புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

தியாகத் திருநாள்

தியாகத் திருநாள்

இறுதிக் கடமை
ஹஜ்ஜை முடித்து
அருளைச் சுமந்த
ஹாஜிகளே வருக!

பாவம் களைந்து
தூய்மை அடைந்து
புத்துயிர் பெற்ற
ஏந்தவரே வருக:

செவிவழி கேட்டு
எழுத்தினில் படித்த:
புனிதத் தலங்கள்
பார்த்து மகிழ்ந்த
மேன்மைக்குரியோரே வருக;

மனிதப் புனிதர்
மாநபி செல்வம்
பாதம் பட்ட
புகழ் பூத்த மண்ணில்:
கால் பதித்த
கோமான்களே வருக:
இறைவேதம் இறங்கிய
புண்ணிய நகர் சென்று
புத்தொளி பெற்ற;
இறைநேசர்களே வருக;

வாழ்வியல் உண்மை
தத்துவம் புரிந்து
பெருமானார் வழி
செயலாற்ற வரும்
மாண்புடையோரே வருக;

தியாகத்தில் மலர்ந்த
வெற்றித் திருநாள்;
உலக முஸ்லிம்கள்
உவந்து கொண்டாடும்
பெருமைமிகு பெருநாள்;
“ஈதுல் அழ்ஹா”
வாழ்த்தி வரவேற்போம்


 

தாக்குப்பிடிக்காத தபாற்காரன்

வட்டை விதானையார் பெற்றெடுத்த
வடிவான சின்னவள் செண்பகத்தை
கட்டான உடல் கொண்ட தபாற்காரன்
கல்யாணம் கட்டிக்கக் கேட்டு வந்தான்!

வட்டை விதானையார் நோய்க்குள்ளாகி
வருடங்கள் ஆறேழு கழிந்து போச்சி
சிட்டான செண்பகம் பூப்படைந்தும்
சீதனம் தடையாச்சி மணம் முடிக்க!

சீதனம் கேளாத மாப்பிள்ளைக்கே
செண்பகம் வாழ்ந்திடக் காத்திருந்தாள்
ஆதனம் சீதனம் ஒன்றும் வேண்டாம்
ஆள்மட்டும் வாவென்றான் தபாற்காரன்!

பாலுக்குள் பழம்வந்து விழுந்ததென்று
பருவத்தின் பட்டினி போக்கவெண்ணி
நாளுகள் நாட்களாய்ப் போகும் முன்னே
நடந்தது திருமணம் சீக்கிரத்தில்!

காலங்கள் பறந்திடச்சிறகடித்து
கற்பங்கள் ஆணொன்று பெண்ணொன்றாக
நாளொன்று பொழுதொன்றாய் விலைகளேற
நடந்தன சண்டைகள் வீட்டுக்குள்ளே!

ஊரிலே நாலு பேர் உடுத்திருக்கும்
ஒழுங்கான சாரிகள் அவளுக்கில்லை
சீரலே சிறப்பிலே கலந்து கொள்ள
சின்னோரு வசதியும் கிட்டவில்லை!

பள்ளிக்குப் பிள்ளைகள் போவதற்கு
பாதணி சட்டைகள் ஒன்றுமில்லை
வெள்ளிக்கிழமையும் இறைச்சி வாங்க
வேற்றாக்கள் உதவியை நாடினளே!

கள்ளிக்கு காசினை தினம் கொடுத்து
களவிலே போய்வரும் தபாற்காரன்
உள்ளமை பொண்டாட்டி பிள்ளைகளை
உதாசீனப் படுத்தினான் சண்டையிட்டு!

இருவீட்டுச் செலவுகள் தாக்குப்பிடிக்க
இயலாமல் போனதால் தபாற்காரன்
ஒருவீட்டு வாழ்க்கையே போதுமென்று
ஒதுங்கினான் கள்ளியின் வீடு நாடி!

