கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஜ.அவ்வல் பிறை 16
SUNDAY APRIL 08, 2012

Print

 
தேசிய உற்பத்திகளில் ஒன்றான பால் பாவனையை அதிகரிக்க நடவடிக்கை

தேசிய உற்பத்திகளில் ஒன்றான பால் பாவனையை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டின் தேசிய உற்பத்திகளில் ஒன்றான பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அதனை மக்களுக்கு குறைந்த விலைக்கு வழங்குவதுடன், பால் பாவனையை அதிகரித்து ஊட்டச்சத்தை பெருக்கும் நோக்கில் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக அவுஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் 10 காளை மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஒரு மாட்டிலிருந்து 75,000 விந்தனுக்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்குமென கால்நடை அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பெறப்படும் விந்தனுக்களைக் கொண்டு 7,50,000 சிறந்த ஜேர்சி ரக பசுக்கன்றுகளை இன விருத்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆராய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், நெதர்லாந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் லூயிஸ் டபிள்யூ. எம். பியட், இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் பிரதி தலைமை அலுவலர் பாஸ் எம். வான் நூர்டென்னே ஆகியோருக்கிடையில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் நமது நாட்டில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக கால்நடை வளர்ப்பில் நிபுணத்துவமுள்ள 15 பேர் கொண்ட விசேட குழு நெதர்லாந்து சென்று அந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள், செயற் திட்டங்கள் மற்றும் அனுபவங்களை பெற்று நாட்டுக்குப் பொருத்தமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜேர்சி, பிரீசியன் இன 500 கறவை பசுக்கள் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன.

கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கறவை பசுக்களை பார்வையிட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், கால்நடை வள மற்றும் சமூக அபிவிருத்தி பிரதியமைச்சர் மித்ரபால, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் வந்திருந்தனர்.

கறவை பசுக்கள் சுமார் 100 லொறிகளில் பாதுகாப்பாக போபத்தலாவ தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கும் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பசுக்களை பராமரிக்க அவுஸ்திரேலிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற விதத்தில் இலங்கையின் மத்திய பகுதியில் இப்பண்ணை அமைந்துள்ளது. போபத்தலாவை பண்ணையிலுள்ள கறவைப் பசுக்களுடன் மேலும் 1500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார்.

போபத்தலாவை கால்நடை பண்ணைக்கு அண்மையில் விஜயம் செய்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கறவைப் பசுக்களை பார்வையிட்டதுடன் அவற்றை பராமரிப்பதுடன் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனைகளையும் தெரிவித்தார்.

அமைச்சருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் உயரதிகாரிகளும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பால் உற்பத்தியை தன்னிறைவடையச் செய்யும் பொருட்டு ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையின் கீழ் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர் களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]