கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
திவிநெகும மூலம் சுபீட்சமடையும் அம்பாறை பிரதேசம்

கிராமங்களை எழுச்சிபெறச் செய்யும் திட்டம்

திவிநெகும மூலம் சுபீட்சமடையும் அம்பாறை பிரதேசம்

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் சகல பிரதேசங்களிலும் வாழும் பிரஜைகளின் வாழ்வாதார ஜீவனோபாய மேம்பாட்டுக்காக சமுர்த்தி அதிகார சபை ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் மையமாகக் கொண்டு கிராம சேவகர் பிரிவுகள் சிலவற்றை உள்ளடக்கி பிரதேச செயலகங்கள் தோறும் கிராமங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு வலயம் என்றும் பெயரிட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடியிருப்பு- வீடு எமக்கு மத்தியில் வீட்டு வசதி தேவைப்பட்டவர்கள் அனேகம் உள்ளனர். இயற்கைக் காரணிகளின் தாக்கத்தாலும், கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளாலும் தமது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அனேகர்.

இவ்வாறான நிலையில் உள்ளவர்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டங்கட்டமாக வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பாரிய சமூகப் பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மற்றுமொரு அம்சம் வாழ்வாதார உதவிகளை வழங்கி குறித்த குடும்பங்களின் ஜீவனோபாயத்துக்கு வழிகாட்டுவதாகும்.

இதன் பிரகாரம் கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டு பால் உற்பத்தி மூலம் வருமானம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

இது தவிர கோழி, வாத்து வளர்ப்பின் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் அலங்கார மீன் வளர்ப்பு, நன்னீர், ஆழ் கடல் மீன்பிடித் தொழிலுக்கான உபகரணங்களையும் பெறத் தகுதியான குடும்பங்களுக்குப் பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கி வைக்கப்படுகின்றன.

விவசாயத்துறைக்கு உதவும் நோக்கில் விவசாயக் குளங்களைப் புனரமைப்புச் செய்தல், கட்டுகளைப் பராமரித்தல் வாய்க்கால்களை அமைத்தல் துப்புரவு செய்தல் நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்கல் கிருமி நாசினி தெளி கருவிகளை வழங்கல், மற்றும் விதைநெல் என்பனவும் விவசாய அபிவிருத்தித் திட்டப் பணி மூலம் உரியவர்களைச் சென்றடைகின்றன.

குடிசைக் கைத்தொழிலில் மற்றுமொரு வகையான நெற்குற்றும் இயந்திரம், அரிசிமா, மிளகாய் அரைக்கும் இயந்திரம், புளக்கல், வீட்டுக் கல், மதில் கல் என்பன தயாரிப்பதற்கான இயந்திரம், ஆடைக்கைத்தொழி லுக்கான தையல் மெஷின்கள் என்பனவும் உதவியாக வழங்கப்படுகின்றன.

தொழில் துறையில் பயிற்சி பெற்ற ஏராளமான இளைஞர், யுவதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வீட்டு அலங்காரப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், வினோதமான பொருட்கள் நவீன யுக்திகள் மூலம், மூலப் பொருட்களுக்கு எவ்வித விலையும் கொடுக்காமல் கிராமத்தில் கழிவுகளாக்கப்பட்ட பன்னாடை மீன் செட்டைகள், கடதாசிகள் பலகைகள் மரக்குற்றிகள் என்பனவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட சிறு தைத்தொழில் பொருட் களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக பிரதேச செயல கப் பிரிவு அதிகாரிகளின் அனுசரணையுடன் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியை நடாத்தி சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.

வியாபார நடவடிக்கைகளுக்காக பல சரக்குக் கடைகள் துவிச்சக்கரவண்டிகள், குளிரூட்டிகள் என்பன வழங்கப்படுகின்றன.

வீட்டுத்தோட்டப்பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு விதைகள் நாற்றுகள் என்பனவும் வழங்கப்படுகின்றன. மேலும், கூரைத்தகடுகள், இரும்புக்கம்பிச் சுருள்கள் மற்றும் உபகரணங்களும் அவரவர் தேவை வேலைப்பாடு என்பவற்றைக் கருத்திற் கொண்டு வழங்கப்படுவது திவிநெகுமத் திட்டத்தின் விசேட அம்சமாகும்.

சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமமும் சுபீட்சமடைந்து வருவது அரசின் வேலைத் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]