நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
மனித வர்க்கத்தை சீராக வழிநடத்தும் சட்டம்

மனித வர்க்கத்தை சீராக வழிநடத்தும் சட்டம்

எம்.கே.எம்.சஜாத் (சட்டக்கல்லூரி)

சட்டக் கல்லூரிக்கு மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்படு வதாயின் அவர் அதற் கான புகு முகப் பரீ ட்சையில் சித்திய டைந்திருக்க வேண்டும். க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்திய டைந்த பதி னெட்டு வயதுக்கு மேற் பட்ட எவரும் இந்தப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்பதால் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட வர்களும் பல்கலைக் கழகப் பட்டதாரிகளும், மட்டுமன்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் கூட சட்டக் கல்லூரியில் அனுமதி பெற்றுக்கொள்கின்றனர்.

எனவே பலதரப்பட்டவர்களும் இப்பரீட்சைக்கு அமர்வதனாலும், ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையினர் மட்டுமே சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவதனாலும், மேலும் பல்கலைக்கழக அனுமதி போன்று மாவட்ட மட்டத்தில் வெட்டுப்புள்ளி அமைப்பு நிர்ணயிக்கப் படாமலிருப்பதனாலும், இப்பரீட்சையில் சித்தியடைவதற்கு ஒவ்வொருவரும் மிகுந்த போட்டியை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

தத்தமது ஊக்கத்தினாலும் திறமையினாலும் இந்தத் தடையைத் தாண்டி சட்டக் கல்லூரிக்குத் தெரிவாகும் ஒருவரிடம் நமது சமூகத்தினர் கேட்கும் முதல் கேள்வியும் அதற்குத் தாமே அவர்கள் கூறிக்கொள்ளும் பதிலும்தான் கட்டுரையின் முதலாவது பந்தியாகவுள்ளது.

சட்டக் கல்லூரியில் எவரும் பொய் பேசுவதற்குக் கற்றுக்கொடுப்பதில்லை. உண்மையான சட்டங்களும் நீதிமுறை நடவடிக்கைகளுமே அங்கு போதிக்கப்படுகின்றன. மனித வர்க்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் சீராக வைத்து வழிநடாத்துவது சட்டமாகும். சட்டமும் நீதியும் அற்ற ஓர் உலகத்தைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மனிதர்கள் அனைவரும் விலங்குகளைப் போலாகிவிடுவதுடன் உலகில் குற்றங்களும் மலிந்துவிடும். மேலும் அவற்றுக்கெதிராக எவருக்கும் விமோசனமோ, நீதியோ, கிடைப்பதற்கு வழியே இல்லாமற் போய்விடும்.

எனின், தவறுகளைத் தடுக்கும் சட்டத்துறையில் கற்பது எங்ஙனம் தவறாகும்? வழக்கை விசாரித்து நீதியை வழங்கும் நீதிபதிகளும் சட்டத்தைப் பயின்றவர்கள்தாம் என்பதைச் சமூகத்தில் சிலர் உணரத் தவறிவிடுகிறார்கள்.

வழக்குப் பேசுவது மட்டும்தான் சட்டத் தரணிகளுக்குரிய ஒரே தொழில் என்று அவர்கள் நம்பியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். சட்டத் தரணிகள் தம்மிடம் வரும் தனது கட்சிக்காரரைக் “குற்றவாளியா” அல்லது “சுத்தவாளியா” என்று விசாரிப்பதில்லை. சட்டத்தின் பார்வையில் குற்றம் என்றால் இன்னதுதான் எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. இத்தகைய குற்றத்தைப் புரிந்தால் இன்னதுதான் “தண்டனை” என்பதையும் சட்டமே எடுத்தியம்புகிறது. வழக்கை நீதிமன்றுக்குக் கொண்டு சென்று அதற்கான ஒரு தீர்ப்பை அல்லது கட்டளையை பெற்றுக்கொடுப்பதுதான் சட்டத்தரணியின் கடமை.

குறிப்பாக ஒரு சட்டத்தரணியின் தொழிலைக் குறிப்பிடுவதென்றால் நீதி வேண்டி நிற்கும் ஒரு கட்சிக்காரருக்கு நீதியான தீர்ப்பைப் பெற்றுக் கொடுப்பதுதான் ஆகும். நீதியான தீர்ப்பை வழங்குபவர் நீதிபதியே! அவரே தன்னிடம் வரும் வழக்கைச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்மானத்தை எடுப்பவர். இவர் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை அல்லது நடைமுறையினை வைத்தே அத்தீர்மானத்துக்கு வருகின்றார். இங்கு பொய்யான விடயங்கள் சோடிக்கப்பட்டு இருந்தால் அதனை அவர் அறிந்துகொள்வார்.

ஆகவே சட்டத்துக்குப் புறம்பான எதுவும் இடம்பெற முடியாது. ‘சட்டம் யாவருக்கும் பொதுவானது’ என்பது சட்ட ஆட்சியின் கோட்பாடாகும். சமுதாய வாழ்வில் மக்கள் அறவழியில் நின்று ஒழுகவும், நீதியை நிலைநிறுத்தவும் சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கு முறைகளையும் கட்டிக்காக்கவும் ஒழுக்கத்தைப் பேணவும் அரசு சமயக் கோட்பாடுகள், அறநெறிகளை ‘சட்டம்’ எனும் ஒரு சக்தி வாய்ந்த கருவி மூலம் மக்களுக்கு வலியுறுத்துகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]