கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11
SUNDAY MARCH 04, 2012

Print

 
வெற்றித் திசையின் இலக்கு புலப்பட்டது

வெற்றித் திசையின் இலக்கு புலப்பட்டது

கிழக்கு திசை பொட்டுவைத்து கொண்டது
 

கலைஞர் மோகன்குமாரின்

35 வருட கலைப்பணிக்கு புகழாரம்

சமுகப் பயன்பாடு என்பது..

அடை மொழிகளால் அடுக்கு மாடி கட்டுவதல்ல ஆவணப்பதிவுகளால் அரச மாளிகையை கட்டி எழுப்புவதே. மோகன் குமாரின் திறமைகள் வெறும் அடுக்குமாடியல்ல பெரும் அரசமாளிகை என்பதற்கு கட்டியம் கூறியது அவரது 25 வருட கலைச்சேவைக்கு எடுக்கப்பட்ட பாராட்டுவிழா.

இவ்விழா கடந்த 26.02.2012 மாலை டவர் அரங்கில் சாகித்தியரத்னாபேராசிரியர் சபா ஜெயராசா தலைமை யில் நடைபெற்றது கிரு ஷ்ண கலாலயம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் கலாலயத்தின் தலைவர் தியாககுமார் வரவேற்புரை நிகழ்த்தினார் பிரபல பாடகர் மஹிந்தகுமார் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தார்.

பேராசிரியர் தமது உரையில்...

நடிகராகவும் நெறியாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கும் மோகன்குமார் அரங்க முகாமைத்துவத்திலும் வல்லவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆற்றுகை மற்றும் அரங்கத் திறன்களில் மற்றுமொரு பரிமாணம் பொருத்தமான காப்பியங்களை கையாளும் திறனாகும். சினிமா, தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகத்துக்கு உரிய தனித்துவமான தளத்தில் நின்று கலைத்தொடர்பாடலுக்கு வலுவூட்டுதல் அவரது ஆளுமையின் பிறிதொரு பரிமாணமாகிறது.

கொழுந்து அந்தனி ஜீவா தனது உரையில் தலை நகரில் எழுபதுக்கு பின்னர் நாடகத்துறைக்கு அறிமுகமான நடிகர்களில் அன்று முதல் இன்றுவரை கலையே தன்வாழ்வாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிகச்சிலரில் முக்கியமானவர் நடிகரும், நாடக இயக்குநருமான மோகன்குமார். பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கும் இவரின் பங்களிப்பு பதிவிற்குரியது என்றார்.

தலைநகர் நாடக வரலாற்றுக்கு தனிப்பெரும் பாரம்பரியம் உண்டு. இப்பாரம்பரியமிக்க வரலாற்றினை ஜிந்துப்பிட்டி என்றும் கொட்டாஞ்சேனை என்றும், வெள்ளவத்தை என்றும் பிரித்து பார்ப்பது நாடக அரங்கை மலினப் படுத்தும் முயற்சியாகும். நாடகக் கலாசாரத்தை கட்டியெழுப்ப எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது வாழ்வின் வசந்தங்களை தொலைத்துவிட்ட, ஆத்மசுத்தியோடு கலைப்படைத்த கலைஞர்களை வரலாற்றுப் பதிவுகளில் இருந்து புறக்கணிப்பு செய்வதற்கான சூழ்ச்சி இது.

வெறும் அறிக்கைகளால் அரங்கியலுக்கு நீர்வார்க்க முடியாது. அர்ப்பணிப்பும் அளப்பரிய தியாகங்களையும் செய்து, வலிகள் வேதனைகளை சுமந்து கொண்டு கலைப்பணி ஆற்றுவோர்கள் தான் நாடகமேடையில் உயிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள். இவ்வாறு மோகன் குமாருக்கு பொன்னாரமும் புகழாரமுத் சூடினார் நம்நாட்டின் முதுகலைஞரும், கலாவித்தகருமான கலைஞர் கலைச் செல்வன் கலைஞர் மோகன் குமார் பற்றிய பலரது எண்ணக் கருவூலங்களை உள்ளடக்கிய “கலைப்பொய்கை” எனும் சிறப்பு மலரை லண்டனில் இருந்து வருகை தந்திருந்த சாஹித்திய விருது பெற்ற நாவலாசிரியரான வவுனியூர் இரா. உதயணன் வெளியிட்டுவைத்தார்.

முதல் பிரதியை கல்வி மேம்பாட்டுக்கு தனது சொந்தப்பணத்தில் பெரும் பணி ஆற்றும் மேல்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அஜ்மல் மெளஜூட் பெற்றுக் கொண்டதோடு கலை இலக்கியத்துறைக்கு கணிசமான பங்களிப்பை தான் வழங்கவிருப்பதை பகிரங்கப்படுத்தினார். “கலைப்பொய்கை”யில் திறனாய்வாளர் கே.எஸ் சிவகுமாரனின் ஆங்கிலக் கட்டுரையும், பேராசிரியர் சி. மெளனகுருவின் “மோகன்குமாருக்கு நாடகம் இன்பமளிக்கும் ஒரு மரநிழல்” என்னும் ஆக்கமும் இடம்பெற்றிருந்தது. அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களின் ஆசிச்செய்தியும் பொய்கையில் பூத்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

ஹலோ என்ற சிங்கள நாடகம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கலைப்பொய்கை சிறப்பான முறையில் அச்சிடப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது. கலைஞர் மோகன்குமாரை கெளரவிக்க எடுக்கப்பட்ட இவ்விழா டவர் அரங்குக்கு மேலும் புதுப்பொலிவை தந்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]