கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
சில தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடு தமிழினத்தின் எதிர்காலத்திற்கும் பெரும் சாபக்கேடே?

தமிழ் அரசியல்வாதிகளையும், பிரபாகரனையும் உச்சக்கொப்பில் ஏற்றிவைத்ததன் விளைவு :

சில தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடு தமிழினத்தின் எதிர்காலத்திற்கும் பெரும் சாபக்கேடே?

புத்திஜீவிகள், கல்விமான்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் கடும் சீற்றம்

இனியாவது புத்திசாலித்தனமாக நடக்க வேண்டுகோள்

இந்நாட்டில் தமிழர் தொடர்பான இனப்பிரச்சினை ஆரம்பமான காலம் முதலே நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்கள் பலவும் தமதினத்திற்கு சார்பாக நடந்து கொள்வதாக தமக்குள் எண்ணி அப்பிரச் சினையை அன்று முதல் இன்று வரை பெரும் சிக்கலுக்குள் தள்ளிவிட்ட நிலையையே காண முடிகிறது.

டட்லி - செல்வா, பண்டா - செல்வா, சிறிமா - சாஸ்திரி, ஜே. ஆர். - ராஜீவ், ரணில் - பிரபா என்று இந்நாட்டில் தீர்வைக் காண முயற்சிகள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தத் தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாது செயற்பட்டமையைக் காண முடிகிறது.

சுமுகமான தீர்வு எட்டப்படும் சூழ்நிலைகளில் இருதரப்பு இனவாதிகளிடமிருந்தும் எதிரான கருத்துக்களை வேண்டுமென்றே கேட்டு எழுதி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தடுத்து வந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. கேட்டால் தமிழினத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்ற ஒன்றைக் கூறி பலரதும் வாயை அடைத்து விடுவார்கள்.

ஆனால் அது அவர்களது விற்பனைக்காக என்பதுவே உண்மை.

இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் நீண்டு, இனங்களிடையே இவ்வளவு தூரம் குரோதங்கள் வளர்ந்து மாமிச வெறி கொண்டு இரு இனங்களிலும் ஆட்கள் உருவாக அரசியல் வாதிகளை விடவும் ஒருசில தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களே பிரதான காரணமாக அமைந்து வந்துள்ளன என்று களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதில் உண்மை இருக்கிறது.

தமிழ்த் தலைவர்களையும், பிரபாகரனையும் உச்சக் கொப்பில் ஏற்றிவைத்து அவர்களுக்கு தமது வீரமான செய்தித் தலைப்புக்களால் புலிப்பாலை ஊட்டி வைத்ததன் விளைவையே தமிழினம் இன்று முள்ளிவாய்க்காலில் முடமாகிய நிலையில் தப்பிப் பிழைத்து வருகிறது. தமிழ் மக்கள் முடமாகவாவது எஞ்சிய உயிர்களுடன் வாழ்வதைக் கூடப் பொறுக்காத இந்தச் சில ஊடகங்கள் இன்று ஜெனீவாவிற்குத் தூது அனுப்பி முடமான நிலையிலாவது வாழும் தமிழினத்தைத் தூக்கில் தொங்கும் நிலைக்குத் தள்ளிவிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் இதனையே நாசூக்காக கெளரவமான மொழியில் கூறியுள்ளார். எனவே இனியாவது இத் தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் தமிழர் பிரச்சினை நல்லதோர் தீர்வைக் காணத் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனப் பொதுமக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் மதத் தலைவர்கள் பலரும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]