புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

எத்தனை காலம்தான் ஏமாற்றுவர்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவர்

புஷ் வாணமாகிப்போன அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் சந்திப்புப் போலவே புதுடில்லிக்கான சீறுவாண விஜயமும் அமை யும். இலங்கை அரசுடன் பேசியே தீர்வு என்ற அறிவிப்புக்குப் பின்னரும் ஏன் இந்த வெளிநாட்டுச் சுற்றுலாக்கள். புதுடில்லிக்கான தமது விஜயம் திருப்திகரமாக இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். கேட்பதற்கு சந்தோசமாக உள்ளது. ஆனால் இதில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் இந்த விஜயம் குறித்து இந்தியா உத்தியோகபூர்வமாக வாயே திறக்கவில்லை. தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சம்பந்தன் ஐயா முதல் சுரேஸ் பிரேமச் சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் வரை தத்தமது பங்களிப்பை அறிக்கைகள் மூலமாக வழமை போலவே சிறப்பாகவே செய்து முடித்துள்ளனர்.

இந்திய விஜயத்தை வைத்துத் தமிழ் மக்களை அடுத்த தேர்தல்வரை ஏமாற்றிக் காலத்தைக் கடத்தலாம் என்பது கூட்டமைப்பிலுள்ள அனைவரினதும் எதிர்பார்ப்பு. தமக்குள் பதிவு, நிதி, சின்னம் எனப் பிளவுபட்டாலும் வெளிநாட்டு விஜயக் கொள்கையில் சம்பந்தன், சுரேஸ், செல்வம், சுமந்திரன் எல்லோருமே ஒரே கட்சிதான். தமக்கு ஊதுகுழலாக இருக்கும் தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்களில் போட்டி போட்டு இவர்கள் கொடுத்துவரும் செய்திகளும், பேட்டிகளும் பாமர தமிழ் மக்களைக் கவருவதாகவே உள்ளது என்பது உண்மைதான்.

ஆனால் முப்பது வருடங்களாக ஆயுதப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம் எனப் போராடி இறுதியில் எதுவுமே இல்லாது வெறுங்கைகளுடன் பிறர் கரங்களை எதிர்பார்த்து நிற்கும் தமிழ்ச் சமூகத்தைத் தொடர்ந்தும் தமிழ்க் கூட்டமைப்பினர் ஏமாற்ற முனைவதுதான் வருத்தத்திற்குரிய விடயமாகும். தமது உரிமைகளை வென்றெடுக்க விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை நம்பியிருந்த தமிழ் மக்களுக்கு அவர்களது அழிவிற்குப் பின்னர் தாமே பாதுகாப்பு என்பதாகக் கூறிவரும் தமிழ்க் கூட்டமைப்பு அம்மக்கள் எதிர்பார்ப்பதுபோன்று நடந்துகொள்கின்றதா என்றால் அது கேள்விக்குறியே.

புலிகளின் மறைவிற்குப் பின்னரான கடந்த மூன்றரை வருட காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு தீர்வினைக் கண்டு அழிந்து போயுள்ள வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதைவிடுத்து இன்றும் புலிகளின் பின்புலம் இருப்பதுபோன்று சண்டித்தன அரசியலை தமிழ்க் கூட்டமைப்பு நடத்தி வருவது தமிழருக்கு ஆரோக்கிய மானதல்ல. இதனை அவர்கள் விளங்கிக் கொள்ளாது சர்வதேசத்தைத் தொடர்ந்தும் நம்பியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

அண்மையில் அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையே சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சொல்ஹேம் வழங்கிய ஒரு செவ்வி யில் விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் நடந்து கொண்ட விதத் தைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். பிரபாகரனின் விடாப்பிடி யான பிடிவாதமே தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணம் என்பதை அவர் தெளிவாகக் கூறியுள்ளார். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது விட்டுக்கொடுத்து புரிந்துணர்வு மூலமாகச் செயற்பட்டிருந்தால் பொதுமக்கள் மட்டுமல்லாது பிரபாகரனுடன் சேர்த்துப் பல புலிகளும் உயிர் பிழைத்திருப்பர் என்பதையே அவர் நாசூக்காகத் தெரிவித் திருக்கிறார்.

