கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
Short Story

ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு அறுபது வயதில் ஓய்வுபெற்று பிள்ளை குட்டிகளோடு ஆறுதலாக இருந்து தன் சேவைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வீட்டின் முன் விறாந்தையில் போடப்பட்டிருந்த கதிரையில் அன்றைய தினசரி பத்திரிகைகளை பக்கம் பக்கமாக புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தார் சலீம் மாஸ்டர்.

மனைவி அவசர அவசரமாக தேநீருடன் காலையில் சாப்பாட்டுக்கு முன்னர் போடுகின்ற குளிசைகளையும் கொண்டு வந்து கொடுத்தாள்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கணவனுக்கு நேரத்துக்கு நேரம் கொடுக்கும் குளிசைகளைக் கொடுக்காமல் விடமாட்டாள்.

தேநீர் அருந்தி விட்டு அக்கம் பக்கம் கிடக்கின்ற குப்பைக் கழிவுகளை நாள் தவறாமல் அகற்றிக் கொள்வான். இதனால் மனைவிக்கும் வேலைகளில் ஆறுதல் கிடைக்கும். இந்தப் பழக்க வழக்கத்தை அவர்களுடைய பிள்ளைகளும் கற்றுக்கொண்டார்கள்.

புதிதாகப் போடப்பட்டிருந்த பாதையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பையனை உற்றுநோக்கிய வண்ணம் தன்னுடைய வீட்டு முற்றத்தில் உள்ள கேற்றடியில் பார்த்துக் கொண்டு நின்றார் சலீம் மாஸ்டர்.

அவன் சைக்கிளை விட்டு இறங்கி அருகில் வந்த போதுதான் தன்னிடம் படித்த மாணவன் என்று அறிந்து கொண்டார்.

“என்னடா தம்பி இப்பள்ளிக்குப் போற தில்லையா” என்று கேட்டார்.

“சேர் நான் பள்ளிய உட்டு வெலகி ரெண்டு வருசமாப் போச்சி”

“டேய் இந்தக் காலத்தில படிக்க ஏலா என்டு நீ மட்டும்தான் வெலகி இருக்காய்”

தனக்கு படித்துத்தந்த ஆசிரியர் பேசும் போது மறுப்புத் தெரிவித்துப் பேசாமல் அமைதியாக நின்றான்.

சலீம் மாஸ்டர் என்றால் பிள்ளைகளுக்கு ஒரு தனிவிருப்பம். எடுத்ததற்கெல்லாம் ஏசாமல், பேசாமல், அடிக்காமல் அன்பு காட்டி பேசுவதால் எல்லோருக்கும் அவரை நன்றாகப் பிடிக்கும். அதனால் மாணவர்களின் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்.

கெட்டிக்காரப் பையன் ஏன் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கிறான் என்ற காரணத்தை அறிய மீண்டும் கேட்டார்.

“தம்பி இங்கே வா நீ ஏன்டா பாடசாலைக்கு போவதில்ல.”

“சேர் அதையெல்லாம் எனக்கிட்ட கேக்காதீங்க”

“பாடசாலையில் என்ன நடந்தது உனக்கு”

பரீத் எதையோ மறைத்து உண்மையைச் சொல்ல மறுக்கிறான் என்பதை மாஸ்டர் மிக நுட்பமாக அறிந்து கொண்டார். அவனிடம் இருந்த பழைய சைக்கிளில் இருக்கின்ற கழிவு இரும்புச் சாமான்கள் அவன் உழைக்கிறான் என்ற நிலையை எடுத்துக்காட்டியது.

“பரீத் உன்னைப் போல பிள்ளைகள் இந்தக் காலத்தில படிக்கிறாங்க, நீ என்னடா என்டா உடல் வருத்தி உழைக்கிறாய் அதுக்குத்தான் கேட்கிறன்” “சேர் எனக்கு படிக்க ஏலும்தான். படிக்க வேணும் என்டா காசும் வேணும் தானே அது எங்கட உம்மாக்கிட்ட இல்ல. அதனாலதான் பழைய இரும்பு வாங்கி விக்கிறன்”.

ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்கொண்டு படிக்க இயலாது என்று பிடிவாதமாக இருக்கிற பையனிடம் மேற்கொண்டு எதுவுமே கேட்க மாஸ்டருக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் இன்னும் ஒரு தரம் கேட்டுப்பார்க்க எண்ணினார்.

“டேய்தம்பி பரீத் படிப்பில கெட்டித் தனம் இருந்தும் உனக்கு பாடசாலைக்கு போக ஏன்டா விருப்பம் இல்ல.”

“சேர் பள்ளியில அதுக்கு காசு, இதுக்குக் காசு, அங்கே போக காசு என்று சொல்லி காசு கேட்டா நான் என்ன செய்யிறது.”

