நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
மலையகத்தில் கல்வி எழுச்சிபெற ஸ்ரீரங்கா MP நடவடிக்கை

''கல்விக்கு முதலிடம்''

மலையகத்தில் கல்வி எழுச்சிபெற ஸ்ரீரங்கா MP நடவடிக்கை

ஜீல்விக்கே முதன்மை என்ற திட்டத்துடனே நாம் செயற்பட்டு வருகிறோம். அதன்படி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவருகிறோம். இதற்குக் காரணம், பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றமையால் அவர்களுக்குப் போதிய வருமானம் இல்லை. அவர்களால் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் தமது பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை.

இதனால் மாணவர்களின் கல்வி பின்தங்கிய நிலையை அடைகிறது. இதற்குக் காரணம் மலையகக் கல்வி திட்டமிட்ட முறையில் நசுக்கப்பட்டு வருகின்றமையே ஆகும் என்று ஜெ.ஸ்ரீரங்கா எம்.பி தெரிவித்தார்.

முயலைப் பிடித்து காலை உடைத்துவிட்டு ஆடச் சொல்வதும், குயிலைப் பிடித்து கழுத்தை நெரித்துவிட்டு பாடச் சொல்வதும் போன்றே, மாணவர்களை வறுமைக்குள் தள்ளிவிட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்காமல் அவர்கள் படிக்கிறார்கள் இல்லை என்று புனையப்பட்டு வருகிறது.

அதேவேளை, ஏனைய மாவட்ட ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில், இங்குள்ள ஆசிரியர்களுக்கு நாம் நன்றி கூறியே ஆகவேண்டும். ஏனெனில், அவர்கள் பல மயில்கள் நடந்தே பாடசாலைக்கு வரவேண்டியுள்ளது. இந்த ஆசிரியர்கள் சிறுவராக இருந்தது முதல் தற்போது வரை அவர்கள் பயணிக்கும் வீதிகள் புனரமைக்கப்படவில்லை. இதனால், அவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியில்லை.

இதனை நாங்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்று, நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் காபட் போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இங்குள்ள இரு அரசியல்வாதிகள் மலையகத்தில் எத்தனையோ வீதிகள் செப்பனிடப்பட வேண்டிய நிலையுள்ளபோதும், மடக்கும்புர வீதியைச் செப்பனிடுவதற்குத் தம்மிடையே சண்டையிட்டுக்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிவேக வீதி அமைச்சூடாக புதிதாக மேற்கொள்ளப்படும் வீதிப்புனரமைப்புகளை நிறுத்தியுள்ளனர். இதுபோன்றே நுவரெலியா மாவட்டத்தில் அமையவிருந்த பல்கலைக்கழகமும் அவர்கள் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாடு காரணமாகத் தடுக்கப்பட்டது. அதேபோல கொத்மலையில் நீர்த்தேக்கம் அமைப்பதை ஒருவர் வரவேற்றார் மற்றவர் எதிர்த்தார். இந்நிலையில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கென சீமெந்துக்கான ஒப்பந்தத்தை ஒருவருக்கும் மற்றவருக்கு மண் போடுவதற்கான ஒப்பந்தமும் வழங்கப்பட்டது. இதையடுத்தே இருவரும் நீர்த்தேக்கம் அமைக்கச் சம்மதித்தனர். அதை தற்போது திறந்து வைக்கின்றனர்.

ஏனைய மாவட்டங்களிலுள்ள அரசியல்வாதிகளோ தமது மாவட்டங்களை மேம்படுத்தவே முனைகின்றனர். ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகளோ தமக்கிடையில் சண்டையிட்டுக்கொண்டு அபிவிருத்திகளைக் குழப்பி, இங்குள்ள மக்களை கீழ் மட்டத்திலேயே வைத்திருக்கின்றனர். இந்த நிலைமை 60 வருடங்களாக தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

இங்குள்ள மக்களை இப்படியே வைத்திருந்தால்தான் தாம் சொல்வதை இவர்கள் கேட்பார்கள் என்ற மனநிலையிலேயே இங்குள்ள அரசியல்வாதிகள் உள்ளனர்.

சிலர் பாராளுமன்றில் ரங்கா மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்குகிறார் எனக் கூறுகின்றனர். இதுவா மலையகத்துக்கு முக்கியமானது எனக் கேட்கின்றனர்.

இங்குள்ள மாணவர்களுக்கு நான் இன்னும் நிறைய உதவிகளைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், தனியாளாக என்னால் அனைத்தையும் செய்ய முடியாது. இங்கு ஏழு எம்.பிக்கள் உள்ளனர். அவர்கள் எதாவது செய்ய வேண்டும்.

