புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
சாணக்கியனிடம் கேளுங்கள் ?

சாணக்கியனிடம் கேளுங்கள் ?

எஸ்.பெளஸால் உசைன், புதிய காத்தான்குடி

காத்தான்குடி கடற்கரை வீதியில் அஸாத் சாலி ஐயா கூட்டிய கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது என்பது பொய்யாம். அது அவர் பிரசாரம் தேடுவதற்காகச் செய்த நாடகமாம். தனது ஆட்களைக் கொண்டே அந்தக் கலகத்தை ஏற்படுத்தியதாகக் கூறுப்படுகிறது. அது உண்மையா?

அதே ஊரில் இருந்து கொண்டு கொழும்பிலிருக்கும் என்னிடம் உண்மையா? எனக் கேட்கிaர்கள். உணவுப் பொதிகளை உதவியாகக் கொடுத்து பிரசாரம் தேடுவதிலும் பார்க்க உதைபட்டுத் தேடும் பிரசாரம் விரைவாகவும் முழுநாட்டுக்கும் பெரிதாகத் தெரிந்துவிடும் என்பது உண்மைதான். அதற்காக தனக்குத்தானே அடியாட்களை வைத்து அடித்தது உண்மையா என்பதை நன்று அறியாமல் வெளியே கதைக்கக் கூடாது. உமக்கு சாலியுடன் தனிப்பட்ட கோபம் ஏதும் உள்ளதா? யார் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அது சாணக்கியனுக்குப் பிடிக்காது.

சி.அன்வர் இஸ்மாயில், நுரைச்சோலை,

புத்தளம் நகரபிதா பாயிஸ் கராட்டியை முறையாகப் பயின்று கறுப்புப் பட்டியைப் பெற்றுள்ளாராமே. யாருக்கும் கராட்டி அடி காட்ட வேண்டிய தேவை ஏதும் அவருக்கு ஏற்பட்டுள்ளதா?

அவருக்கு ஒரு தேவையும் இல்லை. கராட்டி என்பது ஒரு தற்பாதுகாப்புக் கலை. ஒரு நகரத்தின் பிதா அந்த நகர மக்களுக்கு முன்மாதிரியாக நடந்துள்ளார். அவ்வளவுதான். அவருக்கு கராட்டி, மல்யுத்தம், குறிபார்த்துச் சுடுதல் என்பது முன்னரேயே நன்கு தெரியும் என்பது பலருக்கும் தெரியும். இப்ப அதை சான்றிதழுடன் பெற்றிருக்கிறார். எதற்கும் நீங்கள் அவரைச் சந்திக்கச் சென்றால் இரண்டடி தள்ளி நின்று உரையாடுங்கள்.

எம்.ஐ.அப்துல் காதர், கொழும்பு -09

புதுடில்லி சென்ற தமிழ்க் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகம் சார்பாகவும் பேசுவோம், எடுத்துரைப்போம் என்று சூளுரைத்துச் சென்றனர். ஆனால் அங்கு எந்தக் கதையும் இல்லை. இதற்குக் காரணம் என்ன?

நான் நினைக்கிறேன் பிரதமர் சிங்கைக் கண்டதும் அவர்கள் தாம் பேசப்போன விடயங்களை மறந்து விட்டார்கள்போலும். புகைப்படத்தை நாலு கோணத்தில் வடிவாக எடுத்தால்போதும் கதைத்த விடயத்தையும் கதைக்காத விடயங்களையும் தாம் வழமைபோல அறிக்கைகளாக விடலாம் என்று நினைத்திருப்பார்கள். அத்துடன் நீங்கள் யார் முஸ்லிம் மக்களைப் பற்றிப் பேச என்று மு.கா பொருளாளர் இங்கு கேட்டதும் அவர்களுக்கு ஒரு வாசியாக அமைந்து விட்டது. இனி அதையே சாட்டாக வைத்திருக்க முயற்சிப்பர்.

ப.நடராஜசிவம், கிளிநொச்சி,

பிரபாகரனின் பிடிவாதமே இறுதி யுத்தத்தின்போது தமிழர்கள் பலரின் உயிரைக் குடித்தது என்று சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளாரே? இதை அவர் புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் தம்பி பிடிவாதத்தை விடும் அல்லது குறையும் என்று அப்பவே கூறியிருக்கலாமே?

