புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
கட்சிகள் வேறுபடினும் நாங்கள் இணைந்திருப்பது ஒரே அரசின் கீழ்

கட்சிகள் வேறுபடினும் நாங்கள் இணைந்திருப்பது ஒரே அரசின் கீழ்

அபிலாஷைகளை வென்றெடுக்க ஒன்றுபடுமாறு ஹக்கீம் கோரிக்கை

நாங்கள் பல கட்சிகளாக இருந்தாலும் ஒரு அரசின் கீழ் இருக்கிறோம். இதனால் வேற்றுமைகளுக்கு அப்பால் எல்லோரும் ஒன்றுசேருவதன் மூலமே எமது அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்று நீதி அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான எஸ். எல். எம். ஹனிபா மதனி தலைமையில் வெள்ளி க்கிழமை அக்கரைப்பற்று புதுப்பள்ளியடியில் உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்படி கூறினார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டின் பல பாகங்களிலும் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் சில விருப்பு வெறுப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் எம்மை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். சிலர் எம்மோடு இணைகின்றனர். இது சகஜமாகி விட்டது. இருந்த போதிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சியடைந்து சென்று கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆரம்பத்தில் இருந்தவர்கள் எமது கட்சியில் இருந்து பிரிந்தாலும் ஓர் அரசாங்கத்தின் கீழ்தான் எல்லோரும் இருக்கிறோம். இப்படியான ஒரு காலகட்டத்தில் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட்டால் மாத்திரமே வென்றெடுக்க முடியும். அவரவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினூடாகவே எமது சமூகத்திற்காக நாங்கள் ஒற்றுமைப்படுத்துவது ஒரு சிறந்த விடயமாகும். அக்கரைப்பற்று மக்கள் படித்த நல்ல பண்பானவர்கள். அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்றார்.

இக்கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம். ரீ. ஹசன் அலி எம்.பி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மஜீட் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நசீர் அவர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.