கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
யாழ்ப்பாணச் சோசலிசம் 1

யாழ்ப்பாணச் சோசலிசம் 1

“சோசலிசம்” என்ற சொல்லைக் கேள்விப்படாத வாசகர்கள் எவரும் இருக்கமாட்டார்கள், என்பது மறுக்க முடியாத உண்மை. உலக நாடுகள் பல ஒரு காலத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைமையின் கீழ் சோசலிச அணியாகவும், அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் முதலாளித்துவ அணியாகவும் இருந்தது பழைய கதையாகிப் போய் விட்டது.

மூன்றாவது உலக யுத்தம் தோன்றுமோவென முழு உலக மக்களுமே பனிப்போரின் (Cold War) வெம்மை தாளாமல் அச்சப்பட்ட காலமும் இருந்தது.

இவற்றை விபரிக்க விழைந்தால், நான் சுவைபடக் கூறப்போகும் யாழ்ப்பாணச் சோசலிசம் சுவை கெட்டுப் போய் விடுமென்பதால் கைவிடுகின்றேன்.

மிக நீண்ட காலம் அரச சேவையிலிருந்து இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது.

யாழ்ப்பாண வாழ்வியல் குறித்து நீங்கள் எழுதியவற்றை வாசித்துள்ளேன். என் அரச சேவைப்பட்டறிவால் பெற்ற 4 வகை யாழ்ப்பாணச் சோசலிசம் பற்றி எழுதுங்கள் என்றார்.

சோசலிசம் என்றால் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு வாழும் முறையாகும். நிலமானியச் சமூக முறையை ஒத்த வாழ்வியல் முறைகளிலிருந்து உருவாகிய யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் சமூக பாகுபாடுகள் உள்ளதாகச் சமூக வியலாளர்களால் கூறப்படுகின்றது. ஆயினும் மனிதர்களை மனிதர்கள் மதிக்கும் நான்கு வகைச் சோசலிசங்கள் பற்றி அந்த மூத்த உத்தியோகத்தர் சுவையாகக் கூறிய பட்டறிவை உங்களிடம் பகிர்கிறேன்.

வறுமைச் சோசலிசம், இளமைச் சோசலிசம், பல்கலைகழகச் சோசலிசம், உத்தியோகச் சோசலிசம், என்பவையே அந்த நான்கு வகைச் சோசலிசங்களுமாகும்.

முதலில் வறுமைச் சோசலிசம் என்பதனைப் பார்ப்போம்.

வறுமை வந்த குடும்பமொன்றுக்கு அதன் அடிப்படைத் தேவைகளான உணவு, உடுதுணி, இருப்பிட, கல்வி, பொழுது போக்கு, சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை இருக்கும்.

மிக முக்கியமாக உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியாது பட்டினி நிலையை எதிர்நோக்குவார்கள்.

பசி வந்தால் பத்தும் பறந்து விடும் தானே. வறுமையில் வாடும் குடும்பமொன்று தமது பசியைப் போக்குவதற்காக சாப்பிட உணவு கிடைத்தால் உண்பார்கள். இதன் போது பெரியவர், சிறியவரெனச் சமூகப் பாகுபாடு பார்க்கமாட்டார்கள். வறுமைச் சோசலிசத்தில் உணவு கிடைத்தால் போதும். வறுமை நீங்கி பணச் செழுமை வரத் தொடங்க அவர்களிடம் வறுமைச் சோசலிசம் அற்றுப் போய் விடும்.

இரண்டாவது வகை இளமைச் சோசலிசம். ரீன்ஏஜ் வயதிலும் அதற்குச் சற்றுப் பின்னான வயதிலும் பாடசாலை, ரியூசன், சக நண்பர்கள் வீடுகளுக்குப் போவார்கள், பழகுவார்கள், உண்பார்கள். இளமைத்துடிப்பில் யாவரும் சமனாகத் தெரியும். மதிக்கும் உணர்வு வரும். வயது சற்று ஏற ஏற இளமைச் சோசலிசம் மெல்ல மெல்ல அற்றே போய் விடும்.

