கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
வஞ்சக நெஞ்சே

வஞ்சக நெஞ்சே

நெஞ்சே இந்தநா டெங்கும் தேடினும்
வஞ்சகர் இங்கு நும்போ லுண்டோ
பஞ்சமா பாதகம் அஞ்சா மல்செய்து
பஞ்சைகளை ஏய்த்து வஞ்சித்து வாழ்வு

பெற்றோரைத் துற்றிப் பிடரியில் சாய்த்து
பொறாமை யாலே பெருநோய் ஆற்றி
மற்றோரை வாழா தெனபழி வாங்கி
வாழ்வோரை கண்டால் வயிறுப்பி வீங்கு

உள்ளொன்றை வைத்துப் புறமொன்று பேசி
ஊருக்கே நல்லவ ராகிடும் தாசி
சொல்லொன்று போனால் திரும்பிடா தறிவாய்
செய்வினை செய்து சுகப்படா தழிவாய்


அப்பாவின் நினைவுகளுக்கு...

- கவிஞர் எஸ். ரபீக் -

அப்பா என்று
அழைக்க
இரண்டு மூன்று
பிள்ளைகள் எனக்கு

ஆனாலும்
உங்களை நினைத்தால்
குழந்தையைப் போல
அழுகிறேன்
அப்பா!

என் கண்களுக்குள்
இன்னும்
ஈரம் காயாமல்
இருக்கும்
உங்கள்
வியர்வைத் துளிகளே
இந்த கவிதை தீபத்தை
ஏற்றி வைக்கிறது

வாழ்க்கையோடு
வழக்காடினாலும்
எப்போதும்
எங்களுக்கு
கிழக்காகவே
இருந்தீர்கள்

வாழ்க்கையில்
நீங்கள் நம்பியது
நம்பிக்கையைத்தான்
இறுதிவரை
அதனுடன்

வாழ்ந்தீர்கள்
பொறாமை
உங்களோடு
கோபப்பட்டது
உங்கள் இதயவாசலில்
அதற்கு
இடமில்லை என்பதால்
தனிமையை
முள்ளாகப் பார்க்கும்
இந்த உலகத்தில்
அதனை
பஞ்சு மெத்தையாக
பார்த்தவர்
நீங்கள்

தூக்கத்தில் கூட
நீங்கள்
கனவு கண்டதில்லை
உயரமான
ஆசைக்கோட்டைகளும்
உங்களிடத்தில்
இருந்ததில்லை
உங்கள்
எண்ணங்கள் எல்லாம்
குழந்தைகளாய்
தரையிலேயே
விளையாடின

ஒரு நாளில்
நீங்கள் பேசும்
வார்த்தைகளை
எண்ணிவிட முடியும்
வார்த்தைகளை
மருந்தைப் போல
அளந்து பேசுவீர்கள்

அப்பா
உங்களிடம்
ஒரு கேள்வி
வாழ்க்கைப் புத்தகம்
உங்கள் காலடியிலேயே
கிடந்தது
ஒரு முறையேனும்
ஏன் அதை

நீங்கள்
படித்துப்பார்க்க
விரும்பவில்லை?


தந்தையே!

- றிஸ்மியா ஜுனைட் -

கண் இமையாய் அடைகாக்கும்
என் உயர்ந்த தந்தையே!
நிஜமான உங்கள் பாசம்
நிழலாய் வரும் நேசம்
எல்லாமே எமக்குள் துறமாய்!

அன்புக் கோர் அவதாரமாய்
அறிவுக்கோர் ஆசானாய்
நெஞ்சினில் நேர்மையுடன்
பார்வையில் பரிவுடன்
ஊக்க மளிப்பதில் உயர்வாய் நிற்கும்
உத்தமரே!

செல்வச் செழிப்பால் செல்வமாய் நாம் வாழ
சுமைத் தாங்கியாய்- எமைத் தாங்கும்
தந்தையே!
வெளிநாடு எனும் மோகம்
துறந்து
வெறிச்சோடிக் கிடக்கும்- எம்
குடும்ப பூங்காவிற்கு
வந்துவிடு நிரந்தரமாய் இங்கே
பூக்கள் வாடிக்கிடக்கிறது உன்
வரவினைக் காணாது


தே யமானம்

- ஏ. கந்தையா -

நுரைத்து
நுரைத்து,
உள்ளே புகுந்து
எதிர்த்து
எதிர்த்து,
அழுக்கைப் பிடித்து
கழுத்தை நெறித்து
நெட்டித் தள்ளி,
ஆடையை
தூய்மைப் படுத்தும்
சவர்க்காரத்திற்கு
வாழ்வு
என்றும்
தேய்மானம்!
இப்படிக்கு
ஓர் ஆசிரியன்...?


