கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஜ.அவ்வல் பிறை 16
SUNDAY APRIL 08, 2012

Print

 
அரசின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெறும் கிழக்குப் பல்கலை அபிவிருத்தி

அரசின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெறும் கிழக்குப் பல்கலை அபிவிருத்தி

கிழக்கு மாகாணத்தின் முதலாவது உயர் கல்விக் கூடமான கிழக்குப் பல்கலைக்கழகம் மீட்சி பெற்று முன்னேற்றப் பாதையில் வேகமான வளர்ச்சியைத் தொடங்கியுள்ளது.

முன்னாள் நீதி அமைச்சரும், கல்குடா தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான கே. டபிள்யூ. தேவநாயகம் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியினால் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதன் முதலாவது உபவேந்தராக பேராசிரியர் கே.டீ. அருட் பிரகாசம் அவர்களும், முதலாவது பதிவாளராக கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களும் 1986 ஆம் ஆண்டில் பதவி ஏற்றனர்.

காலஞ்சென்ற முன்னாள் தபாற் தொலைத்தொடர்புகள் அமைச்சரும், கல்குடாத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வீ. நல்லையா அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் இருந்த இடத்தில்தான் இப்பல்கலைக்கழக ஸ்தாபிதம் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு கிழக்கில் வீசிய பெரும் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கட்டடங்கள் ஓரளவு திருத்தம் செய்யப்பட்டே கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது நூறு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட விசாலமான நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய மற்றுமொரு பேராசிரியரான எஸ். ராஜரத்தினமும் இங்கு நினைவு கூரத்தக்கவர்.

பல்கலைக் கழகக் கல்லூரியின் முதலாவது பணிப்பாளராகவும் செயலாற்றியுள்ளார். அத்துடன் கே. ராஜேந்திரா கல்லூரியின் முதலாவது செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதேவேளை பி. சிங்காரவேல் அவர்கள் 1983 ஆம் ஆண்டில் செயலாளராகவும் பணியாற்றினார்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி மேம்பாட்டுக்காக மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியைத் தரமுயர்த்துவது தொடர்பாகவும், அதன் பெளதீக வளம், கல்வி சார் நடவடிக்கைகள், ஆளணி, முகாமைத்துவம் தொடர்பாகவும் ஆராய்ந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்காக கல்வி உயர் கல்வி அமைச்சு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஒரு தெரிவுக்குழுவொன்றை நியமனம் செய்து அதன் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தயாராக இருந்தது.

இதன்படி பேராசிரியர், வீ. அப்பாப்பிள்ளை, ஆர்.எஸ். ராமகிருஷ்ணா, வை.டீ.ஏ. சேனநாயக்கா, பேராசிரியர் எஸ்.ரீ. பெர்னாண்டோ, எஸ்.எச்.எம். ஜெமீல், டிக்ஷன் நிலவீரா ஆகியோர் பரிந்துரையாளர்களாகச் செயற்பட்டனர்.

காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா அவர்களின் நேரடி வேண்டுகோளையேற்று நீண்ட காலம் கனடா பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பணியாற்றிய கே. கோபிந்த ராஜா அவர்கள் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக அண்மையில் நியமனம் பெற்று பல்கலைக்கழகச் சமூகத்தை நிமிர்த்துவதில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

1993 ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டதாரியான கோபிந்த ராஜா அவர்கள் கனடாவில் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றவர். அங்குள்ள YORK University. Memorial University மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியவர். இது தவிர 1997 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவிலுள்ள Johannesburg இலும் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டவர்.

கலாநிதி கே. கோபிந்தராஜா அவர்களிடம் பல்கலையின் அபிவிருத்தி தொடர்பாகக் கேட்ட போது, அவர் கூறியதாவது:

இங்கு நாங்களே எங்கள் கொள்கைகளைச் சீரமைக்க வேண்டி உள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி தொடர்பான மதிப்பீட்டில் அது சர்வதேச தரம் வாய்ந்ததாகவும் அதில் பட்டம் பெறும் மாணவர்களின் சான்றிதழ் தரம் பெற்றதாக அமைய வேண்டும். ஏனைய பல்கலைக்கழகங்கள் பல துறைகளில் முன்னேறிக் கொண்டிருந்தாலும் நாங்களும் அவற்றுடன் போட்டி போட்டு முன்னேற வேண்டும்.

இது விடயத்தில் ஜப்பானியரைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]