புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
மூவின மக்களும் இணைந்து வாழும் கிழக்கில் தமிழ் மகன் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லையே?

மூவின மக்களும் இணைந்து வாழும் கிழக்கில் தமிழ் மகன் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லையே?

கேள்வி: கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இடம்பெறவில்லை யென்ற ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றதே? மாகாண சபை உறுப்பினரான நீங்கள் இது பற்றி என்ன கூற விழைகிaர்கள்.

பதில்: தமிழ் மக்களுக்கு நடந்த ஒரு பெரிய அநியாயம் இது. கிழக்கு மாகாணத்தில் பெருமளவில் வாழும் தமிழ் மக்களின் சார்பாக அமைச்சரவையில் ஒரு தமிழ்மகன் இடம்பெறாமை எதிர்காலத்தில் இங்கு வாழும் மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களே அதிகம். அரசுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இன்று அது ஏமாற்றமாகியுள்ளது.

கேள்வி: முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவியை வழங்கியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாகக் கூறப்படுகின்றதே?

பதில்: இது பிள்ளையானின் தனிப்பட்ட ஒரு முடிவாக இருக்க நியாயமில்லை. அவர் தலைமைதாங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உயர்பீடம் எடுத்த முடிவுக்கு அவர் கட்டுப்பட்டிருக்கலாம். எனவே இது அவர்களின் கட்சி ரீதியான சொந்த முடிவு.

கேள்வி: எனினும் பிள்ளையானின் இந்த முடிவு தமிழ் மக்களைப் பாதித்துள்ளது என நீங்கள் கருதவில்லையா?

பதில்: அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இல்லாத குறை தமிழ் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அத்துடன் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களில் அமைச்சரவையில் அங்கம் வகிப்போருக்கு நிதி ஒதுக்கீடுகளை அல்லது விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்றபோது அது வெளிப்படையாக இருக்கப்போவதில்லையென்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. இதில் உண்மையும் இல்லாமலில்லை.

எனவே எதிர்காலத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை இது உருவாக்கும் என்பதே என் கருத்து. எனினும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளாமல் விட்டபின்னர் வேறு ஒரு தமிழருக்கு அந்தப்பதவி ஏன் வழங்கப்படவில்லையென்ற நியாயமான கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் விமர்சனத்துக்கும் நாம் ஆளாகி யுள்ளோம். பிள்ளையான், தான் இந்த நிலைப்பாட்டை எடுத்த பின்னர் உயர்மட்டங்களில் எவ்வாறான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார் என்பதை எங்களால் ஊகிக்க முடியாதுள்ளது. எனினும் அமைச்சரவையில் தமிழர் இடம்பெறாமை தூர நோக்கில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என நான் கருதுகின்றேன்.

கேள்வி: உங்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லையென்ற வருத்தம் உள்ளதா?

பதில்: இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. எனக்குத் தரவேண்டும் என்பதற்காக நான் இந்த விடயங்களைக் கூறவில்லை. யதார்த்தத்தை கூறுகின்றேன். தமிழ் மக்களின் மனக்குமுறல்களைக் கொட்டுகின்றேன்.

கேள்வி: அமைச்சரவையில் தமிழர் ஒருவர் உள்வாங்கப்படாமல் விட்டமைக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிaர்கள்? அரசாங்கத்தை நீங்கள் குற்றஞ்சாட்டுகின்aர்களா?

பதில்: அரசாங்கம் திறந்த மனதுடனேயே செயற்பட்டது. தமிழர் ஒருவரை உள்வாங்குவதில் ஜனாதிபதி அக்கறை கொண்டிருந்தமை எனக்கு தெரியும். எனினும் அரசுக்கு இந்த விடயத்தில் பல்வேறு சங்கடங்கள் இருந்தன.

கேள்வி: விளக்கமாக அதைக் கூறுங்களேன்?

பதில்: தமிழர் ஒருவருக்கு அமைச்சுப்பதவி கிடைக்காமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ்க் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகளே பாத்திரவாளிகள். தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து அரசாங்கக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைத்தது. முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில் தங்களுக்குள் பேரம் பேசி பதவிகளைப் பகிர்ந்து கொண்டதே தவிர தமிழ் மக்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை. தங்களுடைய இனத்தை மையப்படுத்தி தங்களுடைய அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கேள்வி: அமைச்சர்களான ஹக்கீம், றிசாத் முதல் அமைச்சர் நஜீப் முன்னாள் அமைச்சர் அமீர் அலி போன்றவர்கள் தமிழர் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறவேண்டுமெனக் கூறியிருந்தார்களே?

பதில்: உண்மை தான். இவர்கள் ஜனாதிபதியிடமும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமும் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தனர். எனினும் மு.காவைப் பொறுத்தவரையில் ஏனைய இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் போய்விடக் கூடாது என்ற நோக்கிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கலாம் என பேசப்படுகின்றது.