- மூதூர் ஜாபீர் -

அம்மாவைப் போல யாருமில்லை- அவள்
அன்புக்கு ஈடு ஏதுமில்லை
அழுகையில் கொஞ்சி அணைத்திடுவாள்
அறிவமுதூட்டி வளர்த்திடுவாள்

கண்ணைப் போல காப்பவளாம்
கருணை உள்ளம் கொண்டவளாம்
கல்விக் கண்ணைத் திறந்தவளாம்
கனிவாய் பேசி மகிழ்பவளாம்

உதிரத்தைப் பாலாய் தருபவளாம்
உயிரிலும் மேலாய் காப்பவளாம்
உயர்வுக்கு படியாய் இருப்பவளாம்
உலகம் போற்றும் உத்தமியாம்

வாழ்வில் வசந்தம் போன்றவளாம்
வரும் துன்பம் துயரம் பொறுப்பவளாம்
வெற்றிக்குத் துணையாய் இருப்பவளாம்
வீரத் தாயெணும் புகழுக் குரியவளாம்,


- ஏ.ஆர். நவாஸ் -

இரவு நேர
இதமான காற்றுடன்
மோகன கீதமிசைக்கும்
தவளைச்சத்தம்

புது மணப் பெண் போல
வெட்கப்பட்டு
தலை குனிந்து
தரணி பார்க்கும்
மரக்கிளைகள்

வெட்கமில்லாமல்
மேனி தடவும்
காமக் காற்றின்
ஸ்பரிஷம்

பால் போல
தொலை தூர தெரியும்
வானப் பெண்ணவள்
நெற்றியில்
பெளர்ணமிப்
பொட்டு

குளிர் தாங்காமல்
புல்லரிக்கும்
வாடைக்காற்றின்
வருடல்

முற்றத்து மல்லிகை போல
கருமேகக் கூந்தலில்
விண்மீன்
பூக்கள்

நிஜமெல்லாம்
கண்மூடி
கனவுப் பேய்களின்
கண் விழிப்பு
ஆரம்பம்

ஆரோகணத்துடன்
அவரோகணமும்
சேர்ந்து
ஆளைத்தூக்கும்
ஆராட்டுப் பாட்டு

இதுவுமோர்
அதிசமயம்
இரவின்
இரகசியம்


என்று விடியுமோ?

- அருள்பிரகாஷ் பிரியா -

எரிபொருள் விலை ஏழைகளை
எரிக்கும் காலத்தீயாக
தரணியில் உலவிட குப்பிலாம்பிற்கு
கூட வழியில்லா மக்களினமிங்கே

மண்ணெண்ணெய் விலையேற
கண்ணீரெண்ணெய் தினம் வார்த்து
பட்டினியெனும் புதுவகை உண்டி
சமைத்து வாழுமினமிங்கே

சில்லறைகள் கூட கண்ணீர்த்துளிகளாகி
ஏழையர் வீட்டிலே! இதையறிந்து
நீயும் நிம்மதியாய் ஓரிடம்
நிரந்தரமாய் கேட்பது நியாயமா?

இன்பங்கள் மட்டும்
வலியவருக்கு உறவா?
துன்பங்கள் மட்டும்
வறியவருக்கே உறவா?

தேயிலைச் செடிக்கு உரமாகி
தன் உணர்வை இழந்தவர்களிடம்
நீயும் எதை தான்
இன்னும் உறிஞ்ச வந்தாயோ?

இரத்தம் கூட உடலில் இல்லை
அதையும் தானமாக அட்டைகளுக்கு
வார்த்து செட்டைகளாக இருக்கும்
இவர்களிடம் எதை பறிக்க உத்தேசம்?

சுள்ளிகளை அள்ளி தீ மூட்டிய
இவர்கள் சல்லிகளை விற்று
தமக்குத்தாமே உயிர்க் கொள்ளிகளாக
நிலை மாறிய வண்ணம் நாளுமே

வயிற்றுத் தீயை அணைக்க விறகுத் தீ
மூட்டிட பச்சைப் புகையாகி ஆஸ்துமாவை
சமைக்க! இருளோடும் புகையோடும்
போராடும் இவட்கு என்று விடியுமோ?


