கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
அம்பாறையில் 150,000 ஏக்கரில் நெற்செய்கை

விவசாயத்துக்கு புத்துயிரளிப்பு:

அம்பாறையில் 150,000 ஏக்கரில் நெற்செய்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி யும் அச்சமற்ற சூழ்நிலையும் அழிந்து போன விவசாயத்துறைக்கு புத்துயிர்அளித்துள்ளது. கடந்த 30 வருடகால யுத்தம் காரணமாக விவசாய நிலங்கள் யாவும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் தரிசு நிலங்களாக மாறின.

ஆனால், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சுமுகமான நிலை விவசாயிகளை மீண்டும் உத்வேகமடையச் செய்துள்ளது.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்ட விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால் என்றுமில் லாத அளவுக்கு ஓர் அங்குல நிலம் கூட விடுபடாத அளவுக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப் பட்டது.

இம்மாவட்டத்தில் உள்ள சுமார் ஒரு இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து ஐந்நூறு ஏக்கர் விவசாயக் காணிகளில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கரில் இம்முறை மகாபோக விவசாயம் மேற்கொள்ளப்பட்டதனால் வழமைக்கு மாறாக அறுவடை அதிகரித்துள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சந்தையில் நெல்லின் நிரம்பல் அதிகரித்ததனால் கறுப்புச் சந்தை வியாபாரிகள் நெல்லின் உத்தரவாத விலையை விட மிகக் குறைந்த விலையில் நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்தனர்.

அதிக இலாபம் பெறும் வர்த்தகர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கம் உடனடியாக நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு ஆயிரம் மில்லியன் ரூபாவையும், அரசாங்க அதிபருக்கு நூறு மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்ததனால் மிகவும் கீழ் மட்ட நிலையிலிருந்த நெல்லின் விலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

அரசாங்கம் ஒருகிலோ நெல்லின் உத்தரவாத ஆகக் குறைந்த விலையாக நாடு - 28 ரூபாவாகவும், சம்பா - 30 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்திருந்த போதிலும் தனியார் வர்த்தகர்கள் நாடு 20 ரூபாவாகவும் சம்பா- 23 ரூபாவாகவுமே கொள்வனவு செய்தனர்.

மேலும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சேனாநாயக்கா சமுத்திரத்தின் வளம் குன்றாத வகையில். அதனை பேணிப்பாதுகாத்து வருகின்றது.

சேனாநாயக்கா சமுத்திரத்தின் நீர்க்கொள்ளளவு ஏழு இலட்சத்து எழுபதாயிரம் ஏக்கர் அடி நீரைக் கொண்டுள்ளதுடன் சுமார் 110 அடி ஆழமும் கொண்டதாகும். இதன் மூலம் வருடத்தில் இரு தடவைகள் (யாழ மகா போகம்) சிறுபோகம், பெரும் போகம் என்ற வகையில் தலா ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ஏக்கர்காணிக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குகின்றது.

அம்பாறை மாவட்ட விவசாயிகளின் கண்ணாக இருந்த நெற் களஞ்சியசாலைகள் பயங்கரவாதத்தில் அழிந்து போயின. அழிந்து போன அல்லது பயன்படுத்தப்படாது கைவிடப்பட்ட களஞ்சியசாலை களை முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ தனியாருக்கு ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அனுமதி வாங்கியமையினாலும் விவசாயிகளின் நெல்லைக் களங்சியப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அக்கரைப்பற்று, நிந்தவூர், அட்டாளைச்சேனை, தம்பட்டை காஞ்சிரங்குடா, பொத்துவில், அக்கரைப்பற்று அம்பாறை வீதி களஞ்சியசாலை என்பன ஏதோ ஒரு வகையில் மூடப்பட்டதனால் விவசாயிகள் பெரும் அவஸ்தைக் குள்ளாகினர்.

இந்நிலை இன்று மாற்றப்பட்டுள் ளது. அம்பாறை மாவட்டத்துக்கு இவ்வருடத்திலிருந்து நியமனம் பெற்று வந்த அரசாங்க அதிபர் நீல் டீ. அல்விஸ் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக மூடப்பட்ட நெற்களஞ்சியசாலைகள் நெற் சந்தைப்படுத்தும் சபையினால் பொறுப்பேற்கப்பட்டு நெற் கொள் வனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திட்ட அமைதிச் சூழ்நிலை, யுத்தம் முடிவடைந்தமை , எல்லாத் தரிசு நிலங்களும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டமை, உரமானியம் சில விவசாயிகளுக்கு தரமான விதை நெல்கள் இலவசமாக வழங்கப்படல், விவசாயப் போதனாசிரியர்களின் அறிவுரைகள், நெல்லின் உத்தரவாத விலைத்திட்டம், நெற் சந்தைப்படுத்தும் சபை, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நெற் கொள்வனவில் ஈடுபட்டுள்ளமை, போட்டிச்சந்தை உருவாக்கம். உடனடிப்பணம் என்பன போன்ற காரணிகளினால் விவசாயம் மேம்பட்ட நிலை அடைந்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் அரிசி இறக்குமதிக் காக அரசு செலவிடும் அந்நியச் செலாவணி மீதப்படுத்தக் கூடிய வாய்ப்புக் கிட்டும் என்பதில் ஐயமில்லை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]