புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
கூட்டமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் தமிழரசு கட்சி

புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் சமரசம் காண முயற்சி;

கூட்டமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் தமிழரசு கட்சி

பதிவு, சின்னம் விடயத்தில் கூட்டுக்கட்சிகள் விடாப்பிடி

தமிழ்க்கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலு வாக எழுந்துள்ள நிலையில் அந்தக் கூட்டமைப்பில் பிரதான பாத்திரம் வகிக்கும் தமிழரசுக் கட்சி பதிவு செய்யும் விடயத்தில் முரண்பட்டு நிற்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் தமது விடாப்பிடியான போக்கைத் தளர்த்தாவிட்டால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் தவிர்க்க முடி யாததாகி விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்க்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், செல்வம் அடைக் கலநாதன் தலைமையிலான ரெலோ, ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சித்தார் த்தன் தலைமையிலான புளொட் ஆகிய நான்கு கட்சிகளும் தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தி கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளன. எனினும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் பதிவு செய்வதில் நாட்டம் கொள்ளாது கட்சிகளுக்குள்ளே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடலாம் எனக் கூறுகின்றனர். தமிழரசுக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியான சுமந்திரன் எம்.பியும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு தமது கட்சி தயாரெனக் கூறியுள்ளார். இந்த நிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கையென்பது ஒரு சட்டரீதியான, வலுவான அமைப்பாக கூட்டமைப்பை பரிணமிக்க உதவாதென ஏனைய 4 கட்சிகளும் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பில் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டுமென்ற ஒரேயொரு காரணத்துக்காகவே தமிழரசுக் கட்சி பதிவு செய்வதில் பின்னடிக்கின்றது என அக்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு தமிழ் மக்கள் பழக்கப்பட்டு விட்டனரென்றும் கூட்டமைப்பை பதிவு செய்வதால் பல்வேறு இடர்கள் ஏற்பட வாய்ப்புண்டு எனவும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் தமக்கு சார்பான வாதங்களை முன்வைத்துள்ளனர்.

இதேநேரம் தமிழரசுக் கட்சி 1972ஆம் ஆண்டில் செயலிழந்துவிட்டதெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான உதயசூரியனுக்கே வாக்களித்து வந்ததை நினைவுபடுத்தும் தமிழ்க் கட்சிப் பிரமுகர் ஒருவர், தமிழரசுக் கட்சியின் ‘வீட்டுச்சின்ன வாதம்’ நகைப்புக்கிடமானது என்றார்.

புலிகள் கோலோச்சிய காலப்பகுதியில் தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதே தமிழ்க்கூட்டமைப்பு. இந்தக் கட்சிகளின் தலைவர்களை வன்னிக்கு அழைத்து புலிகளின் தலைவர் அவர்களுடன் பேச்சு நடத்தி கூட்டமைப்பாக இயங்குவதென முடிவு செய்யப்பட்டமையை வரலாறு அறியும்.

அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த ஆனந்த சங்கரியை கூட்டமைப்பிலிருந்து வெளியே போடுமாறு புலிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கிணங்கவே அப்போது சங்கரி கூட்டமைப்பில் சங்கரி இணைத்துக்கொள்ளப்படவில்லை. எனினும் கூட்டணியின் தலைவர் நீதிமன்றம் போனதன் விளைவாக அந்தக் கட்சி, ஆனந்தசங்கரியின் கைக்கு போய்ச்சேர்ந்தது.

எனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் கைநழுவி போனதனாலேயே தமிழ்க் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை தேர்தலில் பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டதாக அந்தப் பிரமுகர் மேலும் சுட்டிக்காட்டினர். 34 வருடங்களுக்குப் பிறகே தமிழ்க் கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தைப் பயன்படுத்தி வருகின்றது. எனவே தமிழ் மக்கள் இதற்குப் பழக்கப்பட்டு விட்டனரெனக் கூறுவது வேடிக்கையானதெனவும் கல்வியிலே உயர்ந்த சமூகமான தமிழ் மக்களின் அறிவைக் கேவலப்படுத்தும், கொச்சைப்படுத்தும் கூற்றே இதுவெனவும் அந்தத் தமிழ்ப் பிரமுகர் வேதனைப்பட்டார்.

இது இவ்விதமிருக்க, பதிவுப்பிரச்சினை இவ்வாறு விசுவரூபமெடுத்திருக்கும் சூழ்நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கச் செல்லத் தயாராயுள்ள தமிழ்க் கூட்டமைப்புக் குழுவில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இடம்பெறுவாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்தக் குழுவில் நால்வரே இடம்பெறுவரென ஆங்கில ஊடகமொன்றுக்கு தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் கூட்டமைப்பை பதிவு செய்வதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி விடாப்பிடியாக நிற்பதால், அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கு மிடையில் முரண்பாடுகள் ஆழமாக வேரூன்றிவிட்டன.

2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்புக்கு அதன் தலைவராக தமிழரசுக்கட்சி சம்பந்தன் எம்.பியும் செயலாளராக தமிழரசுக்கட்சி மாவை சேனாதிராஜா எம்.பியும் பிரதித்தலைவராக அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி தலைவர் விநாயகமூர்த்தி எம்.பியும், பிரதிச் செயலாளர்களாக ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா செல்லும் தூதுக்குழுவில் எம்பிக்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இடம்பெறும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாகக் கூறப்படுகின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் தமிழ்க் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்ட சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சங்கரி தலைமையிலான கூட்டணி ஆகிய கட்சிகளுடன் அரசியல் ரீதியிலான எத்தகைய பேச்சுக்களையோ, தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களையோ தமிழரசுக் கட்சி நடத்துவதில்லையென்ற ஆதங்கம் அந்த இரு தலைவர்களிடமும் இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலை தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்லவென தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.