கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
ஐக்கியத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்த அட்டன் மகளிர் தின நிகழ்வுகள்

ஐக்கியத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்த அட்டன் மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியில் கடந்த 8ம் திகதி கொண்டாடப்பட்டது. இலங்கையில் மலையகம் உட்பட நாடளாவிய ரீதியிலும் பல்வேறு அமைப்புக்கள் மகளிர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடின.

கிராமியப் பெண்களை வலுவூட்டி வறுமை பட்டினியை முடிவுக்கு கொண்டுவருதல், எழுச்சியூட்டும் எதிர்காலத்திற்காக இணையும் பெண்கள் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின விழா கடந்த 08,09 ஆகிய திகதிகளில் ஹட்டன் நகரில் நடைபெற்றது.

இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும், செளமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற ஆயுட்கால உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை யில் ஹட்டன் ளி.றி.தீ. கலாசார மண்ட பத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. பெண் உரிமை, பெண்கள் தம்மை பொருளாதார ரீதியாக தம்மை வலுப்படுத்தி கொள்வதற்கு வழிசமைக்கும் கருத்தரங்குகளும், சூழ்நிலை செயற்பாடுகளும், கண்காட்சிக் கூடங்களும், இலவச மருத்துவ முகாம், பெண்களுக்கான விசேட விளையாட்டுப் போட்டி என பல்வேறு அம்சங்கள் மகளிர் தின விழாவை அலங்கரித்தன.

இதேவேளை இதுவரை காலமும் செளமிய மூர்த்தி தொண்டமான் ஞாப கார்த்த மன்றத்தின் கீழ் இயங்கிவரும் நவசக்தி செயற்றிட்டத்தின் ஊடாக சுயதொழில் ஊக்குவிப்பு தொகையைப் பெற்று தொழில் செய்யும் பெண்களின் செயற் பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த கண்காட்சி கூடங்கள், பொலன்னறுவை பிரதேச பெண்களின் சுயதொழில் கண்காட்சி கூடங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கால்நடை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், மில்கோ தனியார் நிறுவனம், தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை, வரையறுக்கப்பட்ட கால்நடை ஒன்றியம், செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம், பிரஜா சக்தி, நவசக்தி செயற்றிட்டம் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம், ஆகியவற்றின் கண்காட்சி கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவின் முதற்கட்டமாக பெண்கள் கீழைத்தேய மேலைத்தேய இசை முழங்க ஊர்வலமாக ஹட்டன்ளி.றி.தீ. மண்டபத்திற்கு வந்தனர். விழாவில் பங்கு கொண்ட பெண்களுக்கு சாரி, கையுறைகள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன் உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பெண்களின் கலை நிகழ்ச்சிகள் வந்தோரை பெரிதும் கவர்ந்தன. தென்னிலங்கையில் இருந்து வந்த பெண்கள் மலையகப் பெண்களுடன் இணைந்து நிகழ்வுகளில் பங்கு கொண்டமையானது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தையும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

அன்று மலையக பெண்கள் தோட்டத்தில் கொழுந்து பரிப்பதற்காக 1815 இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தற்போது இலங்கை பொருளாதாரத்தில் முதுகெழும்பாக திகழ்கின்றனர். இவர்கள் தற்போது பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து கல்வியாளர்களாகவும், மருத்துவர்களாக வும், சட்டத்தரணிகளாகவும், புத்திஜீவி களாகவும் எழுச்சி பெற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்; இலங்கையில் பெண்கள் மதிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு உலகில் முதற் பெண் பிரதம மந்திரியாக சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவானமை ஒரு எடுத்துக் காட்டாகும். நாடும் வீடும் நலம் பெற பெண்களின் பங்களிப்பு மிக மிக இன்றியமையாததாகும். பெண்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அவர்களின் ஆக்கபூர்வமான முயற்சிகள் பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.

பெண்கள் சுய தொழில்களில் ஈடுபட முன்வர வேண்டும். இதற்கென பிரஜாசக்தி, நவசக்தி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பல சுய தொழில்களையும் உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அமைச்சின் உதவியுடன் முச்சக்கர வண்டி மூலம் பால் சேகரிக்க சுமார் 50 பெண்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். நவசக்தி திட்டத்தின் ஊடாக கடன் உதவிகளைப் பெற்ற பல பெண்கள் பல சுயதொழில் முயற்சிகளின் மூலம் முன்னேறி வருகின்றனர்.

இத்திட்டம் தற்போது விஸ்தரிக்கப்பட்டு வருவதுடன் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அத்துடன் பெண்கள் தங்கள் கல்வி நிலையிலும் முன்னேற வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் .இ.தொ.கா. தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க, மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]