நந்தன வருடம் ஆனி மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 11
SUNDAY JULY 01, 2012

Print

 
செந்நெறி செம்மொழி செல்வி நம் இலங்கை மண்ணில்

செந்நெறி செம்மொழி செல்வி நம் இலங்கை மண்ணில்
 

மூன்று தலைமுறையினை நாம் கொண்ட இணைப்பின் சங்கிலித் தொடர்பாக அமையட்டும்

அல்லாமா ஆ கா அப்துல் ஹமீத் பாகவி.

இருபதாம் நுற்றாண்டில் முஸ்லிம் உலகம் ஈன்றெடுத்த அதிசய மனிதர்களுள் ஒருவர் இவர்.

நூற்றாண்டுக்குமேல் நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கக்கூடிய அற்புதசாதனையைப் புரிந்தவர் இவர்.

அதுதான், அல்லாஹ்வின் அருள்வேதம் அல்-குர்ஆனுக்கு தமிழ் வடிவம் அமைத்துத் தந்த இவருடைய ஒப்பற்ற சாதனை.

மகோன்னத பரிசு குர்-ஆன் மொழிபெயர்ப்பு

தமிழ் கூறும் நல்லுலகிற்கு இவர் அளித்த மகோன்னதப் பரிசு “தர்ஜூமதுல் குர்-ஆன்” என்ற பேழையாகும்.

ஓராயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த பெருங்குறையை ஏறத்தாள 25 ஆண்டுகள் முனைந்து நிறைவு செய்தார்.

அமுதத் தமிழ் மொழியில் அல்-குர்ஆனை முழுமையாக உரைசெய்த ஒப்பற்ற சாதனையாளராக இவரை வர்ணிக்கலாம்.

“பிஸ்மில்லாஹ் அல்-ரஹ்மானிர் ரஹீம்- குர்ஆன் சூறாக்களை ஓத ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் திறவுகோல் இது.

“அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் அருள் நாமத்தால்”

என்று தமிழில் நிறைபொருள் உருவாக்கித் தந்தவர் இவர். இன்று உலக மாந்தர் உதடுகளில் சர்வசாதாரணமாக நர்த்தனம் புரிகின்ற இனிய தமிழ் சொற்றொடர் இது.

ஒரு நூற்றாண்டுகாலம் பின்னோக்கி விரிகிறது எமது பார்வை:-

சேலம் - தமிழ்நாட்டில் செல்வம் கொழிக்கும் ஒரு மாவட்டம். இங்கே ஒரு சிற்றூர் அது ஆத்தூர்.

கன்னித் தமிழுக்கு இஸ்லாமிய மணம் கமழ புதுமை சேர்க்கும் வண்ணம் இவ்வூர் மண் ஈன்றெடுத்ததவப்புதல்வர் அப்துல் ஹமீத்.

சாலிஹீன்களை உருவாக்கும்

அல் பாக்கியாதுஷ் சாலிஹாத்

கல்வியின் பாக்கியத்தை அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்கும் உயர்கூடம் பாக்கியதுஸ் சாலிஹாத். சாலிஹீன்களை ஓயாது தோற்றுவிப்பது அல் - பாக்கியாதுஸ் சாலிஹாத். தமிழ்நாட்டின் தாயக அரபுக் கல்லூரியாக விளங்கும் இந்த கூடத்தில் தான் அரபுக்கலாசாரத்தின் சுவைகண்டார் அப்துல் ஹமீத். இவர் இங்குபெற்ற இன்பத்தின் மூலம் அல்-குர்ஆனின் சுவையை தமிழ் உலகம்பெற்று இலங்கவேண்டும் என்று அவாக்கொண்டார்.

“கலம்” - எழுதுகோலை கையில் எடுத்தார். இஸ்லாமிய வரலாற்றில் புதுயுகம் மலரச்செய்ய தன் பேனாவின் மையைப் பயன்படுத்தினார்.

1906ஆம் ஆண்டு தம் தூய பணிக்குத் துணையாக அன்று வாழ்ந்த அரபுமொழியில் புலமை பெற்று விளங்கிய மார்க்க மேதைகளோடு தொடர்பு கொண்டார். அவருடைய விளக்கங்களை வேண்டினார்; ஆசியும் பெற்றார்.

புத்தொளி பூத்தது தமிழ் உலகம்

கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். 20 ஆண்டுகள் ஓயாது உழைத்தார். தான் சொட்டிய ஒவ்வொரு வியர்வைத் துளியிலும் பளிங்குக் கற்களைக் கண்டார். உலகம் பளிச்சிடக் கண்டது தர்ஜூமதுல் குர்-ஆர் தமிழ் உலகம் புத்தொளி பூத்து புன்முறுவல் செய்தது. ஓயாது உழைத்தார். எனினும் சாதாரணமாக வாழ்வின் வசதிகள் தடைகற்களாய் இடர்படுவது சகஜம். நம்ம அல்லாமாவுக்கும் இது விதிவிலக்காக அமையவில்லை.

அவர்தம் வாழ்வை வணிகம் கவர்ந்தது. செல்வம் சேர்ந்தது செல்வத்தோடு தொடர்ந்து பின்தொடர்வது அரசியல். அரசியலையும் தொட்டார். அது இன்று போல் ஒருவித ஊர்ச்சண்டை அரசியலல்ல.. கிலாபத் இயக்கப் போராட்டம்!

