புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

நெஞ்சுக்குள் நீ

நெஞ்சுக்குள் நீ

- வீ.எம்.எலிசபெத் -

நெஞ்சுக்குள் உனை நினைத்தே - நான்
நெருஞ்சி முள்ளுக்குள் கால் வைத்தேன் - நீ
கொஞ்சம் வீசும் பார்வைக்கே - நான்
பஞ்ச யுகம் வாழ்ந்து விட்டேன் !
இதய நாயகா வாழ்வே நீயடா!

கண்களி ரண்டும் துயில் தொலைக்க
கனவுக் குள்ளே நீ கானம் படிக்க
காண வருவாயோ? என் னிதயந் துடிக்க - இல்லை
கண்ணீர் தருவாயோ? கன்னி இறக்க !
காதலனே என் காவிய நாயகனே!

நின் பார்வைக்குள் பரிதவித்தேன் - தினம்
வார்த்தை யின்றியே தவித்தேன்!- உன்
கண்களிலே நிதம் மூழ்கி யெழுந்தேன்! -உன்
திறந்திடாத இதயங் கண்டு தினமு மரித்தேன்!

மூடிய நெஞ்சந் திறந்தி டெனக்கு! - என்
னாவி முடிந்திடு முன் கூறிடு வாக்கு! - மன
முருகுதே யுனை நினைத் திங்கு - மாதைப்
புரிந்திடாயோ!? ஒரு சொல் மொழிந்திடாயோ?!

ஆயிரம்பே ருனக்கு அருகிலிருக்கலாம் - உன்
ஆவியாய் நானிருக்கவே விரும்புகிறேன்
அணங்கென்ற நாணுடன் - நான்
அமைதியா யிருக்கிறேன் அன்பே
அன்புட னுன்னுதடு திறக்கும் வரை!


என் தேவதை

- எஸ். சிபானி முஹம்மட் -

என் உள்ளத்தின்
உணர்வுகளில்
ஊற்றெடுத்து - உருவம்
பெற்று...
உயிர் பெற்று
பிறந்தவளோ...!

கார் நிலவில் கண்ட
வெள்ளை நிற
முல்லை உன்னிடம் - உள்ளமது
மண்டியிட்டு மன்றாடியது...
சண்டையிட்டு திண்டாடியது...

உணர்கிறேன்
உணர்வில் சில
மாற்றங்களை
உனைக்கண்ட பின்
சில நாட்களாய்...!
இதயத்தில் - ஓர்
இடமாற்றம்

புழக்க வழக்கங்களில்
பல
நிலைமாற்றம்....!
கரு நிற மீன்களான - உன்
இரு விழிகளின்
ஒரு கணப்
பார்வையில்
பனி மூட்டம் - துளிர்க்கிறது
என் விழிகளில்...!

உயிருள்ள தங்கச்சிலை
உனைக்காணத்தானா...?
அத்தனை வருசங்களும்
அலைந்து திரிந்தேனா...?


எழில்
தவழும் எழுத்துக்களை
என்னேரமும் எழுதவே!
அவள்
பஞ்சி விரல்களை
கெஞ்சி கேட்கின்றன...!
பேனைகளும் காகிதங்களும்...!

பார்த்தது முதல்
பார்க்காமல் இருக்க முடியவில்லை
பாவையவளை
பதைக்கிறது உள்ளம்...!

என்
மனப்போராட்டம்
அவள் உணர்வில் கலக்குமா...?
என் மனப்பகிர்வு - அதை
மாது
அவள் கனவிலேனும்
காண்பாளா...?

என் தேவைக்காக
என்னுயிர் கடைசிவரை காத்திருக்கும்
அவள்
அன்புக்காக என் மனம்
என்றென்றும் பூத்திருக்கும்...!


சேற்று வாசிகள்

- ஜே. வஹாப்தீன் -

வானத்து நிலவுக்கு கரிபூச
ஏணி சாத்துவதாரோ?
மானத்துப் புறாக்களுக்கு
கரிபூச நினைக்கும்
காக்கைகள் தானோ?

