கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஜ.அவ்வல் பிறை 16
SUNDAY APRIL 08, 2012

Print

 
மலையக தொழிற்சங்கத் தலைமைகள் முன்பாகவுள்ள பாரிய பொறுப்புக்கள்

மலையக தொழிற்சங்கத் தலைமைகள் முன்பாகவுள்ள பாரிய பொறுப்புக்கள்

இந்நாட்டின் மொத்த வெளிநாட்டு வருமானத்தில் பதின் மூன்று சதவிகிதத்தைப் பெற்றுத் தரும் மலையகப் பெருந்தோட்டத்துறை மக்கள் தமது வாழ்க்கை முறையை நாட்டின் ஏனைய பிரதேச மக்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே அனுபவிக்கின்றனர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாகும். இதற்குக் காரணம் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அவர்களை தமது வாக்குத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவதுடன் நின்றுவிடுவதுதான். அதற்கும் மேலாக அவர்களது வாழ்க்கை முறை அல்லது முன்னேற்றம் தொடர்பாக எதையுமே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

மாறாக கடந்த சில வருடங்களாக இந்த மக்களது வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை அமுல்படுத்தி வருவதுதான். இக்காலகட்டத்தில் பல தோட்டங்கள் அபிவிருத்தி கண்டுள்ளன. குறிப்பாக மலையக பெருந்தோட்டத்துறை மக்கள் பலரும் ஏதோ ஒரு வகையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் தந்தையாக இருந்து பல சேவைகளை ஆற்றியுள்ளார். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணைந்து தன்னாலான பணிகளை முன்னெடுத்துள்ளார். இதற்காக அவர் பல போராட்டங்களை நடத்த வேண்டி ஏற்பட்டது. அவரது முயற்சியால் தனது மக்களுக்கான சகல வற்றையும் வென்றெடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு முன்னேற்றம் காண வழிவகுத்தார்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அவரும் ஏனைய மலையகத் தலைவர்களும் ஒரு சிறு தேவையை நிறைவேற்ற படாதபாடு பட்டமையை முழு நாடுமே அறியும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மலையகத் தலைவர்கள் பல விடயங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதுடன் அவர்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக பலவற்றை அரசாங்கம் செய்தும் வருகின்றது. அந்த வகையில் சகல தோட்டக் குடியிருப்புக்களையும் பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் எனும் கோரிக்கை தற்போது பல மலையக அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீட்டு உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், மாகாண சபைகள் மற்றும் சகல உள்ளூராட்சி சபைகளின் சேவைகள் தோட்டக் குடியிருப்புக்களுக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் தங்கு தடையின்றி சென்றடைவதற்குமான வழிவகைகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

புதிய உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றால் அதனால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்றதொரு கருத்து நிலவி வருகிறது. இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. இதில் சாதகமான பல விடயங்களே உள்ளன.

அத்துடன் அரசாங்கத்தால் இச்சட்ட மூலம் முன்வைக்கப்படும் போது அதிலேதும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைக்கலாம். குறிப்பாக மலையகப் பிரதேசங்களைப் பொறுத்த வரையில் இன்றைய அரசாங்கத்தின் அபிவிருத்திக் கொள்கையைக் கருத்திற் கொள்ளும் போது தோட்டக் குடியிருப்புக்களை கிராமங்களாக அங்கீகரிக்காவிடினும் அப்பகுதி அபிவிருத்தித் திட்டங்களில் அப்பிரதேச குடியிருப்புக்களும் உள்வாங்கப்பட்டே உள்ளன. தோட்டப்புறக் கிராமங்களில் வாழும் சிங்களவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், தோட்டக் குடியிருப்புக்களில் வாழும் மலையக மக்களுக்கு இன்னொரு மாதிரியாகவும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமோ எனும் ஆதங்கமும், மனப்பயமும் மலையக மக்களிடையே நிலவுவதில் நியாயம் உள்ளதுதான். ஆனால் அது குறித்து எவ்வகையிலும் சந்தேகமோ அச்சமோ அடையத் தேவையில்லை. ஏனெனில் அரசாங்கம் அனைத்து மக்களையும் ஒன்றாகவே நடத்தி வருகின்றது. தற்போது மலையக அமைப்புகளுக்கு எழுந்திருக்கும் சந்தேகத்தை நீக்க வேண்டுமாயின் சகல தோட்டக் குடியிருப்புக்களையும் கிராமங்களாக அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. இந்த அமைப்புக்களது கோரிக்கைகளை மலையக அரசியல் வாதிகள் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கலாம். அதுவே இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இதைவிடுத்து இன்றைய அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள முற்படுகிறது என நினைத்து விடக்கூடாது.

தோட்டங்கள் கிராமங்களாக அங்கீகரிக்கப்படுமாயின் மத்திய அரசாங்கத்தினால் வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக தோட்டக் கிராமங்களைச் சென்றடையும் என்பதுவும் உண்மைதான். அத்துடன் பிரதேச செயலகங்களின் ஆளணி அடிப்படையில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அத்துடன் தோட்டப் பகுதிகளில் அபிவிருத்திக்கென அரசினால் வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும்.

இவற்றை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்து தமது மக்களுக்கு நன்மை கிடைக்க வழிவகை செய்ய வேண்டியது மலையக அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். மக்களுக்குப் பயனுள்ளது என்பதால் ஜனாதிபதியோ அல்லது அரசாங்க தரப்பினரோ ஒருபோதும் இதற்கு முரணாக நிற்கமாட்டார்கள். மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கந்துரட்ட உதானய, புபதும வெல்லஸ் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களில் தோட்டப்புறங்களுக்கும் முன்னுரிமை அளித்துச் செயற்படுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இது தொடர்பாக ஆழமாகச் சிந்தித்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது மலையகத் தலைவர்களே!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]