கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஜ.அவ்வல் பிறை 16
SUNDAY APRIL 08, 2012

Print

 
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சாதனைகள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சாதனைகள்

இலங்கையின் 40 ஆண்டு வருட கால வரலாறுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி ஒரு சந்தர்ப்பத்தில் 400 ஓட்டங்களுக்கும் அதிகமாகப் பெறும் சந்தர்ப்பங்களும், அதே அணி மற்றைய ஆட்டத்தில் 100 க்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்ற சந்தர்ப்பங்களும் கிரிக்கெட் போட்டியில் நிறையவே நிகழ்ந்துள்ளன. ஒரு சந்தர்ப்பத்தில் ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி ஆகக் கூடுதலாக 443 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அதே இலங்கை அணி கடந்த தென்னாபிரிக்கத் தொடரின் போது அவ் அணிக்கெதிராக 43 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி ஆட்டமிழந்த ஐந்தாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த ஓட்டமான 35 ஓட்டங்களுக்கு இலங்கை அணி 2004-04- 25 ஆம் திகதி ஹராரேயில் வைத்து சிம்பாப்வேயை ஆட்டமிழக்கச் செய்தது. மொத்தமாக நடைபெற்றுள்ள சுமார் 3250 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற அணிகளும் டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளுமாக 100 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமை சுமார் 58 தடவைகள் நிகழ்ந்துள்ளன.

இதில் கூடுதலாக 100 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்த அணி பங்களாதேஷாகும். அந்த அணி 9 முறை 100 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்துள்ளது. அவ்வணி பெற்ற ஆகக் குறைந்த ஓட்டம் 58. இது 2011-03-04ம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகப் பெற்றதாகும்.

இதற்கடுத்தபடியாக பாகிஸ்தான் அணி 7 முறை ஆட்டமிழந்துள்ளது. ஆகக்குறைந்த ஓட்டம் 43. 1993ம் ஆண்டு கேப்டவுனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பெற்றதாகும். மற்றும் சிம்பாப்பே அணி 5 தடவையும், இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் நான்கு தடவையும் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், கென்யா, கனடா ஆகிய அணிகள் மூன்று தடவையும் அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இரு தடவையும் ஐக்கிய அமெரிக்கா, ஸ்கொட்லண்ட், அயர்லாந்து அணிகள் ஒவ்வொரு தடவையும் 100 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்துள்ளன.

100 ஓட்டங்களுக்குள் மற்றைய அணிகளை ஆட்டமிழக்கச் செய்த அணிகளுள் இலங்கை அணியே மற்றைய அணிகளை 10 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளது. அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் 8 முறையும், மேற்கிந்தியத் தீவுகள் 7 முறையும், நியூசிலாந்து 5 முறையும், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் 4 முறையும், சிம்பாப்வே, கென்யா அணிகள் ஒரு தடவையும் 100 ஓட்டங்களுக்குள் மற்றைய அணிகளை ஆட்டமிழக்கச் செய்துள்ளது.

ஆகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த சாதனையை இலங்கை அணி தன்னகத்தே கொண்டுள்ளதைப் போன்றே ஆகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையையும் இலங்கையே பெற்றுள்ளது. அவ்வணி 2006-07-04 ஆம் திகதி நெதர்லாந்துக்கு எதிராக 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்களைப் பெற்றது.

சர்வதேச ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி 400 ஓட்டங்களுக்கும் மேல் பெற்ற சந்தர்ப்பங்கள் 10 ஆகும். அதில் இந்திய அணி நான்கு முறை 400 ஓட்டங்களைக் கடந்து சென்றுள்ளது. தென்னாபிரிக்கா, இலங்கை அணிகள் இரு முறையும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் ஒரு முறையும் இச்சாதனையைச் செய்துள்ளது.

400 ஓட்டங்களை வாரி வழங்கிய அணிகளாக தென்னாபிரிக்க அணி (இரு முறை) இந்தியா, பெர்முடா, இலங்கை, மேற்கிந்தியதீவுகள், சிம்பாப்வே அவுஸ்திரேலியா நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணி (ஒரு முறையும்)களைக் குறிப்பிடலாம். 400 ஓட்டங்களுக்கு மேல் (சேஸிங் செய்து) இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற ஒரே அணி தென்னாபிரிக்க அணியாகும். அவ்வணி 2006-03-12ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 434 என்ற இலக்கை துரத்திச் சென்று 49.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ஓட்டங்கள் பெற்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்தது இந்திய ராஜ்கோட்டில் 2009-12-15ம் திகதி இந்திய அணி பெற்ற 7 விக்கெட் இழப்புக்கு 414 இலக்கை துரத்திச் சென்று 400 ஓட்டங்களைக் கடந்து 411 ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது அணி இலங்கையாகும். ஒரு அணி பெற்ற சராசரி ஓட்ட வேகமாக 2007-08-24ம் திகதி சிம்பாப்வே அணிக்கு எதிராக புலவாயோ மைதானத்தில் நியூசிலாந்து 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களைப் பெற்றது. அதன் சராசரி ஓட்ட வேகம் ஓவருக்கு 9.02 ஆகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]