வானவில்லைப் பழித்தக்
கனைப்பதாரோ?
முல்லைப் பூக்களைப் பறித்து
புழுதியில் வீச நினைப்பதாரோ?
முட்டைகளை
அம்மிக் கற்களால் உடைத்த
வீரர்களுக்கு
பதக்கம் வழங்குவதாரோ?

கூவும் குயில்களுக்கு
பருந்து என்று பெயர்வைக்கும்
கழுகு யாரோ?
மான்களைப் பழிக்கும்
நரிகளுக்கு
விருது வழங்குவதாரோ?

அப்பாவி மீன்களைச் சப்பும்
முதலைகளுக்கு
சொர்க்கம் வழங்குவதாரோ?
முத்துக் கற்களை
உப்புக் கற்களென்று
உடைப்பது யாரோ?
உப்புக் கற்களை
முத்துக் கற்களென்று
படைப்பது யாரோ?

ஊற்றெடுத்து
உலா வரும் நதியில்
குப்பை கொட்டி விட்டு
கிசு கிசுப்பதாரோ?
குப்பை கரையொதுங்கி
சப்பை யானதும்
பிசுபிசுப்பதாரோ?

காற்றை
கடித்துப் சப்ப முடியாது
ஆற்றை
பற்றவைக்கவும் முடியாது
சேற்றை அள்ளிக்குடிப்பவர்களுக்கு
இது புரியாது.


சிறைக்கைதி

- அஷ்ரபா அலிறிஷாப் -

காலத்தின் பிடியில்
நானும் ஒரு
சிறைக் கைதி...

இரும்பு வேலிகள்
எனைச் சுற்றி
இல்லை
ஆனாலும்
ஏதோ ஒன்றிற்குள்
அடைபட்டிருக்கிறேன்....

சுதந்திரம்
மறுக்கப்படவில்லை
எனக்கு
ஆனாலும்
எதற்கோ
அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன்....

இப்படித்தான்
காலத்தின் பிடியில்
நானும் ஒரு
சிறைக்கைதி.....!
 


கவிதை நீதான்!

- கவிஞர் அ.கெளரிதாசன் -

என்னத்தை எழுதுவது என்றே நானும்
எனக்குள்ளே சிந்திக்கும் போதிலுந்தன்
கன்னத்தைக் கண்டேனே கன்னிமானே
கவினென்று ஆகிவிட்டேன் கவிதை நீதான்!

முன்னழகு செவ்விளநீர் கோலம்காட்டும்
முகவழகு முழுநிலவை நினைவு ஊட்டும்
கண்ணழகு ஒருசோடிக் கயல்களாகும்
கன்னியுன்னால் கற்பனைகள் விண்ணுக்கேகும்!

கையிரண்டும் காந்தளுடன் போட்டிபோடும்
கவின்விரல்கள் வெண்டியினைத் தோற்கடிக்கும்
மைபடர்ந்த புருவங்கள் கணைகள் ஆகும்
மல்லிகையின் தோற்றமடி வரிசைப் பற்கள்!

சந்தனத்தில் வார்த்தெடுத்த அழகுத்தேகம்
சதிராடும் கொடியிடைக்கு உவமையேது?
எந்தனுக்கு நீமனைவியாக வாய்த்தால்,
எழில்மயிலே முதலிரவே எந்தநாளும்!


நன்றே ஞானம் அடைவாரோ!

- மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் -

இனத்தின் பெயரால் பாமரரை
இங்கே தவறாய் வழி நடத்தி
பணத்தை அடையும் பாங்குடைய
பிழையாம் தலைமை தொலையாதோ!

உரிமை என்ற கோசத்தில்
உறங்கிக் கிடக்கும் சுயநலத்தை
அறியும் ஆற்றல் பாமரர்க்கு
அதிக விரைவில் கிட்டாதோ!

விடுதலை என்ற வார்த்தையிலே
வீணே முடிவை எடுத்திடுவோர்
விடிவைக் காணும் நல்லறிவை
விரைவாய் இங்கே பெறுவாரோ!

உணர்ச்சி என்ற ஒன்றுக்கு
உரிய அடிமை என்றாகி
தினமும் தீங்காய்ச் சிந்திப்போர்
திருந்தும் காலம் மலராதோ!