கண்ணகி செண்பகம் காதிக்கோட்டில்
கடிதம் கொடுத்தனள் செலவு கோரி
புண்ணாகி நெஞ்செல்லாம் தபாற்காரன்
போய்ச் சொல்லி அழுதனன் கள்ளியிடம்!

கள்ளியோ கள்ளனை மீட்டெடுக்க
கல்யாணம் பண்ணியே வாழ்ந்திருக்க
உள்ள பணமெல்லாம் உதவி செய்து
ஊரையும் விட்டவள் வெளியே சென்றாள்!

வெளிநாடு சென்றவள் வேறொருத்தன்
விலைமாதாய்ப் போனதால் காசு சேர்க்க
முழியாய் முழிக்கிறான் தபாற்காரன்
முழுவதும் இழந்ததாய் தலைசொறிந்து!


 

நன்றியற்றோர்

வாழ்வு உலகின் ஓடம்
வாழ மனுவுதவி தேடும்
பாழ்கள் ஆயின் வாடும்
படைத்தோன் தலையில் போடும்

பணத்தைத் தேட நாளும்
பாவச்செயலில் மூழும்
குணத்தோர் வழியை ஏசும்
குடிகள் இதனால் தாழும்

உறவில் நலவைப் போக்கும்
உயரும் வழியைப் பார்க்கும்
அறத்தின் வாழ்வை நீக்கும்
அமைதியிதனால் தாக்கும்

துன்பம் வந்தால் துவழும்
துயர்கள் நீங்கின் மகிழும்
இன்பம் தேடி அலையும்
இழப்பு நேர்ந்தால் புலம்பும்

உழைத்து செல்வம் பிடிக்கும்
உண்மையிங்கு நடிக்கும்
அழைத்துச் சொன்னால் ஒடிக்கும்
அறிவைக் கூறின் கடிக்கும்

உலகின் வாழ்வையுவக்கும்
உடையோன் நினைப்பை மறக்கும்
கலகம் கண்டால் பதறும்
காப்போனருளை மறக்கும்!


 

காத்திருக்கிறேனடி

இரவின் தனிமையில்
உன் நினைவுகளால்
நான் தவிக்கும் தவிப்பு
புரியாமல் - நீ
அமைதியாக தூங்குகிறாயே

எப்போது தான் உன்
நினைவுகளுக்கு உயிர்
கொடுக்கப் போகிறாய்
காத்திருக்கிறேனடி...


 

ஒழுக்கமும் புகழ்ச்சியும்

கண்களைப்
போன்றது ஒழுக்கம்
புகழ்ச்சியை
போன்றது இமை.

இமையை
இமயமாக
எண்ணுகின்றோம்
கண்களை

கவனிப்பதே
இல்லை.

அழகினை
அதிகரிப்பதே
கண்கள்தான்
கண்கள் இல்லாத
வெறுமையான
இமையால் காட்சிகளைக்
காண முடியாது.


ரோல் மொடல

கையில் “செல்போன்”
பையில் “ஹெட்போன்”
சிகையில் “பெகம்” (கோர்ன்)
கால்களில் “பீச்சிலீப்பர்ஸ்”...!!
“பர்பியூம்” குளித்து...
“பியூட்டி” கூட்டி...
பெச்சான “ட்ரவுஸருக்கு”
“டச்மீ”... “கிஸ்மி”...”லவ்மீ”... யென
“ஹொட்டான” வாசகம் தாங்கிய
“மெச்சான” டீ-சர்ட் போட்டு...
கூலிங் கிளாஸை ஸ்ட்டைலாய்
நெற்றியில் இட்டு,
காதொன்றில் தோடு மாட்டி...
கழுத்திலே கயிற்றுமாலை கனத்திட...
கடன் வாங்கிய பைக்கிள் ஏறி...
“டமிங்கிலம்” பேசிப் பேசி....
டவுன் முழுதும் “ஹைஸ்பீடில்”
“கலர்ஸ்” காட்டி ரவுண்(டு) வரும்
“ஹேண்ட்சம் போயா” - நீ?
இன்றைய “யூத் சொசைட்டியின்”
கனவு நாயகன் “நம்பர்வன்”
“ரோல் மொடல்” நீயேதான்!!