“தம்பி உனக்கு உம்மா, வாப்பா இருக்குதானே அவங்களுக்குக் கிட்ட கேட்டா கொடுப்பாங்கதானே”

“எல்லாத்துக்கும் வாப்பா இருந்தாத்தானே”

“வாப்பா எங்கே போயிற்றார்”

“சேர் வாப்பா சுனாமியில போயிற்றாங்க” என்று சொல்லி அழுதுவிட்டான்.

“பரீத் அழாதே உனக்கு வாப்பா இல்லை என்பது எனக்குத் தெரியாது. உன் போன்ற கெட்டிக்காறப்பிள்ளைகளுக்கு இப்படியெல்லாம் வாழ்க்கை ஏற்பட்டுவிட்டதே. சரி நீ போய் உன் தொழிலைப் பாரு.”

பரீத் வைத்திருப்பது பழைய சைக்கிள் என்றாலும் அதற்குப் பின்புறத்தில் பழைய இரும்புச் சாமான்களை கட்டி வைத்திருப்பதை அவதானித்தார் மாஸ்டர்.

“தம்பி இந்தச் சைக்கிள் யாருக்கிட்ட வாங்கினது.”

“சேர் இந்தச் சைக்கிளை காசு கொடுத்து வாங்கல்ல எங்கட முதலாளி வாடகைக்கு தந்திருக்கார்.”

“பழைய இரும்புகள் வாங்கி விற்று அதில் கிடைக்கிற பணத்தில் வாடகையும் கொடுக்கிறாயா”

“என்ன செய்யிறது சேர் கையில பணம் இல்லாட்டி இப்படித்தான்.”

அவனுடைய அன்பான பேச்சு அவருடைய உள்ளத்தை நெகிழவைத்தது. பாடசாலையை விட்டு விலகி மற்றப்பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துத் திரியாமல், எப்படியாவது உழைத்து சாப்பிடுவதை எண்ணி சந்தோசப்பட்டார் மாஸ்டர்.

வீட்டில் உழைப்பதற்கு யாருமே இல்லாததால் அவனே உழைத்து அவனுடைய தாயையும் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு பரீத்துக்கு ஏற்பட்டதால், அவன் ஓயாமல் உழைக்க வேண்டும் என்று விடாப்பிடியாய் இருப்பவன்,

வாங்கிய பொருள்களை எப்படியாவது முதலாளியிடம் கொடுத்து காசாக்கினால்தான் அன்றைய பொழுதை கடன் இல்லாம போக்கலாம் என்பதை அறிந்து வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்டான்.

“தம்பி பரீத் உனக்கு சொந்தக்காரர் யாராவது இருக்காங்களா”

அப்பிடி ஆக்கள் இருக்கிறாங்களோ என்னமோ தெரியாது எங்கட ஊட்டுக்குப் பக்கத்தில பெரிய பணக்காரர் இருக்கார்.”

போக விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதால் பரீதுக்கு கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது. இருந்தாலும் படிச்சுக் கொடுத்த நன்றிக்காக அவன் தொடர்ந்து பதில் சொன்னான்.

“சேர் நீங்க எந்தப் பள்ளியில படிச்சுக்குடுக்குaங்க”

“அதெல்லாம் முடிஞ்சு இப்ப பென்சன் ஆயிற்றன்”

“படிக்கின்ற காலத்தில எனக்கு நல்லா உதவி செய்திருக்கீங்க அதையெல்லாம் நான் மறக்கல்ல சேர்”

கடந்து போன விடயங்களையெல்லாம் நினைவு வைத்து சந்தர்ப்பம் வரும் போது சொல்லி விட்டானே இவன்தான் மாணவன் என்று மனதுக்குள் பேசிக் கொண்டார் மாஸ்டர்.

அவனுக்கென்று சொந்தமா ஒரு சைக்கிள் இல்லாததால் பெரிய கஷ்டமாக இருந்தது. உழைக்கின்ற பணம் வாடகைக்கு கொடுக்கத்தான் போதுமாக இருந்தது. இருந்தாலும் அன்றாடத் தேவைக்கு உழைத்துக் கொள்வான்.

“சேர் எவ்வளவு உழைச்சாலும் போதாமல் இருக்கிறது” சைக்கிள் ஒன்று வாங்கிக்கிட்டா கொஞ்சம் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்”

குடும்ப பாரம் பரீதை நன்றாக நசுக்குகிறது என்று மனதுக்குள் எண்ணி பரீதை ஆறுதல் படுத்தினார் மாஸ்டர். “தம்பி நீ படிக்காவிட்டாலும் பரவாயில்லை உன்னுடைய உம்மாவை நன்றாகக் கவனிச்சுக்க”

“சேர், சேர் உம்மாவுக்கும் கொஞ்ச நாளா சுகம் இல்ல அதனால ரெண்டு நாளா உழைக்கவும் போகல்ல”

பரீதுடைய பேச்சும் அன்பும் மாஸ்டரின் உள்ளத்தை புளகாங்கிதம் அடைய வைத்தது. படிக்கக் கூடிய பிள்ளைகளுக்கு அதுக்குரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. என்பதை நேரில் கண்டு கண்கலங்கினார். நாட்டில் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நல்ல நிலைமையை உருவாக்க யாராவது முன்வராத காரணத்தால், எத்தனையோ செல்வங்கள் வீணாகிப்போகிறதே. இதைப் பற்றி யாருமே கவனத்தில் எடுப்பதாகவும் தெரியவில்லையே என்று கற்பனை பண்ணினார்.