கேள்வி: எவ்வாறான நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும் தமிழர் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்பதில் முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்திய போதும் நீங்கள் அவர்களை ஏன் குற்றஞ்சாட்டுகின்aர்கள்?

பதில்: தமிழர் ஒருவர் இடம்பெறவேண்டுமென்று அவர்கள் அழுத்தம் கொடுத்தது உண்மைதான். எனினும் அவர்கள் தமக்குள்ள பங்கை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. தங்களுக்குள் விட்டுக்கொடுப்புச் செய்து தமிழ் மகனுக்கு பதவி வழங்கியிருக்கலாம். அது நடைபெறவில்லையே. அரசுடன் மிகவும் இறுக்கமான பேச்சுவார்த்தையிலும் பேரம்பேசலிலும் அவர்கள் இருந்ததனாலேயே இந்நிலை ஏற்பட்டது.

கடந்த 30 வருட கால யுத்தத்திற்கு முகம் கொடுத்து பாரிய இன்னல்களையும் துன்பங் களையும் பல இழப்புக்களையும் சந்தித்த தமிழ் மக்களுக்கு ஒரு பதவியையாவது கொடுத்து அவர்களை கெளரவப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு வரவில்லை. இதுதான் கவலையானது.

கேள்வி: நீங்கள் இப்போது எந்தக் கட்சியை சார்ந்தவர்?

பதில்: நான் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்கத்தவர். கடந்த மாகாண தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க சார்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பட்டியலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டேன்.

கேள்வி: நீங்கள் தோல்வியடைந்தபோதும் அரசாங்கம் உங்களுக்கு போனஸ் ஆசனம் வழங்கியுள்ளதே?

பதில்: இது ஜனாதிபதியின் பெருந்தன்மையையும் நல்லெண்ணத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. எனக்கு கிடைத்த வாக்குகள் 933 மட்டுமே. எனக்கு போனஸ் ஆசனம் வழங்கியமைக்காக வாக்களித்தவர்கள் சார்பில் நான் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன்.

கேள்வி: ஸ்ரீ.ல.சு.க முக்கிய பிரமுகரான பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மாகாண தமிழ் அமைச்சர் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லையா?

பதில்: அவரும் ஜனாதிபதி மற்றும் முக்கியஸ்தர்களுடன் பல தடவை பேசினார். எனினும் நான் முன்னர் கூறியது போன்று அரசாங்கம் மாகாண அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் ஓர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. “ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்” என்ற நிலை அரசுக்கு ஏற்பட்டது.

கேள்வி: கிழக்கு மாகாண சபையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் என நம்புகிaர்களா?

பதில்: “கழுதைக்கு உபதேசம் காதிலே ஊதினாலும் அபயக்குரலே குரல்” என்பர். இதுதான் தமிழ்க்கூட்டமைப்பின் நிலையும் கூட. கிழக்கு மாகாண சபையில் அந்தக் கட்சியில் 11 பேர் தெரிவு செய்யப்பட்டபோதும் மாகாண சபையில் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே உள்ளனர். அவர்கள் அரசுடன் இணைந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். அத்துடன் அபி விருத்தியையும் மேற்கொள்ளலாம். இந்த எண்ணம் அவர்களுக்கு கிஞ்சித்தும் இல்லை.

எதிர்க்கட்சி யென்றால் எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் தமது முதலாவது அமர்விலேயே வெளிப்படுத்தி விட்டனர். ‘திவிநெகும’ எனும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவவென கொண்டு வரப்படும் மனைப்பொருளாதார சட்டத்தையே அவர்கள் எதிர்த்ததிலிருந்து வீட்டிலே கத்தரிக்காய், மிளகாய் நாட்டுவதற்குக் கூட தாம் தடையாக இருப்போம் என்பதை உணர்த்தியுள்ளனர்.

கேள்வி: கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் மூவின மக்களையும் சமமாக நடத்துவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

பதில்: நிச்சயமாக, அவர் முதல்வர் பதவியைப் பெற் றவுடன் தெரிவித்த கருத்துக்களும் அவரது கடந்த கால மக்கள் பணியும் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. அவரது தந்தையார் அப்துல் மஜீத் எனது பாட்டனாரின் நெருங்கிய நண்பர். சிறுவயதிலேயே மர்ஹும் மஜீதை நான் அறிவேன். இன, மத பேதமற்றவர், அடக்கு முறைக்கு அடிபணியாதவர். எதற்கும் அஞ்சாதவர், எனினும் நஜீப் ஏ மஜீத் சாதுவானவராகவிருந்த போதும் மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ளார். தந்தையாரின் பெயரைக் களங்கப்படுத்தாத அரசியல்வாதி. அவர் தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார் என்று உறுதியாகக் கூறுகின்றேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.