்து பல மைல்களுக்கு அப்பாலிருந்து அதியுயர் வேகத்தில் குதிக்கும் போது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆய்வு செய்யவும் வாய்ப்பையளித்துள்ளது. விண்வெளி வீரர்களின் ஆடைத் தயாரிப்பு, அவர்களது பயிற்சி முறைகள், அவர்களுக்கான அவசர மருத்துவ உதவி போன்றவற்றிலே புதிய பரிமாணத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறது. விண்வெளி வீரர்களுடன் தொடர்புடைய நாசா பொறியியலாளர் ஒருவர் கருத்துக் கூறுகையில் “திறன்மிகு விண்வெளி வீரர்கள், விண்வெளிச் சுற்றுலா பயணிகள், அதி உயரத்தில் பறக்கும் விமானிகள், பயணிகள் போன்றோரின் நிலைத்தல் தொடர்பில் இவரது பயணம் சிறந்த அடித்தளத்தை அமைத்திருக்கிறது” என்றார். எதிர்வரும் காலங்களில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாக இவரது வான் சாகசம் ஒரு ஆரம்பமாக அமைந்திருக்கிறது என்பதே நாசா விஞ்ஞானிகளின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

இந்த சாதனை வரை நாசாவுக்கும் பொம்கார்ட்னருக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. ரெட்புள் நிறுவனம் பொம்கார்ட்னருக்கு அனுசரணை வழங்கியிருந்தது. ஆனால் அவரது மருத்துவ குழுவிலே நாசாவின் முன்னை நாள் விண்வெளி மருத்துவரான வைத்திய கலாநிதி ஜொனாதன் கிளார்க் தலைமைப் பதவியை வகித்து வந்தார். கொலம்பியா விண்கல விபத்தில் தனது மனைவியை இழந்தவராவார்.

பொம்கார்ட்னர் சம்பந்தப்பட்ட மருத்துவத் தரவுகள் யாவற்றையும் அவரது உடலிலே பொருத்தப்பட்ட உணரிகள் மூலம் மருத்துவக் குழு பெற்றுக்கொண்டது. இதயத்துடிப்பு, குருதி அழுத்தம் போன்ற தரவுகளும் அவற்றில் அடங்கும். அந்தத் தரவுகளை தமது மருத்துவக் குழு ஆராய்ந்து வருவதாக கிளார்க் கூறியிருக்கிறார்.

வளிமண்டலத்திலே படைமண்டலத்தினூடு ஆரம்பித்த இவரது பயணம் ஏறத்தாழ 40 செக்கன்களுக்கு கட்டுப்பாட்டை இழந்திருந்தது. அப்போது இருந்த ஈர்ப்பு விசையானது புவியீர்ப்பு விசையின் 2.5 மடங்குகளாகும். பின்னர் சுழன்று சுழன்று தன்னை சமநிலைப் படுத்திக்கொண்டார் பொம்கார்ட்னர். இந்த சாதனையானது விண்வெளிச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்லும் விண்வெளிக் கலங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில் அத்தகைய விண்கலங்களுக்கு அவசர வெளியேற்ற திட்டங்கள் மிக அவசியமாகும். ஒரு அவசர நிலைமையின் போது பயணிகளை எப்படி வெளியேற்றுவது என்பதே இந்த அவசர வெளியேற்றத் திட்டமாகும்.

வானில் குதிப்பது சாகசமாகத்தெரியும் காலம் இது. ஆதலால் எதிர்காலத்தில் அதுவும் ஒரு சாதரணமான விடயமாகலாம். அதற்கான முதலடியை எடுத்து வைத்தவர் பொம்கார்ட்னர் என்றால் மிகையாகாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.