கருணை உள்ளம் படைத்த மாஸ்டர் பரீதுடைய வீட்டுக்குச் சென்று அவனுடைய தாயை நேரில் கண்டு குடும்ப நிலை பற்றி அறிய ஆவலாய் அங்கு சென்றார். அக்கம் பக்கத்து வீடுகள் வனப்புடன் காட்சியளித்துக் காணப்பட்டன. பரீதின் தாய் ஓலைக் குடிசைக்குள் இருந்து பழைய இரும்புகளை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள்.

பரீதின் தாய் மாஸ்டரைக் கண்டதும் பழைய நினைவுகள் நினைவுக்கு வர ஓடி உற்சாகமாக “வாங்க தம்பி” என்று மனம் குளிரும்படி வரவேற்றாள்.

“தம்பி மாஸ்டர் நீங்க ஆதம்பாவாட மகன்தானே”

“ஆமா ஆதம்பாவாட மகன்தான். ஒங்கள எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சுகமாக இருக்கிaங்க தானே” மாஸ்டரின் அன்பைக் கண்டு சந்தோசப்பட்டு தன்னுடைய மகனின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கமாகச் சொன்னாள். அப்போது மாஸ்டருக்கும் அவருடைய கடந்த கால நினைவுகள் உள்ளத்தில் ஏற்பட்டன.

அப்படி இருக்கும் போதே பரீத் ஓட்டமும் நடையுமாக கையில் ஏதோ பார்சலுடன் வந்து கொண்டிப்பதைக் கண்டு சந்தோசப்பட்டார்.

சேர் என்ன எங்கே போக வந்தீங்க எங்கேயாவது போக வந்தீங்களா இல்ல எங்கட வீட்டுக்குத் தான் வந்தீங்களா?

“பரீத் உன்னையும் உன்னுடைய உம்மாவையும் பார்த்துவிட்டுப் போகத்தான் வந்திருக்கன்” ஏழையாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்களை எப்படி ஆதரித்து அனுசரித்து நடக்க வேண்டும் என்று முன் கூட்டியே தன்னுடைய பெற்றோர்களிடம் கற்றிருந்தாள் பரீதின் தாய்.

பரீத் மாஸ்டரின் உடல் நிலைக்கு தேநீர் ஒத்துவராது என்பதால், ஏற்கனவே சொல்லி தடுத்துக் கொண்டார். பரீதையும் அவனுடைய தாயையும் நன்றி உணர்வோடு பார்த்தார்.

மனிதர்களுடைய வாழ்வில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்திருப்பதை அவர் ஏக காலத்தில் அறிந்திருந்தார். அதனால் எப்படியாவது பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. சொந்தமா ஒரு சைக்கிள் இல்லாமல் பிறருடைய சைக்கிளில் பழைய இரும்பு சாமான்கள் வாங்கி விற்று தன்னுடைய குடும்பத்தை வாழவைக்கிறான் என்பதை மாஸ்டர் அறிந்து தன்னிடம் தேவையில்லாமல் இருக்கிற சைக்கிளைக் கொடுக்க முன்வந்தார்.

பிறரிடம் கையேந்தி வாழ்க்கையை நடத்தாமல், உழைத்து வாழுகின்ற பக்குவத்தை இளமையிலிருந்தே கற்றுக்கொண்டவனை இன்னும் இன்னும் கேள்விகள் கேட்டு மனதை புண்ணாக்க அந்த மாஸ்டர் எண்ணவில்லை.

பாடசாலையில் இருந்து விலகினாலும் அவனுடைய எண்ணங்கள் வீணாகிப் போகாமல் இருந்தன.

பழைய சைக்கிளையாவது வாங்கிக் கொள்ள அவனால் முடியாவிட்டாலும், அதற்கான அடித்தளத்தை அவர் மறைமுகமாக திட்டம் இட்டிருந்தார்.

இருந்தாலும் பரீதிடம் அதை வெளிக்காட்டாமல் இருந்தார்.

நல்ல நோக்கத்துக்காக வீடு தேடிச் சென்ற மாஸ்டர் அவரிடம் இருந்த சைக்கிள் சாவியை எடுத்துக் கொடுத்தார். அப்போது பரீதுடைய கண்களிலிருந்து நீர் வழிந்தது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவனுடைய தாய் மாஸ்டரை வாழ்த்தினார். ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதற்கு மாஸ்டரின் மனம் நிறைவு பெற்றுக்கொள்ள அங்கிருந்து வெளியேறினார்.

(யாவும் கற்பனை)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]