மற்றவர் செய்வதைத் தடுப்பதற்காக நாம் பாராளுமன்றம் செல்லவில்லை. மக்களுக்குச் சேவை செய்வதற்காக நாம் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்க வேண்டுமே தவிர, தடையாக இருக்கக்கூடாது. நான் எம்.பியான பின்னர் இத்தகைய உதவிகளைச் செய்யவில்லை. முன்னரே நான் ஊடகத்துக்கூடாக இவற்றைச் செய்துள்ளேன். தற்போது தேயிலைக் கொழுந்தை அளவுக்கதிகமாகப் பறிக்கச்சொல்கிறார்கள். மரத்தில் கொழுந்து இருந்தால்தானே அதிகமாகப் பறிக்க முடியும். செடியில் இல்லாமல் எப்படி கொழுந்து பறிப்பது? பானைக்குள் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

இங்குள்ள மாணவர்களின் ஆடைகளைப் பார்த்தால் அதிலேயே அவர்களது வறுமையைக் காணக்கூடியதாகவுள்ளது. இவற்றுக் கெல்லாம் காரணமாக உள்ளவர்கள் அந்த இரண்டு அரசியல்வாதிகள்தான், அவர்கள் தமக்கிடையே உள்ள சண்டைக்காக நுவரெலியாவுக்கு வரும் அபிவிருத்திப் பணிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால், ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசுக ளும் இம்மாவட்டத்துக்கான அபி விருத்திப் பணிகளைக் கைவிடுகின் றன. இதனால்தான், இன்று நுவரெலியா மாவட்டம் வறுமைக்கோட்டில் முதலாவது மாவட்டமாக உள்ளது.

வறுமைக்கோட்டில் முதலாவதாக இருந்த அம்பாந்தோட்டை தற்போது கொழும்பை விட அபிவிருத்தியடைந்துவிட்டது. கம்பஹாவிலோ, மதவாச்சியிலோ, அநுராதபுரத்திலோ, அம்பாந்தோட்டையிலோ அங்குள்ள அரசியல்வாதிகள் தமது மாவட்டத்தை எப்படி அபிவிருத்தி செய்வதென்றே யோசிக்கிறார்கள். ஏன், அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம் என்பன கூட வந்துவிட்டன. வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது. அதிவேகப் பாதைகள் கூட போடப்பட்டுவிட்டன. ஆனால், ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள் சஜித் பிரேமதாஸ அம்பாந்தோட்டையில் அது செய்யவில்லை இது செய்யவில்லை என்கிறார். ஆனால், நுவரெலியா மாவட்டத்தில் பார்த்தால் என்ன செய்யவில்லை என்று கதைப்பதில்லை. இதை ஏன் மற்றவர் செய்கிறார். அதை எப்படித் தடுப்பது. எமது மக்களை இப்படியே வைத்திருக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். உண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் அட்டையிலும் விடக் கேவலமானவர்கள். ஏனென்றால், அட்டை தனக்குத் தேவையா னதை குடித்துவிட்டு வீங்கித் தானும் செத்துவிடும். ஆனால், இங்குள்ளவர்கள் தொடர்ந்தும் அப்படியே இருக்கிறார்கள். இதற்கு முடிவே இல்லாமல் தொடர்கிறது.

என்னைப்பொறுத்தமட்டில் என்னால் அனைத்தையும் செய்ய முடியாது. ஆனால். நாங்கள் இங்குள்ள மாணவர்களின் கல்வியை உயர்த்த வேண்டும். உங்களுக் குத் தெரியும் இங்கு கலாசார மண்டபம் அமைக்கின்றோம். அப்பியாசக் கொப்பிக ளைக் கொடுக்கிறோம். அதேபோலத்தான் வீதிகளையும் சீரமைத்து வருகிறோம்.

இவையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் ஆளும் கட்சிக்குப் போனால்தான் செய்ய முடியும் என்று இங்குள்ள அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். ஆனால், நான் அப்படி இல்லாமல் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டுதான் அதைச் செய்கிறேன்.

இங்குள்ள அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம்தான் இங்கு வருகிறார்கள். ஏனைய காலத்தில் இங்கு வருவதே இல்லை. நுவரெலியா மாவட்டம் வியாபாரமாக மாறிவிட்டது. இதைத்தான் நீங்கள் மாற்றவேண்டும். புலமைப்பரிசில் சித்தியடையும் மாணவர்களுக்கு நீங்கள் அனைவரும் இணைந்து, சிறு சிறு தொகையாக பணத்தைச் சேர்ந்து அவர்களுக்கு உதவுங்கள். இதைப் பார்த்தாவது ஏனைய பெற்றொர்களும் தமது பிள்ளைகளையும் படிக்கவைப்பார்கள். நீங்கள் படித்தால்தான் எங்களுக்கு வாழ்க்கை உண்டு.

நீங்களாகவே எழுந்தால்தான் சரி. அரசி யல்வாதிகள் ஒருபோதும் உங்களை எழும்ப விடமாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் குட்டிக் குட்டி கீழேதான் விடுவார்கள்.

எனவே, நீங்கள் அனைவரும் இங்குள்ள படித்தவர்களுடன் கூடி ஆலோசித்து எப்படி மாணவர்களை படிக்கவைக்கலாம் என்ற முடிவை எடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சிறப்பான வாழ்வு உண்டாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]