உண்மைத் தன்மை உணர்ந்தோராய்
உன்னத முடிவு எடுப்போராய்
மண்ணில் அறியா மக்களெலாம்
மகிமை நிலையை அடையாரோ!

சிந்தைக் இடமே கொடுத்தின்று
சிறந்த தீர்வை எடுப்போராய்
இந்தப் பாமர மக்களெலாம்
இங்கே ஆகிட மாட்டாரோ!

தலைமைத் தனத்தின் திருட்டெல்லாம்
தவிடு பொடியாய் ஆவதற்கு
நிலத்தில் இந்தப் பாமரர்கள்
நன்றே ஞானம் அடைவாரோ!

 


என்னை என்னுடன் வைக்கின்றேன்!

- காத்தான்குடி ஜெமஸ்த் -

உன்னை
விழிக்கின்றேன்,
என்னை
தடவித்தாலாட்டி
தூங்கப்போடுகின்றேன்....

உன்னை
தொடுகின்றேன்,
என்னை
தூசுதட்டி
தூரவைக்கின்றேன்....

உன்னை
அழைக்கின்றேன்,
என்னை
பெயரறுத்து
வெறுமையாக்குகின்றேன்...

உன்னை
நினைக்கின்றேன்,
என்னை
இல்லாதொழித்து
மயக்கி மறக்கின்றேன்....

உன்னை
கற்கின்றேன்,
என்னை
கற்களில் செதுக்கிய
சொற்களாக்குகின்றேன்....

உன்னை
பூஜிக்கின்றேன்,
என்னை
பூஜைக்கு பூத்த
பூவாக்குகின்றேன்.....

உன்னை
தொடர்கின்றேன்,
என்னை
முற்றுப்புள்ளிவைத்து
முடித்துவைக்கின்றேன்....

உன்னை
தேடுகின்றேன்,
என்னை
கண்டுகொள்ளாது
களவு கொடுக்கின்றேன்....

உன்னை
அணைக்கின்றேன்,
என்னை, இனி
அணைக்க முடியாதவாறு
எரிக்கின்றேன்.............

உன்னை
வளர்க்கின்றேன்,
என்னை
வேர்கொடுத்திட
விதைக்கின்றேன்.........

உன்னை
மறக்கின்றேன்,
அது நிகழ்ந்த
அடுத்தகணம், நான்
அகாலமாகின்றேன்..........

உன்னை
காதலிக்கின்றேன்,
அதற்காக மட்டும்
என்னை என்னுடன்
மிச்சம் வைக்கின்றேன்.........


பரிசு

- எஸ்.சிராஜுதீன் -

சாதல் கொண்ட கவலையதால்
காலம் எல்லாம் வாடுகிறோம்
காதல் முடிவு பெற்றதனால்
சாவை விலைக்கு வாங்குகிறோம்

போதை கண்ட உடலால் - நாம்
பேயாய் தினமும் அலைகிறோம்
பேதை இவள் வரவால் - நம்
பெற்றோர்களையே இழந்திட்டோம்

பெண்ணும் பொன்னும் மோகத்தில்
இன்னும் இழிநிலை பெற்றுவிட்டோம்
மண்ணில் திருந்த முடியாவிடில்
மறைவைக் காண்பதே பரிசாகும்


எங்கள் ஊர்

- மூதூர் ஜாபீர் -

மகாவிலி கற்கை சங்கமிக்கும் - பசும்
மதுரம் நிறைந்த மாநிலமாம்,
செந் நெல்விளைந்து செழித்தோங்கும் - எங்கள்
செல்வம் நிறைந்த மூதூராம்,

பாலும் தேனும் கனிவகையும் - உயர்
முத்தும், வளையும், தானியமும்,
பொன்னாய் கொழிக்கும் நன்நிலத்தை - அருள்
வளமாய்க் கொண்ட மூதூராம்

தமிழும் மணமும் சேர்ந்ததுபோல் - நித்தம்
தரணி வாழ்வில் ஒற்றுமையாய்,
எல்லா மக்களும் இன்பமுடன் - இனிதே
வாழும் ஊரும் மூதூராம்

மண்ணின் மகிமை தெரிந்தவரும் - தாய்
மொழியில் பற்றுக்கொண்டவரும்,
அறிஞர் கலைஞர் பாவலரும் - பேர்
அருளாய் ஈன்ற மூதூராம்.