மானோடும் மலைமீது அருளாட்சி

- கவிஞர் நிலாதமிழின் தாசன் -

மானோடும் மலை மீது அருளாட்சி- நித்தம்
மாறாது ஈசனவன் திருக்காட்சி
தேனாகத் துள்ளியலை இசைபாடும் - ஈசன்
சேவடியே தஞ்சமென உளம் நாடும்

தமிழ் வேந்தன் குளக்கோட்டன் திருப்பணிதான்- நன்கு
தழைத்தெழுந்த ஆலயமும் அருட்கனிதான்
திமிரோடு பறங்கியர்கள் அழித்தார்கள்- எங்கள்
தீந்தமிழர் சேர்ந்து மீண்டும் அமைத்தார்கள்

திருக்கோண மலைமீது அமர்ந்திருந்தே- உமா
தேவியுடன் அருள் மொழிவான் கோணேசன்
உருக்கமுடன் வருமடியார் வருத்தமெல்லாம்- முற்றாய்
ஒரு நொடிக்குள் அன்புடனே துடைத்தெறிவான்

சம்பந்தன் தேவாரம் நிதம் ஒலிக்கும் - உயர்
சந்தனமும் சவ்வாதும் மிக மணக்கும்
கும்பிட்டால் புதுவாழ்வு அவன் தருவான்- வாழ்வில்
கூட நிதம் வழித்துணையாய் அவன் வருவான்

சுற்றிவர அலைதழுவும் மலை வாசன்- மாந்தர்
துயர் களைந்து மகிழ்வுதரும் உமைநேசன்
பற்றி அவன் பதம் தொழுது பாடுங்கள்- வாழ்வில்
பட்டதுயர் நீங்கக் கண்டு ஆடுங்கள்


கண்ணுறங்கு மகளே!

- மூதூர் எம். எம். ஏ. அனஸ் -

வான மதியின் வடிவாக
வந்தென் வரமாய் வாய்த்திட்ட
கான மயிலே கனியமுதே!
கதறி நீயும் அழலாமோ!

ஆன அழகு அத்தனையும்
அமையப் பெற்ற என்மகளே!
ஏனோ நீயும் அழுகின்றாய்
எதற்கு என்று சொல்லாயோ!

வேங்கை போன்ற உன் தந்தை
வாழ்வது உனக்கே என்றுள்ளார்.
தாங்க மாட்டார் உன்னழுகை
தங்க மகளே கண்ணுறங்கு

அரியை நிகர்த்த அண்ணன்மார்
அன்புத் தங்கை உந்தனுக்குச்
சிறப்பே என்று இருப்பதனால்
சீக்கிர மாகக் கண்ணுறங்கு

எந்தக் குறையும் இல்லாத
ஏற்றம் யாவும் அமைந்திட்ட
நந்த வனமே! என்மகளே!
நன்றாய் நீயும் கண்ணுறங்கு

உன்னத மாக உலகினிலே
உன்னை நானும் வளர்த்திடுவேன்
அன்பின் மகளே ஆருயிரே!
அழுகை நீக்கிக் கண்ணுறங்கு


தொ டரும் ந்தரவுகள்

- எம். ஏ. றமீஸ் -

காத்திருப்புக்கள் எல்லாம்
கனவாகின்றன...
நிஜத்தின் நிழலில்
உண்மைகள் புதைந்ததனால்

தொடர்புகள்
துண்டிக்கப்பட்டாலும்
உன் -
தொந்தரவுகள்
தொடர்கின்றன.

உன் அன்பு
என்னை சிறைப்பிடிக்கிறது
உன் அழகு
என்னை சித்திரவதைப்படுத்துகிறது

விழி உறக்கம்
மறந்து
வெளி உறவு
துறந்து
இன்றும் உன்னை
நினைத்துக் கொண்டு...
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்தபடி!!


புயலாக மாறி விடாதே!

- பாயிஸா கைஸ் -

புயலாக மாறி விடாதே!
இளந் தென்றலே
தினம் தினம் வந்து
என்னை முத்தமிடுகின்றாய்
நான் என்னை மறந்து
சந்தோஷ மழையில்
நனைகின்றேன்!

சோகமான வேளையிலும்
என் நெஞ்சோடு
சொந்தம் கொண்டாடி

பரவசத்தை பிரசவிக்க
வைக்கின்றாய்
நானோ
உச்சி வானைத்
தொடுகின்றேன்!

இதயத்தில் சூழ்த்திருக்கும்
இருளினை அகற்றி
ஒளி விளக்கேற்றுகின்றாய்
நான் சந்தன மலராய் மலர்ந்து
மணம் வீசுகின்றேன்.
நடைப்பிணமாய்
நித்தமும் நான்
உலவிய போதுதான்
உன் தரிசனம் கிடைத்தது
தென்றலே நீ
தேகம் குளிர
உயிரூட்டி என்னை
உதயம் காண வைக்கின்றாய்

பொழியும் அன்பினை
அம்பாக நெஞ்சில்
ஏவி விடாதே!
தென்றலே
உன் சுகமான தழுவலில்தான்
என் தேகமே
வேகமாய் குளிர்கின்றது!

நித்தமும் நீ
என்னை தழுவுகின்றாய்
ஒரு நாளாவது
புயலாக வந்து
தாக்கி விடாதே!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]