கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஜ.அவ்வல் பிறை 16
SUNDAY APRIL 08, 2012

Print

 
முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்வே

முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்வே
நிலையான சமாதானத்தையும் இன சௌஜன்யத்தையும்
உத்தரவாதப்படுத்தும்

- பிரேம்ஜி ஞானசுந்தரம்

உலக கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளும், உலக சோஷலிஸ அமைப்பின் சிதைவும் இலங்கையில் இடதுசாரி இயக்கத்திலும் இயல்பாகவே பாதிப்பை ஏற்படுத்தியது. இடதுசாரி இயக்கம் பலவீனப்பட்டது. மார்க்ஸிஸம் ஆகர்ஷிப்பை இழந்தது. ஸ்தாபிதமான இடதுசாரிக் கட்சிகள் பரந்த ஐக்கிய முன்னணியிலும் அரசிலும் அங்கம் வகித்த போதிலும் இவற்றின் அரசியல் போக்கில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் இவை இல்லை. எனினும் தோழர் டிமிட்றோவ் குறிப்பிட்டதைப் போல ‘ஐக்கியமும் போராட்டமும்’ என்ற தத்துவத்தை சரியாகவும் வலுவுடனும் கடைப்பிடித்து இடதுசாரி இயக்கத்தின் தனித்துவத்தைப் பேணியும் வலுப்படுத்தியும் முன் செல்ல வேண்டும்.

இடது சாரி இயக்கத்தின் இன்னொரு பிரிவான தீவிர இடதுசாரிக்குழு லெனின் சரியாகவே எச்சரித்ததைப் போல அதிதீவிர இடதுசாரிப் போக்கு அதிதீவிர வலதுசாரிகளுடன் ஒன்றிணையும், என்பதற்கமைய வலதுசாரி கட்சிகளுடனும் வலதுசாரி சக்திகளுடனும் ஆர்ப்பாட்டங்களிலும் அரசியல் இயக்கங்களிலும் கைகோர்த்து நிற்கும் அவலத்தை, கேவலத்தை காண்கிறோம்.

அது மட்டுமல்ல, இலங்கையின், தமிழ் மக்களின் இயல்பான நேசசக்தியான பாரதத்தைத் துண்டாடுவதற்காக 1960களின் நடுப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தயாரித்த ‘பிரம்மபுத்திர’ திட்டத்திற்கான முன் தயாரிப்பாக அது கட்டவிழ்த்துவிட்ட யுத்தத்திற்கும் “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை” என்ற லெனினிய கோட்பாட்டு தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு இவை முக்குக் கொடுத்ததையும் மனம் கொள்வது அவசியம்.

எனினும் நாட்டில் போருக்குப் பின் ஜனநாயகத்தையும் ஜனநாயக நடைமுறைகளையும் ஜனநாயக விழுமியங்களையும் மீள் நிறுவவும், நாகரிமாக அரசியல் கலாசாரத்தை ஸ்தாபிக்கவும், பொருளாதார முன்னேற்றத்தை மேலும் துரிதப்படுத்தி அதை மக்களுக்குப் பயன்படுமாறு ஆக்கவும், குறுகிய குடும்ப எல்லைகளைக் கடந்து அனைத்து முற்போக்குச் சக்திகளையும் ஒன்று திரட்டவும், லஞ்சத்தையும் ஊழலையும் ஊதாரித்தனத்தையும் எதிர்த்து ஒரு முழுமையான யுத்தத்தை ஆரம்பிக்கவும், சமூகத்தில் முற்போக்கான ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்தவும், மனித உரிமைகளை நடைமுறையில் உத்தரவாதப்படுத்தவும், ஈட்டப்பட்ட சமாதானத்தையும் அமைதியையும் அனைத்து மக்களுக்கும் அர்த்தமுள்ளவையாக்கவும், புனருத்தாரண- புனர்நிர்மாணப் பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் இடதுசாரி சக்திகள், அனைத்து முற்போக்குச் சக்திகள் தீவிரமாக, முனைப்பாகச் செயற்படுவது இன்றைய கால கட்டத்தில் மிக மிக அவசியமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டை, நாட்டு மக்களை மூன்று தசாப்தங்களாக ரத்தசாக்காட்டில் முழுக்காட்டிய கொடிய யுத்தத்திற்கு காரணமாக இருந்த தேசியப் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு இணக்கமான, அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய ஒரு ஜனநாயகத் தீர்வினை கூட்டாகக் காண்பது அவசர அவசியமானதாகும். மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், வழமை நிலைக்குத் திரும்புதல், பொது மன்னிப்பு, யுத்தகால மனித உரிமை மீறல்களுக்கு இருதரப்பும் பொறுப்புக் கூறல், இராணுவப்படுத்தல் ஆகிய அதிமுக்கிய பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் அதேவேளையில் தமிழ் மக்களினதும் முழுத்தேசத்தினதும் நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் அரசியல் தீர்வே இருப்பது அவசியத்திலும் அவசியமாகும்.

அறுபது ஆண்டு கால மோதல் அரசியலும், முப்பது வருட ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது, படுதோல்வி அடைந்து விட்டது. ஆகவே புதிய பாதையை, லெனின் கோடிட்டுக் காட்டிய மாற்றுப் பாதையை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை இறுதித் தீர்வு எட்டப்படும் வரை தொடரப்பட வேண்டும். இது ஆக்கபூர்வமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருப்பது அவசியம். இது சரியான திசையில் முன்னேறிச் செல்லவும், பயனார் பெறுபேறை எய்தவும் அனைத்து நல்லெண்ணம் படைத்தவர்களும், தேசமானுடப் பிரேமிகளும், ஜனநாயக ஆர்வலர்களும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவது வரலாற்றுக் கடமையாகும்.