இப்போராட்டத்தின் பின்னணியிலும் இவர் நிற்க நேர்ந்தது. அரபுலகில் தோன்றிய கிலாபத் சூறாவளி அன்றைய இந்திய முஸ்லிம் தலைவர்களையும் சுற்றிச்சுழல தவறவில்லை.

தர்ஜூமா பணி-கிலாபத் போராட்டம்... இடைவெளி 17 ஆண்டுகளாக விரிந்தது.

கிலாபத் ஆட்சியை நிலைநாட்ட முன்வந்த தலைவர்கள் ஏராளம் ஏராளம்... எனினும் தர்ஜூமாவின் கோட்டையை எழுப்ப தான் மாத்திரம் தான்.....!

தர்ஜூமாவின் கோட்டை

தர்ஜூமாவின் கோட்டையை எழுப்பத்தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மீண்டும் ‘கலம்’ அவருக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

சபதம் ஏற்றார்- இனி தர்ஜூமாவின் கோட்டையின் இறுதிக் கல்லை நட்டும்வரையில் நான் ஓய்வுகொள்ளப் போவதில்லை...”

1926ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தர்ஜூமா கோட்டையை எழுப்பத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 10 ஆண்டுகாலம் தமிழ் உரையைத் தொடர்ந்தார். இடையே மீண்டும் சிறு தடங்கல். அது நூல் பிரசுரப் பதிப்பில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல். சுற்றுமுற்றும் பார்த்தார். சங்கைக்குரிய சூபி அப்துல் காதர் ஹசரத் அவர்களுடைய நட்பைப் பெற்றார். 1937ஆம் ஆண்டு ஹைதராபாத் சென்று ஹஸரத் அவர்களின் அறிமுகத்தோடு நிஸாம் மன்னரைச் சந்தித்தார். மொழிபெயர்ப்பைப் பூர்த்திசெய்வதற்கு போதிய நிதியைத் தந்துதவுவதற்கு அன்றிருந்த நிஸாம் அரசின் மதவிவகார இலாகா ஒப்புக்கொண்டது.

மொழிபெயர்ப்பை முடிக்க நிஸாம் மன்னரின் பேருதவி

நிஸாம் அறக்கட்டளை தந்த உதவிகளைப் பெற்று தஞ்சாவூர் மாவட்டம் காரைக்காலில் தமது அலுவலகத்தை நிறுவி தம் பணியைத் தொடர்ந்தார். பணிகள் தொடரும்போது மேலும்மேலும் உதவிகள் தேவைப்பட்டன.

இவ்வேளையில் அன்பர்கள் சொன்னார்கள்: “இலங்கை நாட்டுக்குச் செல்லுங்கள். இன்முகம் காட்டி உதவிசெய்ய பலர் காத்திருக்கின்றார்கள்” என்றனர்.

அவர்களின் ஆலோசனையின்படி 1944ஆம் ஆண்டு கொழும்புக்கு விஜயத்தை மேற்கொண்டு அல்லாமா ஆ கா அப்துல் ஹமீத் (பாகவி) கொழும்பு வந்து சேர்ந்தார்.

கொழும்பு வருகையும் ஒரு ருசிகரமான தகவல் தான்..... பின் வரும்...

கொழும்புக் கதையைச் சற்றுத் தள்ளிவைத்துவிட்டு இன்னொரு இனிய செய்தியை அலசுவோமே... அல்-குர்ஆன் தர்ஜூமாவைத் தந்த அதிசய மனிதர் அப்துல் ஹமீத் பாகவி. அவர்களுடைய அருந்தவப் புதல்வர் தான் சிராஜூல் மில்லத் ஆ கா அப்துல் சமத் எம்ஏ எம்பி.அவர்கள்

தமிழ் உலகின் இலக்கிய வானை பிரகாசிக்கச் செய்த மணிவிளக்கு மாசிகையைத் தந்தவர் இவர்.

கண்மணி வருக!

அப்துல் ஸமத் சாஹிப் அவர்களின் ஒரு மகள்தான் கண்ணின் மணி பாத்திமா முஸப்பரா... அகில இலங்கை முஸ்லிம் மீடியாபோரத்தின் அழைப்பை ஏற்று எம்மண்ணில் இன்று கால் பதித்துள்ளார்.

மூன்றாவது தலைமுறையினரான இஸ்லாமிய சிந்தனை கருவூலங்களை விளக்கிச்சொல்ல அவர் வந்துள்ளார்... - அதுவும் குறிப்பாக எமதுநாட்டு முஸ்லிம் இளசுகளுக்கு மணிவிளக்கின் பிரகாசத்தை அளிக்க முஸப்பரா தனது துணையோடு எமது மண்ணில் கால்பதித்துள்ளார்.

பிள்ளைகள் பிறக்குமுன்பே தந்தையாரோடும் குடும்பத்தவர்களோடும் உறவுபூண்டவன் அடியேன். முஸப்பரா இப்போது ஒரு பேராசிரியை. எனினும் தந்தையின் பாசத்தோடு முஸப்பராவையும், அவர் அன்பு தமக்கை அலவியாவையும், ஹகீம், பாகவி மக்ககளை யும் எம் சொந்த மக்களைப்போன்றே விளிப்பவன் நான்.

மகளே! வருக! மூன்று தலைமுறையினரின் உணர்வுபூர்வமான நினைவலைகளை மீட்டிப்பார்க்க உங்கள் வரவு எமக்கு வழிசமைக்கட்டும் அஹ்லள் வஸஹ்லன்...!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]