நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
சோபையிழந்த சம்பியன்ஏழை மக்களுக்காக குரல் கொடுத்தவர்

ஏழை மக்களுக்காக குரல் கொடுத்தவர்

முப்பது வருடம் யுத்த கருமேகம் சூழ்ந்த இந்த நாட்டை மீட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க வழி சமைத்து, ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை கட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவ் உலகிற்கு தந்தமாமனிதர் டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தினத்தையொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது.

ஒரு குழந்தையின் சமூகசிந்தனை பெற்றோர்களாலேயே ஊட்டப்படுகின்றது. அதன் இரண்டாவது பங்கே ஆசிரியர்கள். எமது ஜனாதிபதி ராஜபக்ஷவின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டவர் அவரின் தந்தை டி.ஏ. ராஜபக்ஷ. விவசாயிகளின் துன்ப துயரங்கள் நன்கறிந்தவர். உண்மையில் அவர் ஒரு விவசாயி அதனால் அவர் விவசாயிகளுக்கு நல்லபல வேலைதிட்டங்களை உருவாக்கினார். நெல், குரக்கன், சோளம், தானிய வகை, பலா, முருங்கன், மாங்காய் போன்றவற்றால் ருகுணுவை நாட்டின் தானியக் களஞ்சியமாக்கி, விவசாயிகளின் வாழ்வுநிலையை உயர்த்தி நாட்டையும் அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல முடியும் என்பதை நன்றாக அறிந்திருந்தார்.

ஏழை எளிய மக்களுக்காக குரல் எழுப்பிய அவரை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அம் மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதித்து செயற்பட்டவர். அரசியலில் பணத்தை சம்பாதித்து வயிறு வளர்த்த தலைர்களுக்கு அவர் புகட்டிய பாடம், இந் நாட்டு மக்களின் மனதில் இருந்து என்றும் அகலாது. தமது மக்களின் நலனுக்காக சொந்தப் பணத்தை செலவழித்தார். தான் சேர்த்த செல்வத்தை மக்களுக்காக வாரிவழங்கினார். அந்திம காலத்தில் வைத்திய சாலைக்கு சென்றது கூட இன்னொருவரின் வாகனத்தில் தான். இந்த நாட்டில் முற்காலத்தில் வர்க்க வேறுபாடு, சாதி வேற்றுமை அதிகமாக இருந்தது. உயர்குலத்தினர், நிலசுவாத்திரர்கள் போன்றோருக்கு எளிய மக்கள், கீழ் வர்க்கத்தினர் மரியாதை செலுத்த வேண்டும் என்ற ஒரு வழக்கம் இருந்தது. ராஜபக்ஷ இதை மாற்றினார். தான் சார்ந்த இனம், மதம் என்பவற்றில் பற்றுறுதி கொண்ட டி.ஏ. ராஜபக்ஷ சாதி வேற்றுமைக்கு எதிராகப் போராடினார்.

1954ம் ஆண்டில் இருந்து டி.ஏ. ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக போட்டியின்றி தெரிவானார். 1961ம் ஆண்டு வரை பல்வேறு பதவிகள் வகித்த அவர், 1960-1964 வரை பாராளுமன்ற உறுப்பினர் சபை பிரதி தலைவராக பதவி வகித்துள்ளார். 1964ம் ஆண்டு பிரதி சபாநாயகராகவும் உறுப்பினர் சபை தலைவராகவும் இருந்தார். தன் பரம்பரைக்காக பணம் சேர்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் இந் நாட்டில், தான் சம்பாதித்த செல்வத்தை மக்கள் நல திட்டங்களுக்கே வழங்கினார். அவரின் முழுக்கவனமும் ருகுணு வாழ் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதிலேயே இருந்தது. டி.ஏ. ராஜபக்ஷவின் கனவு நனவாகி கொண்டிருக்கிறது. ருகுணு இன்று அபிவிருத்தியில் உச்ச நிலையை அடைந்துள்ளது. இந் நிலைக்கு பங்களிப்பு நல்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரையும் குறிப்பிட்டாக வேண்டும். டி.ஏ. ராஜக்ஷ அவர்களின் இறுதி பயணத்தின் போது ருகுணு முழுவதும் வெள்ளைக்கொடிகளால் நிறைந்து, மக்கள் அழுது புலம்பினர். மக்களின் ஆழ் மனதை வென்ற உண்மையான தலைவர் அவர்.

அவரின் 46வது நினைவு தினத்தில் அவர் செய்த மாபெரும் சேவைகளை மீட்டிப் பார்ப்போம். அவரின் சிந்தனைக்கு உயிரூட்டம் கொடுப்போம். நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டு வர பாடுபட்ட புத்திரர்களை எமக்களித்த அவரை என்றென்றும் நினைவு கூர்வோம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]