உண்மைதான். கூறியிருக்கலாம் ஆனால் கூற முடியாது என்பது வன்னியிலிருக்கும் உம்மை விடவும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. வன்னி வரும்போது கூறியிருந்தால் வன்னியை விட்டு அவரால் வெளியே வந்திருக்க முடியாது. வெளியே நின்று கூறியிருந்தால் வன்னிப் பக்கமே சென்றிருக்க முடியாது. வன்னியிலிருக்கும் நீர் கேட்கிற கேள்வியைப் பார்த்தால் எரிக் ஐயா பொய் சொல்லுகிறாரோ என்று சந்தேகப்படுவது போலத் தெரியும். தம்பி அவர் வெள்ளைக்காரன். பொய் சொல்லவே மாட்டார்.

ஆர். சிவசண்முகராஜன், அக்கரைப்பற்று

கிழக்கில் இடம்பெறும் அரச வைபவங்களில் முதலமைச்சர் அப்துல் மஜீத் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனையும் தவறாது தன்னுடன் அழைத்துச் செல்வது மட்டுமல்லாது உரிய கெளரவத்தையும் வழங்கி வருகிறார். இதற்கு ஏதாவது விசேட காரணம் உள்ளதா?

விசேட காரணம் என்று எதுவும் இல்லை. ஒற்றுமை, பண்பு, தன்னடக்கம் என்பவையே வெளியே தெரியாத காரணங்கள். சிலருக்குச் சிறு பதவி வந்துவிட்டாலே போதும் படாதபாடு படுத்துவார்கள். ஆனால் பண்பு என்பது இதுதான். அதை அப்துல் மஜீத்திடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் மட்டுமல்ல பலரும் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்கள். கண்படாமல் இருந்தால் சரி.

ஏ.சேனாதிராஜா, நீர்கொழும்பு

தமது கட்சியைப் பிளவுபடுத்த பொன்சேகா முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியிருக்கிறாரே? உண்மையா?

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே பல கூறுகளாக பிளவுபட்டுள்ளது. இதில் பொன்சேகாவும் இணைந்து கொண்டு பிளவை ஏற்படுத்தினால் அக்கட்சியில் மிஞ்சுவது ரணில், திஸ்ஸ, ரவி, ஜோஸப் மைக்கல் பெரேரா போன்ற சிலராகவே இருக்கும். ஆனால் ஒன்று எவர் பிரிந்தாலும் ரணில் இருக்கும்வரை ஐ.தே.கவிற்கு அவர்தான் தலைவர். அதில் மட்டும் மாற்றம் ஏற்படாது. அவரை எவராலும் அசைக்கவும் முடியாது.

க.வேலுச்சாமி, பொகவந்தலாவை

மனோ கணேசன் மலையகத்தில் புதிய தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை ஆரம்பிக்கப் போகிறாராம். அதில் இணைய திகாவும், பிரபாவும் விருப்பம் தெரிவித்துள்ளனராமே. மூவரும் மூன்று திசையில் நிற்பவர்கள். இது சாத்தியமாகுமா? நடக்கக் கூடிய ஒன்றா?

மனோ தனக்கு தங்க ஒரு இருப்பிடம் தேடுகிறார். இது தெரியாமல் இவர்களும் அவசரப்பட்டு அறிக்கை விட்டுள்ளனர். ஆனால் பிரபாவினதும், திகாவினதும் மலையக ஒற்றுமை உணர்விற்குப் பாராட்டுத் தெரிவித்தே ஆகவேண்டும். வடக்கில் தமிழ் கூட்டமைப்பு பிளவுபட்டு வருவதால் அங்கு மனோவிற்கு வேலையில்லாது போகிறது. அதனால் மலையகம் பக்கம் தனது பார்வையைத் திருப்பிவிட்டுள்ளார். முயற்சி உண்மையாக இருந்து நன்றாக அமைந்தால் எல்லாமே நல்லதுதான்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.