புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

பெருந்தோட்ட வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

பெருந்தோட்ட வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

மலையகப் பெருந்தோட்ட மக்க ளின் வரலாறு 20 தசாப்தங்களைக் கடந்து விட்டது. தென்னிந்தியா விலிருந்து பெருந்தோட்டத் தொழிலுக் காக 1823 காலப்பகுதியில் கூலிகளாக அழைத்துவரப்பட்ட இச் சமூகத்தின் வாழ்க்கை வரலாறு பல்வேறு துயரங் களைக் கொண்டது. இந்த மக்கள் தம் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்ததுடன் வழிகாட்டல்கள் இல்லா ததன் காரணமாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத ஒரு சமூகமாக இருந்தனர். வந்தேறு குடிகளாகவும், அரசியல் அநாதைகளாகவும், அகதிகளாகவும் அந்நியர்களாகவும் பார்க்கப்பட்ட இவர்கள் இன்று வரையிலும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப் படாமையானது வருந்தத்தக்க விடயமாகும்.

அரச நிர்வாகத்துடனான நேரடித் தொடர்புகள் இல்லாமை, தேசிய சுகா தாரத்துறையில் உள்ளீர்க்கப்படாமை, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக்கொள்வதற்காக காலத்திற்கு காலம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

எவ்வித உட்கட்டமைப்பு வசதிகளும் இன்னமும் முழுமையாக மலையக மக்களைச் சென்றடையாத நிலையில் லயன் காம்பராக்களில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு மக்கள் குழுமமாக, கல்வியில், அரச தொழில்துறைகளில் முழுமையாக உள்வாங்கப்படாதவர்களாக நிலம், காணி, வீடு, தொழில் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வந்த போதிலும் அதற்கான தீர்வு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பெருந்தோட்ட சமூகம் சில உரிமை களையும் சலுகைகளையும் போராடி யும் அரசியல் சாணக்கியத்தினாலும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

தேயிலைத் தோட்டத்தையும் தேயிலை மற்றும் ரப்பர் தொழிலையும் மையமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இந்த மக்க ளின் வாழ்வியல் அம்சங்களும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் தேயிலையை அடிப்படையாக வைத்த உருவாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் இவர்களது வாழ்க்கையில் மாற்றமேற்பட வேண்டு மாயின் மற்றவர்களை நம்பியிருக்காமல் தமது குடும்ப பொருளாதாரத்திற்காக சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமாகும். மலையக சமூகம் கல்வியிலும், பொருளாதாரத்தி லும் மாற்றமேற்பட்டால் மட்டும் போதாது. தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள் வதற்காக சுற்றாடலில் உள்ள வளங் களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

தோட்டங்களில் இருக்கும் கோயில் கள், முன்பள்ளிகள், பாடசாலைகள், வாசிகசாலை, சனசமூக நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை எமது உடைமைகளைப் போன்று பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான காணியென கருதி எமது சந்ததியினருக்கு எதையும் நாம் பேணிப்பாதுகாக்காமல் இருப்போமானால் எதிர்காலத்தில் எச்சசொச்சமாக எதுவும் இருக்கப்போவதில்லை.

கடந்த காலங்களில் எமது மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக மேற்கூறப்பட்டனவே இருக்கின்றன. இவற்றை பாதுகாப்பதன் மூலமே இனி வரும் பரம்பரையினர் இச்சமூகத்தில் வாழக்கூடியதாக இருக்கும்.