 

வாழ்வினில் பசுமை காட்டு!

‘புத்திரி மார்கள் மூவர்’
பூவையும் நானும் ‘ஐவர்’
சத்திலா வாழ்க்கை யாகி
சஞ்சலம் காணு கின்றோம்!
உத்தியோ கத்தை நானும்
உதாசீனம் செய்த தாலே
“உத்தமி உழைப்பில் மட்டும்
ஓடுமா வாழ்க்கை வண்டி!”

வட்டிக்குக் காசு வாங்கி
வாழ்வெலாம் வட்டி கட்டி
“ஒட்டியே உடலம் சோர்ந்து
ஓடாகிப் போனாள் இல்லாள்!”
கட்டிய வீடும், எங்கள்
காணியும் அடகில் இந்தக்-
கட்டத்தை தாண்டிச் செல்லும்
வழிவகை தெரிய வில்லை!

சுற்றத்தார் பணம் படைத்து
“சுவீஸிலே” வளமாய் உள்ளார்!
இற்றையோ டவர்கள் அங்கே
இருக்கிறார் இருப தாண்டு!
பெற்றவர் சொத்தும் அன்னார்
பெயரிலே இருப்ப தாலே,
விற்றுமோ கடனைத் தீர்க்க-
வியலாத நிலையு மாச்சு!

கையிலே காசிருந்தால்
காசினி எங்கள் பக்கம்!
“மெய்யான பாசம் இங்கே
மேலான பணத்தின் மீதே!”
பொய்யையும் புரட்டை யுந்தான்
போற்றிடும் மனிதர் தாமே,
வையகம் வாழ்வ தாலே
வாய்மைக்கு வெற்றி யில்லை!

பாரினைப் படைத்து ஆளும்
பரமனே எந்தன் வாழ்வின்-
காரிருள் கலையச் செய்து
காலையாய் ஒளியைப் பாய்ச்சு!
வேலையை விட்டொ துங்கி,
விரக்தியில் வாடும் எந்தன்-
“பாலையாம் வாழ்வை மாற்றிப்
பசுமையைப் படரச் செய்வாய்”


 

முன்னேறு!

இளமைப் பருவம் துடிப்பானது
எதையும் செய்ய இயல்பானது
அளவாய் அறிவை பயனிட்டு
ஆற்றல் மேவி முன்னேறு!

காமப்பித்தில் பெண்தேடி
காதல் மாயையில் வீழாதே
சாமக் கோழி கூவிட முன்
சபலம் நீங்கி இறைவணங்கு!

அன்னை தந்தை சொல்கேளு
ஆசான் குருவை அடிமைகொள்
பண்பில் மிகைத்த இளைஞனாக
பணிந்து வாழக் கற்றுக் கொள்!

அழகிய இதழாம் தினகரன் போல்
ஆயிரம் ஏடுகள் நிறையவுண்டு
உளத்தில் ஏற்று படிப்பினை செய்
உன்னை வெல்ல எவருமிலை!

பித்தலாட்டம் இனி வேண்டாம்
பிழைக்கும் காலம் இளமையது
நித்த மிந்தக் கொள்கைதனை
நெஞ்சில்வைத்து முன்னேறு!


 

என் ஆசான்

சமுதாய மேம்பாட்டுக்காக
மழையென்றும் வெயிலென்றும்
இரவென்றும் பகலென்றும்
பாராமல்
கல்வி கற்றுத் தருபவரே
என் ஆசான்!

