புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை

இனப்பற்றுடன் தாய் நாட்டுப் பற்றுக்கும் முன்னுரிமை அளித்த தலைவர்

இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை

தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம்

விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே!

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும் நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்ததும் விடயத்தை அதன் அர்த்தத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத சிலர் அவர் மீது ஏறிப்பாய்ந்தனர். ஆனால் இப்போது சம்பந்தன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தமிழ்த் தலைவர்களையும், அதேபோன்று விதண்டாவாதத்தை மட்டுமே குதர்க்கமாகப் பேசிவரும் ஓரிரு பொது மகன்களையும் தவிர ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே ஏற்றுக் கொண்டுள்ளது.

எந்தவொரு நிலையிலும் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையிலோ அல்லது அந்த இனத்தைப் பிறர் குறைத்து மதிப்பிடும் வகையிலோ தமிழ்க் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை என்பது தற்போது விளக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டில் ஏனைய இனங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழப் போகும் நிலையிலும், தீர்வை வென்றெடுத்த பின்னர் அரசாங்கங்களுடன் இணைந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது.

இந்நிலையில் தாய்நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டு அதே தாய் நாட்டில் எவ்வாறு ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ முடியும்? ஜெனீவா மாநாடு முடிந்ததும் தமிழருக்கு தனிநாடு பிரித்துக் கொடுக்கப்பட்டு விடுமா? இனி இலங்கைக்கும் தமிழருக்கும் தொடர்பு இல்லையென்று ஆகிவிடுமா? எனும் கேள்விகளுக்கு புலம் பெயர் நாடுகளில் அந்நாட்டுக் குடியுரிமையும், வட்டியில்லாக் கடனில் இரண்டு வீடுகளும் வாங்கி வசதியாக வாழும் மக்களுக்கு பதிலளிக்க முடியாது.

வடக்கிலும் கிழக்கிலும், என்னமும் யுத்த வடுக்களிலிருந்து விடுபட முடியாது ஏதோ வாழ்கின்றோம் என்று வாழ்ந்துவரும் மக்களுக்குத்தான் மேலெழந்த கேள்விகளுக்கு விடை கூறமுடியும். எனவே இம் மக்களின் நிலையை உணர்ந்தே சம்பந்தன், இம்முடிவைத் தலைவருக்குரிய சாணக்கியத்துடன் எடுத்துள்ளார். அதனை, இன்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இனப்பற்றுடன் அவர் நாட்டுப்பற்றுக்கும் முன்னுரிமை அளித்து தமிழருக்குத் தானே சரியான தலைவர் என்பதை முழு உலகிற்கும் உணர்த்தியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.