அன்று பிரபாகரன் செய்ததையே இன்று தமிழ்க் கூட்ட மைப்பினரும் செய்ய முயற்சிக்கின்றனர். பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு சொற்பேச்சுக் கேட்காது மடிந்தது போலவே தமிழ்க் கூட்டமைப்பும் பிடிவாமாக இருந்து தமிழர் தனித்துவ அரசியலுக்குச் சாவு மணி அடிக்கப் போகின்றது. புலிகள் அரச படைகளுடன் போராடிக்கொண்டு சகோதர இயக்கங்களைக் கொன்று குவித்தது போலவே இவர்களும் அரசாங்கத்துடன் மல்லுக் கட்டிக்கொண்டு தமக்குள்ளும் முட்டி மோதுகின்றனர்.

தமிழ்க் கூட்டமைப்பினர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தீர்வு காண இலங்கைக்குத்தான் வந்தாக வேண்டும். எந்த நாட்டு அரசாங்கத்தைச் சந்தித்தாலும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துதான் இறுதித் தீர்வைக் காண வேண்டும். இவ்விடயத்தை அரசாங்கம் மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. இதற்குப் பின்னரும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் சுற்றுலா செய்வதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

இராஜாங்கத் திணைக்களம் அழைப்பதாக தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்குச் சென்றனர். பேச்சு நடத்தினர். தமது இஷ்டத்திற்கு அறிக்கைகளை விட்டனர். இதோ அமெரிக்கா தீர்வைத் தந்துவிட்டது போன்று அறிவித்தனர். இறுதியில் என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை. எதுவுமே நடக்கவில்லை. இவர்கள் அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்துவிட்டு கனடா சென்று பணத்தைச் சேகரித்துக்கொண்டு நாடு திரும்பியதுதான் மிச்சம். காலப்போக்கில் அமெரிக்க விஜயம் மறக்கப்பட்டதொன்றாகிவிட்டது. இப்போது இந்தியா. அடுத்தது எந்த நாட்டிற்கோ தெரியாது. உண்மையில் வெளிநாடுகள் தமது இராஜதந்திர செயற்பாடுகளுக்காக இவர்களைத் திருப்திப்படுத்தவே இத்தகைய சந்திப்புக்களை ஏற்பாடு செய்கின்றன. இவர்கள் இலங்கை திரும்பியதும் அந்நாடுகள் இவர்கள் வந்து போன விடயத்தையே மறந்துவிடும். அந்தளவிற்கு அவர்களுக்கு தமது நாட்டுப் பிரச்சினைகள் தலைக்கு மேலாக உள்ளது.

எனவே தமிழ்க் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும். பேச்சில் கலந்துவிட்டு வெளியே வந்து அரசாங்கத்தை விமர்சிப்பதால் பிர யோசனம் கிடையாது. விட்டுக் கொடுத்துப் பேச வேண்டும். பாதிக் கப்பட்ட தமிழ் மக்களைப் பற்றிச் சிந்தித்துப் பேச வேண்டும். கொழும்பு -07ல் வசிக்கும் அல்லது வெள்ளவத்தையில் சொகுசு மாடி வீடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு அல்ல தீர்வு. தமது சொந்தங்களை இழந்து தமது இருப்பிடங்களின் எல்லைகளைத் தொலைத்து நிற்கும் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கே தீர்வு தேவை. தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராவது ஆயுதப் போராட்டத்தில் உண்மையுடன், நேர்மையாக நேரடியாக ஈடுபட்டிருப்பார்களா? அல்லது அல்லது யுத்தத்தில் தமது உறவுகளை இழந்திருப்பார்களா? அல்லது தமது காணிகளை இழந்திருப்பார்களா? இதில் ஒன்றையாவது இவர்கள் அனுபவித்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களது வலி இவர்களுக்குப் புரியும். யுத்தம் இடம்பெற்றபோது தமது பிள்ளைகளுடன் ஐரோப்பிய நாடுகளில் சொகுசாக இருந்த இவர்களில் பலரே இன்று தமிழருக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

குரல் கொடுப்பது நல்ல விடயம். அதனை சூழ்நிலையை விளங் கிக்கொண்டு அதற்கேற்றவாறு கொடுங்கள். அமெரிக்காவோ, இந்தியாவோ தமிழர் தீர்வு விடயத்தில் நேரடியாக ஒருபோதும் தலையிடப் போவதில்லை. அதனால் அந்நாடுகளை விடுத்து அர சாங்கத்துடன் நேரடியாகப் பேசுங்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழு விற்குச் சென்று உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். அக்குழுவிலிருந்து போராடுங்கள். இதனை விடுத்து பாதிக்கப்பட்ட மக்க ளைத் தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்பதே எமது தாழ்மை யான கோரிக்கையாகும். உங்களால் முடியவில்லையாயின் தயவு செய்து ஒதுங்கிவிடுங்கள். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை அரசாங்கம் தாராளமாகவே செய்யும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.