சமூகம் இளைஞரை (ஆண், பெண்) தான் வகுத்த வரையறைக்குள் வாழப் பழக்கி விடும்.

பல்கலைக்கழகச் சோசலிசத்தை மூன்றாவதாகப் பார்ப்போம். பல்கலைக் கழகத்தில் பயிலும் காலங்களில் தாம் உயர் கல்வி கற்கும் சமூகத்தில் முன்மாதிரியானவர்களெனவும், வருங்காலத் தலைவர்களெனவும் உணர்வு பொங்கும்.

அப்போது எங்கும் எதிலும் சமத்துவம், யாவரும் கைகோர்த்து நிற்க வேண்டும், உணவு, குடிபானம், எல்லாமே எல்லோருக்கும் பொதுவானது, பேதமில்லை என்ற கருத்து வரும்.

பல்கலைக்கழகக் கல்விக் காலத்தில் சக நண்பர்களின் வீடுகளுக்கு மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்குச் செல்வது சாதாரணமான ஒன்றாகத் தெரியும்.

இதுதான் பல்கலைக்கழகச் சோசலிசம். பல்கலைக்கழகம் விட்டு விலகியதும் சமூகம் தனது பேதச் சாயங்களை அவர்கள் மீது உடனேயே பூசிவிடும்.

பல்கலைக்கழகச் சோசலிசம் காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்து விடுவது நிஜமாகி விடும்.

உத்தியோகச் சோசலிசம் என்றவுடன் அதிகம் யோசிப்பீர்கள்.

அரச, தனியார், கூட்டுறவு, நிறுவனங்களில் கடமை புரிவோர் தமது பிரதேசம் நீங்கி பிற இடங்களில் கடமை புரியும் போது, வீடுகளில் நிகழும் மங்கல, அமங்கல நிகழ்வுகளை மதிப்பார்கள். மங்கல நிகழ்வுகளில் விருந்தோம்பல் நடைபெறும். யாழ்ப்பாணத்தை விட்டு வெளி மாவட்டங்களில் கடமைபுரிவோரிடம் தான் இந்த உத்தியோகச் சோசலிசம் அதிகமாக இருக்கும்.

தாம் ஒரே பிரதேசத்தவர், ஒரே வாழ்வியல் பண்புகளைக் கொண்டவர்கள், ஆதலால் தாம் ஒருமித்துச் செயற்படுவது தமது நலன்களுக்கு நல்லதென நினைப்பார்கள்.

அந்நியோன்னியமாக விருந்தோம்பல் செய்வார்கள்.

உத்தியோக இடமாற்றம் பெற்றோ அல்லது தமது விடுமுறையில் வடக்கே யாழ்ப்பாணம் நோக்கி வரும் போது ஆனையிறவு தாண்டிய உடன் உத்தியோகச் சோசலிசத்தை மிகப் பெருமளவில் கைவிட்டு விடுவார்கள்.

சமூகம் என்ற கொதிக்கும் உலைக்குள் அவர்கள் போடப்பட்டு அவித்து எடுக்கப்பட்டு யாழ்ப்பாண மனிதர்களாக்கப்பட்டு விடுவார்கள்.

உத்தியோகச் சோசலிசத்தை பிற ஊர்களில் இருக்கும் தமது நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று கடைப்பிடிக்கும் பெருந்தன்மையான மனிதர்களும் உள்ளனர்.

பட்டறிவு மனிதர்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தால் வந்த யாழ்ப்பாணத்தின் நான்கு வகைச் சோசலிசத்தைப் பார்த்தோம். அன்பான வாசகரே உங்களுக்கும் இது போன்ற பார்வை இருப்பின் பதிவு செய்யுங்கள்.

வாழ்ந்த வாழ்வின் சுவடுகள் மீது நடந்து பார்ப்பது ஒரு சுக அனுபவம் தான்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]