எனினும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் இருதரப்பு இணக்கப்பாடுகளிலும் உள்ள ஆபத்தைப் பார்க்க யாரும் தவறப்படாது. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் ஐ.தே.கட்சி நடத்தி இனவெறிப் பிரசாரத்தையும், கேடுகெட்ட கண்டி யாத்திரையயும் “கொல்லுங்கள், கொல்லுங்கள் தமிழர்களைக் கொல்லுங்கள்” என்று ஐ.தே.கட்சியின் உத்தியோகபூர்வ ஏடான “சியரட்ட” கவிதை மூலம் கட்டவிழ்த்து விட்ட கொலைவெறியையும் தொடர்ந்து 58 இனக்கலவரம் வெடித்தது. அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. டட்லி- செல்வா ஒப்பந்தம் அன்றைய எதிர்க்கட்சியின் எதிர்ப்பையும் அன்றைய ஆட்சியாளர்களின் ஒரு பகுதியினரின் எதிர்ப்பையும் தொடர்ந்து காலாவதியாகியது.

வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிநாட்டு தீர்மானத்தில் இடப்பட்ட கையெழுத்துக்களின் மை காய்வதற்கு முன்பே ஜனாதிபதி ஜே.ஆரும் த.வி.கூவும் ‘மாவட்ட அபிவிருத்திச் சபை’ உடன்பாட்டிற்கு வந்தார்கள். என்றாலும் இதுவும் அரசிலிருந்த பேரினவாத அமைச்சர்கள் பலர் குண்டர்களைப் பாவித்து வாக்குப் பெட்டிகளை கொள்ளையடித்து கொளுத்தியதையும், யாழ் நூலகத்தை எரித்ததையும் தொடர்ந்து எரியூட்டப்பட்டது.

உலகின் ஐம்பெரும் வல்லரசுகளுள் ஒன்றும், ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய வல்லரசும், உலகின் நான்காவது பெரிய இராணுவ வல்லசுரமான இந்தியா தனது முழுப்பலத்தையும் பல்ரக உத்திகளையும் பாவித்து ஏற்படுத்திய இருதரப்பு ஜே.ஆர். ரஜீவ் ஒப்பந்தமும் இறுதியில் தோல்விலேயே முடிந்தது. இந்தியப் பிரதமரைக் கொல்ல மேல்மட்ட நபர்களின் தூண்டுதலால் இராணுவ அணிவகுப்பின் போது எத்தனிக்கப்பட்டது. அன்றே அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பிரமாண்டமான ஊர்வலம் களுத்துறையிலிருந்து புறப்பட்டு வந்தது. தெஹிவலை- வெள்ளவத்தை பாலத்திலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. காவற்துறையால் இதனைக் கட்டுப்படுத்த முடியாததால் இராணுவமும் பின் விமானப்படையும் வரவழைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்திய அமைதிப்படை அவசர அவசரமாக அழைக்கப்பட்டு வட-கிழக்கில் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த எதிர்ப்பு பிசுபிசுத்தது. இந்த ஊர்வலம் வெள்ளவத்தைக்குள் புகுந்திருந்தால் 1983 கறுப்பு ஜுலையிலும் பார்க்க பலமடங்கு கூடுதலான கர்ணகடூரமான இனசங்காரம் ஏற்பட்டிருக்கும். இருதரப்பு ஒப்பந்தங்களினதும் தோல்வியின் பரிதாப வரலாறு இதுதாம்.

ஆக, அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மிடையிலான பேச்சுவார்த்தை தொடரும் அதேவேளை பேச்சுவார்த்தை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அரசையும், முஸ்லிம்களை உள்ளடக்கிய தமிழ்த்தரப்பையும், பிரதான எதிர்க்கட்சியையும் கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையாக புதிய பரிமாணத்தைப் பெறுவதவசியம். இதில் ஒரு இணக்கம் ஏற்பட்ட பின் ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைக்கும் வகையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆக்கப்பூர்வமான ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும். இவ்வாறு ஒரு பொது இணக்கப்பாடு ஏற்பட்டதும் அதை புதிய அரசியல் யாப்பாகவோ அல்லது அரசியல் யாப்புத் திருத்தமாகவோ ஜனாதிபதியும் எதிர்க்கடசித் தலைவரும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவொன்றே ஒரு நிரந்தர தீர்வுக்கும் நிலையான தீர்வுக்குள்ள ஒரே சரியான, உசிதமான, பிசகற்ற மார்க்கமாகும்.

அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஜனநாயகத்தை விஸ்தாரமாக்குவது என்ற வகையில் முன்வைப்பது உசிதமான அரசியல் மூலோபாயமாகும். இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இணைப்பாட்சி (சமஷ்டி) அல்லது பிரதேச சுயாட்சியே சரியான, உயர் ஜனநாயகத் தீர்வு என்ற போதிலும், இதற்கான சூழ்நிலை ஏற்படும் வரை இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை முழுமையாகவும் கறாராகவும் அமுல்படுத்துவதும் முடிந்தால் முஸ்லிம் மக்கள் விரும்பினால் முஸ்லிம் அலகை உருவாக்கி அனைத்து அலகுகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்குவதும் அதற்கு மேலாகவும் செல்வதும் நல்லது. விரும்பத்தக்கது.

இதற்கான அரசியல், உளவியல் சூழல் சகல மட்டங்களிலும் உருவாக்கப்படுவது பிரதான முன்தேவையாகும். விஷமங்களும் விஷமபிரசாரங்களும், சூழலை நச்சுப்படுத்தும் சகலரக எத்தனிப்புகளும் உறுதியாக தவிர்க்கப்படுவது அவசியமாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]