வேறாய் சாதிப் பிளவின்றி - நாளும்
கல்விக்காக தம் வாழ்வை
கரைத்து வாழும் நல்லோரை - வரமாய்
ஈந்த ஊரும் மூதூராம்.


ஏனென்று புரியவில்லை!

- சந்திரசேகரன் சசிதரன் -

புன்னகை என்ற எழிற் போர்வைக்குள்ளே
பொல்லாத விஷமது மறைந்திருக்கும்!
இன்மொழி பகர்ந்திடும் இதயத்துள்ளே
இருளென வஞ்சமும் நிறைந்திருக்கும்!

முகத்துக்கு நேரே புகழ்பாடும் மனிதர்
முள்ளை இறைப்பார் திரை மறைவில்!
சுகம் கண்டு சூழ்கின்ற சுற்றமெலாம்
சோதனை வேளையில் ஓடிடும் தொலைவில்!

தேவைகள் தீர்ப்பதற்காய்(த்) தேன்மொழி நாவில்;
தேள்களும், அரவமும் மனு உருவில் இப்பூவில்!
பூவைச் சூட்டி, புகழுரை சூடுதல் வெறும் பொய்ம்மை!
புன்மை நெஞ்சத்தோர் நேசமெலாம் கற்பூர பொம்மை!

தண்புனல் வரண்டாலும் எழில்
தாமரை தடாகம் நீங்கிடுமோ?
பொன்தளிர் உதிர்ந்து விருட்சம்
பொற்பிழந்துபோன பின்னும், நறும்
பூக்கள் கிளைவிட்டுப் போய்விடுமோ?

அன்பினால் மரணத்தையும் இணையொடு
அணைத்தே ஏற்றிடுமாம் அன்றில்பட்சி!
மன்பதையாவினுக்கும் ஈண்டு ஈசன்
மலர்க்கோலமாய் வைத்தனன் நல்மாட்சி!

சிந்தனைத்திறனோடு, செயலாற்றல்,
சீர்மிகும் மொழிவளம், பகுத்தறிவு,
விந்தையாம் சாதனை சமைத்திடும், நுண்மான்
வியன்மதி கொண்ட மனிதர் மட்டும்

மனமதை வனமாக்கிப் பகைமை பூண்டு
மண்டபத்தே நலன்சிதைத்து, விலங்கும் பழித்திடவே
இனத்தையே கொன்று சோதரர் சோரியிற்களித்திடும்
இழிநிலை ஏனென்று புரியவில்லை!


அண்டப்புழுகன்

- ரோஷான் ஏ.ஜிப்ரி -

முன்பொருநாள் கண்ட அதேபோலிவுடன் ஊர்.
மேடை, தோரணம், கொடியென
இம்முறையும் தெருத்தெருவாய்
மலிந்துகிடந்தது அவனது பெயர்
வான் பிளக்கும் பட்டாசு வெடிகள்,
அண்ணாவியர்களின் பொல்லடி,
பாவாக்களின் ரப்பான்மேளம்,
பொண்டுகள் குலவையென
நாட்டின் பெரும் தியாகியைப்போல்
வரவழைக்கப்பட்டான்.
விளம்பரப்பலகைபோல் முன்வரிசையில்,
ஊரின் முதிர்ந்த முகங்கள்
களைகட்டியிருந்தது மேடை,
பேச ஆரம்பித்தசிலர்.....
ஏழேட்டுப்பேரை கழுவி குடித்தனர்.
அந்தப் பகுதியில் அடித்த காற்றில் ஒரு சாதி செடிநாத்தம்,
சுவாசிக்க முடியாமலிருந்தது.
இப்போது அவன் முறை
கரகோசத்தோடு பேசஎழுந்தான்
சூனியக்காரர்களின் வித்தைகள் சில தெரியுமவனுக்கு
உலகமகா பொய்களை சாக்கு, சாக்காய் அவிழ்த்து விட்டான்
மேடையிலிருந்து இறங்கி
தொண்டர்களின் காதுகளிலேறி உட்காரும்படி ஏவி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.