தட்சணைக்காய் அல்லாமல்
தன் நலம் கருதாமல்
தரணிக்காய் தன்னை
அர்ப்பணிப்பவரே
என் ஆசான்

காலத்தால் அழியாத கல்வி
கள்வர்களால் திருடப்படாத கல்வி
வெள்ளத்தால் அழியாத கல்வி
என்றெல்லாம் போற்றப்படும்
கல்வியை
கற்றுத் தருபவரே
என் ஆசான்

எங்கெங்கும் கல்விச் சுடரை
ஏற்றிவைத்து
எத் திசையெங்கும் வெற்றிக்கொடி
நாட்டியவரே
என் ஆசான்


 

பிரியாவிடை நாள்!

என்னிடம் இருந்து
எல்லாவற்றையும்
பறித்துக் கொண்ட இறைவா
கண்ணீரை மட்டும் ஏன்
விட்டு வைத்தாய்!

என்னவளே நான்
ஒரு ரகசியம்
சொல்கிறேன் யாரிடமும்
சொல்லிவிடாதே
நீ என் உயிர் என்பதை,
உன் பாதச் சுவடுகள்
பட்ட மண்ணை

எடுத்து
பத்திரப்படுத்தியுள்ளேன்
உன்னோடு வாழாவிட்டால்
இம் மண்ணோடு வாழ்வேன்
நான் மண்ணோடு மண்ணாக
போகும் வரை,

என்னுயிரே நீ என்னைவிட்டு
நிரந்தரமாக பிரியும் நாள்
எனக்கும் என் வாழ்வுக்கும்
பிரியாவிடை நாள்


சிரேஷ்ட பிரஜை

உறவுகளின் முதிர்வில்
மறந்து போய்
மறைக்கப்பட்டுள்ள
நான்- ஒரு
சுவடுகள் உள்ள கிழடு!

காலவரையறையின்றி
முதியோர் இல்லத்தின்
காற்றுப் புகாத
கற்சுவர் அறையினுள்
முடங்கிக் கிடக்கிறேன்
ஆயுட்கைதியாய்

என் முகத்தில்
மொய்க்கும் ஈயைக்கூட
விரட்ட முடியாத
கவலைமிகு நிலைமை!
பிள்ளைகளை
பெற்றெடுத்து
தினமும்
என் முதுகில்
உப்பு மூட்டை சமந்த
பாவத்திற்கான
தண்டனையாய்

தண்டவாளத்தின் மீது
வைத்த தலை-
என் கதை1

பலசரக்குக் கடையின்
பட்டியலாய்
நீண்டுபோகும்
வகை வகையான
பிணிகள்
அணிகலன்களாய்
அலங்கரிக்கும் - இந்த
அநாதரவான அப்பாவை!

என்
படுக்கையறையும்
கழிவறையும்
ஒன்றான - இந்த
வயோதிபர் இல்லத்தின்
பணியாளர்களுக்கு
நான்
ஒரு சனியன் - இன்று!

நீ
அழகாய்
பெயர் சூட்டியழைக்கும்
உன்
வீட்டின்
நாய்க்குட்டிக்குக் கூட
சொகுசான கொட்டிலும்
மூவேளை ஆகாரமுமென
கேள்விப் பட்டேன்!

என்
இறுதிச் சடங்குக்கு
வராது விட்டாலும் - அதனை
நடாத்த
கூலிக்கு
மலிவான மலர்ச்சாலை
தேடி வைத்துக் கொள்
அத்துடன்
கலர்ப் படத்துடன்
கண்ணீர் அஞ்சலி
விளம்பரம் பிரசுரித்து
நீ- வெளிநாட்டில்
இருப்பதை ஊரில் உள்ள
உறவுகளுக்குச்
சொல்லிவை!

சாக்கடைக்குள்
சாகத் துடித்துக்
கொண்டிருந்தாலும்
உங்கள்
பிறப்பு
அத்தாட்சிப்பத்திரத்தில்
என்றும் நறுமணம்
வீசிக் கொண்டிருப்பேன்!
அனைத்துமே
அற்றுப் போனாலும்
அரசின் பார்வையில்
நானும் ஒரு
சிரேஷ்ட பிரஜை தான்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.