இன்று பெருந்தோட்டப் பிரதேச வளங்களை வெளியாருக்கு கைமாற்றுவது அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் நாம் வாழும் வீடு, நிலம், மரக்கறித் தோட்டம் என எதுவும் எமக்குச் சொந்தமாக இருக்கப்போவதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தோட்டங்களை விட்டு வெளியேறும் மத்தியதர வகுப்பினரின் எண்ணிக்கை தற்Nபுhது அதிகரித்து வருகின்றது. இவர்கள் தோட்டப்புறங்களை விட்டு நகரப்பகுதிகளுக்கு வந்துவிட்டாலும் தாம் வாழ்ந்த எமது முன்னோர் விட்டுச்சென்ற அந்த நிலத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சமூகம் கல்விகற்று உயர்வடையும் போது சமூக நகர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருப்பினும் எமது உறவுகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தோட்டங்களில் திருவிழா, பண்டிகைகள், விழாக்கள், சமய சம்பிரதாய நிகழ்வுகளில் நாம் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் எமது உறவுகளை வளப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நாம் வந்த சமூகத்தை ஒருமுறை திரும்பிப்பார்க்க வேண்டும். எமக்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள், செய்த அர்ப்பணிப்புக்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுபோல எதிர்கால எமது சந்ததியினருக்கும் நாமும் எதனையா வது சேர்த்து வைத்திருக்க வேண்டும். எம்மில் பலர் இன்று வரையிலும் எதுவித தூரநோக்குச் சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலையில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு விடயங்களில் முன்னேறி வருகின்றனர். லயன் காம்பராக்களில் வாழ்ந்து வருகின்ற போதிலும் அதனைப் புனரமைத்து வீட்டுக்கு மின்சாரம், தோட்டப்பாதை கள், நலன்புரிச் சேவைகள் போன்ற விடயங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் ஒட்டுமொத்த மலையக சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையிலானோரே தமது சொந்த முயற்சிகளின் மூலம் இவ்வாறு முன்னேறியிருக்கிறார்கள்.

அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்ற போதிலும் அதன் பயன் பெருந்தோட்ட மக்களைச் சென்றடைவதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. மலையகத்தில் வாழும் சமூகத்தினருக்கும் அரசியல், பொருளாதார, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் போன்ற விடயங்களில் அவர்களின் பங்களிப்பானது அளப்பரியது.

அரசியலில் சில வேளைகளில் பதவிக்கு வரும் அரசாங்கங்களை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களைப் பொறுத்த வரையில் காணி, வீடு, நிலவுரிமைகள் இதுவரை கிடைக்கவில்லை என்பது உண்மையாக இருப்பினும் கிடைத்திருக்கும் வீடுகளையும் வீட்டுத் தோட்டங்களையும் பேணிப்பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். 200 வருடங்களாக வாழ்ந்த ஒரு சமூகத்தை எவரும் இலகுவில் அவ்விடத்திலிருந்து அகற்றிவிட முடியாது. அந்த மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள கிடைத்த வீடுகளையும் காணித்துண்டுகளையும் தொடர்ந்து பராமரித்து பேணிப்பாதுகாக்க வேண்டும். ஒருசிலர் தமக்கு கிடைத்த 7 பேர்ச் காணித்துண்டையும் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் கட்டப்பட்ட வீட்டையும் வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்வதும், வாடகைக்கு விடுவதென்பதும் எதிர்கால வாழ்க்கையை தொலைப்பதற்கு சமமான விடயமாகும்.

இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதைதவிர்த்துக் கொள்வதுடன் இந்நடவடிக்கைகளுக்கு எவரும் துணைபோகக்கூடாது.

எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லையென்று சதாகாலமும் குறைகூறிக் கொண்டிருப்பதை விடுத்து கிடைத்ததை நாம் தக்கவைத்துக் கொள்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும். இனிமேலும் இன்னொருவரில் தங்கி வாழ்கின்ற மனநிலையிலிருந்து விடுபடுவதே சாலச்சிறந்ததாகும். துன்பங்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஏனைய சமூகத்துடன் போட்டிபோட்டு தமது உழைப்பால் முன்னேறி வருகின்ற ஒரு சமூகம் என்றால் அது மலையக சமூகம் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் பெருந்தோட்ட சமூகம் முன்னேற வேண்டும்.

இவர்கள் வாழ்கின்ற சூழலில் காணப்படும் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். அந்த மக்கள் வாழும்வரையில் அவர்களுடன் இருக்கப்போகும் இவற்றை பாதுகாப்பது பெருந்தோட்ட சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.