கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
அமெரிக்க வல்லரசின் சிறுபிள்ளைத்தனமான செயல்

அமெரிக்க வல்லரசின் சிறுபிள்ளைத்தனமான செயல்

உலக நாடுகளுக்கு தான் தான் பொலிஸ்காரன் வேலை செய்வதாக எண்ணும் அமெரிக்கா, அழிவுப் பாதையிலிருந்து மீண்டெழுந்து அபிவிருத்திப் பாதையை நோக்கி நகரும் வளர்ச்சியடைந்து வரும் ஒரு சிறிய நாடான இலங்கை மீது இத்தனை தூரம் பழிகளை சுமத்தி எமது நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளமையானது ஒரு மாபெரும் வல்லரசு நாடொன்றின் சிறுபிள்ளைத்தனமான செயல் என்றே கூறவேண்டும்.

உலகில் எந்த நாட்டிலுமே பயங்கரவாதம் இருக்கக்கூடாது என்பதற்காக பிறிதொரு நாட்டின் அனுமதியைக் கூடப் பெறாது அடுத்த நாட்டிற்குள் அத்துமீறி அழிக்கும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, இன்று இலங்கை அரசாங்கம் தனது முயற்சியால் பல கொடூரங்களைச் செய்து வந்த ஒரு அமைப்பான புலிகளை அழித்தமை தொடர்பாக பாடம் கற்பிக்க முனைந்துள்ளமையானது வேடிக்கையாகவே உள்ளது.

ஈராக்கில் தேவையற்ற யுத்தத்தை ஆரம்பித்து நடத்திய போது எத்தனை அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்கப் படைகளால் எத்தனை ஈராக்கியர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுபோன்று ஏனைய பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் செய்த அட்டூழியங்களுக்கு அளவுகணக்கு கிடையாது. ஆனால் இவை மட்டும் மனித உரிமை மீறல் தொடர்பாக குரல் கொடுக்கும் அமைப்புகளின் கண்களுக்குத் தெரியாது. ஏனெனில், அமெரிக்காவுக்கு இவ்வமைப்புகள் பயம் அல்லது இவை அமெரிக்காவின் நிதியுதவியிலேயே இயங்கி வருகின்றன.

இத்தகைய அமெரிக்காவும், மனித உரிமை மீறல் தொடர்பான அமைப்புகளும் இன்று தமது விடயங்களை மூடி மறைத்து விட்டு இலங்கை மீது குற்றம் சாட்டுகின்றன. உண்மையில் உலக நாடுகள் பலவற்றில் அமெரிக்கா அத்துமீறி நடத்திய யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று கூறி உண்மைகள் சிலவற்றை மறைக்க இலங்கை அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. யுத்தம் நடைபெற்றது உண்மை. இறுதி யுத்தம் மிகவும் கொடூரமாக நடந்ததும் உண்மை. கனரக ஆயுதங்கள் பாவிக் கப்பட்டு நடந்த இந்த இறுதி யுத்தத்தில் புலிகளால் பணயமாக பிடித்து வைக்கப் பட்டிருந்த பொது மக்களின் சிலர் இடை நடுவில் சிக்கி உயிரிழந்ததும் உண்மை.

அதற்காக படையினர் வேண்டுமென்றே பொது மக்களைக் கொன்றனர், சரணடைந்தவர்களைச் சுட்டனர் எனக் கூறுவதெல்லாம் பொய். சனல் - 4 என இன்று படம் காட்டிவரும் தொலைக் காட்சிச் சேவை புலிகளால் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்துப் படம் காட்டுகிறது. மக்கள் இறந்து மடியும் போதும் அந்த உயிர்களைக் காப்பாற்றாது வீடியோ படம் எடுப்பதுதான் முக்கியம் எனச் சிந்தித்த புலிகளுடன் ஒப்பிடுகையில் படையினர் எவ்வளவோ மேல் என்றே கூற வேண்டும்.

புலிகளின் வீடியோ சூட்டிங்கிற்கும், துப்பாக்கிச் சூட்டிற்குமிடையில் தப்பிப் பிழைத்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காயங்களுடன் குற்றுயிராக தப்பி யோடி வந்த இரண்டரை இலட்சம் மக்களை இராணுவம் வீடியோ எடுத்து வரவேற்க வில்லை. மாறாக மருந்தளித்து, உணவு வழங்கி தங்க முகாமும் அமைத்துக் கொடுத் தனர். அவர்களை வைத்து நாளைய ஆவணப்படத்திற்கு வீடியோ எடுக்கவில்லை.

சனல் - 4 உண்மையில் ஒரு பக்கக் கதையையே கூறுகிறது, “நாங்கள் சாகிறோம், நீங்க வீடியோவும் படமும் எடுத்துக் கொண்டோ நிக்கிaங்கள்” என்று ஒரு வயதான பெண்மணி குரல் எழுப்பியதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது. அதுதான் உண்மை. எல்லாம் புலம்பெயர் தமிழ்மக்களிலுள்ள புலி ஆதரவாளர்களின் டொலர் பணப் பரிமாறல்கள் செய்யும் வேலை. மனித உரிமை மீறல் அமைப்புகள் சிலவும் இதே நிலையில்தான் செயற்படுகின்றன.

இவற்றை வைத்துக்கொண்டு ஒரு வல்லரசு நாடு உலகத்திற்கே பொலிஸ்காரன், எல்லாவற்றிலும் முதல்வன் எனக் கூறும் அமெரிக்கா, இலங்கை மீது யுத்தக் குற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது. உலகின் எந்த மூலையில் இலங்கை இருக்கிறது என் பதே தெரியாதிருந்த ஒரு காலத்தில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் களை நடத்தி, இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஒரு அமைப்பை அழித்தமையை இன்று தவறென்றா அமெரிக்காவும் அதற்குச் சார்பான நாடுக ளும் கூறவிளைகின்றன? இது அவர்களுக்குச் சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

முப்பது வருடகால யுத்தம் முடிவிற்கு வந்த பின்பும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் இழப்புகள் குறித்து ஆராய்ந்து உலக நாடுகளின் உதவியுடன் அப்பிரதேசங் களை மீளவும் துரிதமாகக் கட்டியெழுப்பும் பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வரு கிறது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு மூலமாக அறிக்கை ஒன்றினையும் தயாரித் துள்ளது. அந்த அறிக்கையிலுள்ள விடயங்களை அமுல்படுத்தவும் தயாராக உள்ளது.

ஆனால் அதற்கிடையில் ஜெனீவாவில் இலங்கை மீது மனித உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்த முனைவது அர்த்தமற்றது. வெற்றியைப் பாராட்டி அபிவிருத்திக்கு உதவியளிப்பதை விட்டுவிட்டு வசைபாடி பிழை கண்டுபிடித்து பழிபோட முயல்வது அமெரிக்காவிற்கு அழகல்ல. அத்துடன் தனது முதுகிலிருக்கும் அழுக்கைக் கவனியாது அடுத்தவர் மீது அழுக்கு எனக் கூறுவது பொருத்தமற்றது. இதனையே அமெரிக்கா இன்று செய்கிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]