புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பி.எல்.சி.யின் பணிப்பாளர் சபைக்கு சுனில் லியனகே நியமனம்

றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பி.எல்.சி.யின் பணிப்பாளர் சபைக்கு சுனில் லியனகே நியமனம்

றிச்சர்ட் பீரிஸ் அன்ட் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக சுனில் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டாளராக இணைந்து கொண்ட இவர் தமது அர்ப்பணிப்பான சேவையின் மூலம் நிர்வாக சபை உறுப்பினராக படிப்படியாக பதவி உயர்ந்துள்ளார். றிச்சர்ட் பீரிஸ் குழுமம் இலங்கையில் 42 அங்கத்துவ நிறுவனங்களை கொண்டதும், சுமார் 30000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட முன்னணி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் சபைக்கு சுனில் லியனகே நியமிக்கப்பட்டுள்ளமையானது, நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வலுவடையச் செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாகவும், வர்த்தக துறையில் 80 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், வர்த்தக விரிவாக்கல் நடவடிக்கைகளின் போது இவரின் அனுபவத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்கும் என நிறுவனத்தின் உயர்நிலை பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

சுனில் லியனகே இலங்கையில் முதல் தடவையாக பொலிமர் பிரிவில், பொலிதீன் கலவை முறையில் அமைந்த மெத்தை, குஷன் மற்றும் சீட் வகைகளை அறிமுகம் செய்த பெருமையை பெற்றவராவார். இவர் ஒரு சிறந்த தூரநோக்குடைய வர்த்தக தலைவர் ஆவார். இவரின் மூலம் பெருமளவான புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுனில் லியனகே தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் மேற்கொண்டிருந்தார்.

பின்னர் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த இவர், பொலிமர் தொழில்நுட்ப கற்கையில் (சிங்கப்பூர்) டிப்ளோமா பெற்றிருப்பதுடன், பிளாஸ்ரிக் கல்வியகத்தின் (லண்டன்) டிப்ளோமா பெற்றிருப்பதுடன், லண்டன் இறப்பர் கல்வியகத்தின் அனுமதிப் பத்திரத்தையும் பெற்றுள்ளார். இவர் இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் துறையில் 35 ஆண்டுகளுக்கு அதிகமான நிர்வாக அனுபவத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.