புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்

அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் அதன் ஆறு ஆண்டுகால சேவையைப் பூர்த்தி செய்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி விசேட நிகழ்வு எதிர்வரும் 14-10-2012ல் மன்றத்தின் தலைவர் ரீ. தனராஜ் தலைமையில் விவேகானந்தா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலையக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் பாராட்டத்தக்கவகையில் சிறப்பாக இயங்கி வருகின்றது.

மன்றத்தின் சேவை மலையகத்தின் பல பகுதிகளிலும் வியாபித்து அம்மக்கள் மத்தியில் ஒரு உன்னத இடத்தைப் பிடித்துள்ளதென்றால் மிகையாகாது. மன்றம் ஆம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தியடைந்து ஏழாவது ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது. முடிவடைந்த அதன் ஆறு ஆண்டுகாலப் பகுதியில் வறுமைநிலையில் இருந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலகனவை நனவாக்கி வருகிறது. புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்குகள், பரீட்சை வழிகாட்டி பயிற்சி, ஜீ.சீ.ஈ சா/த மற்றும் உ/த மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பயிற்சிகள், வழிகாட்டிகள் என பட்டியலிட்டுக் குறிப்பிடலாம். சரியான தகவல்களையும், விபரங்களையும், திரட்டி நன்கு திட்டமிட்டு சிறந்த முகாமைத்துவத்துடன் மிகவும் தெளிவான முறையில் அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கஷ்டப் பிரதேசங்களில் வளங்கல் குறைந்து மிகவும் பின் தங்கிய நிலையில் இயங்கிவரும் பாடசாலைகளைக் கண்டறிந்து விசேட கவனம் செலுத்தி அங்கு கல்வி கற்று வரும் வறுமை நிலையில் உள்ள பிள்ளைகள் கல்வியைத் தொடர புத்தகப் பைகள், அப்பியாசக் கொப்பிகள் பாதணிகள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றது.

இவ்வாறான திட்டத்தினால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியுடன் தமது கடமையை சரியாகவும், நேர்மையாகவும் செய்ய தூண்டப்பட்டு வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்கு மட்டுமன்றி இந்திய வம்சாவளி மக்கள் எங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றார்களோ அங்கெல்லாம் பிள்ளைகளின் நலன் கருதி கல்விக்கு கைகொடுத்துதவி வருகின்றது. மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணியானது ஏழை பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

ஒருமனிதன் தான் உழைக்கும் ஊதியத்தின் ஒரு பகுதியை ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்த வேண்டும். அந்த கைங்கரியத்தை மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தினர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமானது வசதிபடைத்த செல்வந்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பல்ல. அதன் அங்கத்தவர்களாக இருப்போரும் கூட பணம், மற்றும் வசதிவாய்ப்பு உடையவர்கல்ல. தலைநகரில் தொழில் செய்து வரும் மலையக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் உழைப்பின் மூலம் இயங்கிவரும் ஒரு அமைப்பாகும். தற்பொழுது 1500க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டுள்ளதுடன் மேலும் பலர் இணைந்து கொண்டு அங்கத்துவத்தைப் பெற்று வருகின்றனர். தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியை ஒவ்வொரு மாதமும் செலுத்தும் சந்தா பணத்தின் மூலம் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உறுப்பினர்களுக்கிடையேயுள்ள ஒற்றுமை கட்டுக்கோப்பு, உற்சாகம், ஆர்வம், செயல் திட்டம் அத்தனையுமே மன்றத்தின் நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்ற உறுதுணையாக இருந்து வருகின்றள. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை தினமாக இருக்கின்றபோதிலும் கூட தமது சொந்த அலுவல்களைப் பொருட்படுத்தாது அந்த ஒரு தினத்திலும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மலையகப் பகுதிகளுக்குச் சென்று தமது பணியை நிறைவேற்றுவதில் அக்கறையும், ஆர்வமும் காட்டிவருகின்றனர்.

மலையகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துமுகமாக புத்திஜீவிகள், கல்விமான்கள், தொழில் முயற்சியாளர்கள், உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிக்கப்பட்ட இலங்கைவாழ் இந்திய தமிழர் கல்விப் பேரவை கூட குறுகிய காலத்துள் அஸ்தமானமாகிவிட்ட போதிலும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தோன்ற கடந்த ஆறு ஆண்டுகாலத்தில் அளப்பரிய சேவையை வழங்கியுள்ளமையை பாராட்டாமல் இருக்கமுடியாது.

களுத்துறை மாவட்டத்தின் மிகவும் கஷ்டப் பிரதேசத்தில் இயங்கிவரும் எலதுல, அன்னாசிகல, கொடஹேன ஆகிய மூன்று பாடசாலைகளுக்கும் மன்றத்தின் உறுப்பினர்கள் அடங்கிய குழு அண்மையில் விஜயம் செய்து சுமார் மூன்று லட்ச ரூபா பெறுமதியான புத்தகப் பைகள், அப்பியாசக் கொப்பிகள் பாதணிகள் என்பனவற்றை வழங்கியது. மாணவர்கள் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் ம.க.அ.மன்ற உறுப்பினர்களுக்கு மகத்தான வரவேற்பளித்து உபசரித்து இவர்களின் சேவையைப் பாராட்டினர். இம்மூன்று பாடசாலைகளிலும் 34 மாணவர்களுடன் தரம் 5 வரையில் இயங்கிவரும் அன்னாசிகல தமிழ் வித்தியாலய சூழல், மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு அதிபர், ஆசிரியர்களின் அர்பணிப்பான சேவை பெற்றோரின் ஒத்துழைப்பு மன்றத்தினரை வெகுவாகக் கவர்ந்தது.

இங்கு உரையாற்றிய மன்றத்தின் செயலாளர் ஏ.எஸ். ஞானம் ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எமது மன்றத்தை பாவின் மூலம் வரவேற்று எம்மை மகிழ்ச்சியில் ஆழ்ந்திவிட்டார்கள். அதிபர், ஆசிரியர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பான சேவை மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும். மலையகப்பாடசாலை மாணவர்களின் கல்வியை உயர்த்து முகமாக புலமைப் பரிசில் பரீட்சைமுதல் உயர்கல்வி வரையில் அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க எமது மன்றம் எப்போதும் தயாராக உள்ளது. நாம் படிக்கும் காலத்தில் எங்களுக்கு யாரும் முன்வந்து இவ்வாறான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் இன்று உங்களுக்கு எம்மால் உதவ முடிந்துள்ளமையிட்டு பெருமிதமடைகின்றோம்.

எமது உழைப்பின் ஒரு பகுதியை ஒதுக்கி இந்த சேவையை வழங்கி வருகின்றோம் என்றார். இங்கு தடைப்பட்ட நிலையிலிருக்கும் அறநெறிப் பாடசாலையைத் தொடர்ந்து நடாத்த ஆலோசணைகளை வழங்கியதுடன் தேவையான உதவியைப் பெற்றுக் கொடுக்கவும் மன்றத்தினரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.சீ.எம். றிப்கான் உரையாற்று கையில், மலையகக்கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அறிவொளி வினாப்பத்திரம் எமக்குக் கிடைக்கப் பெற்றமை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பேருதவியாக அமைந்தது. மன்றத்தின் செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

எமது பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி முன் வந்து கற்றல் உபகரணங்கள் வழங்கியமை குறித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.