புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
சூரியனைப் போன்ற இ. தொ. கா.வை பார்த்து தொடர்ந்தும் விமர்சித்தால் அடியோடு எரிப்பு!

பிரபாவைப் போன்று துரோகம் செய்தவன் அல்ல நான்;

சூரியனைப் போன்ற இ. தொ. கா.வை பார்த்து தொடர்ந்தும் விமர்சித்தால் அடியோடு எரிப்பு!

அரசியலில் குழந்தை என்று கூறியதையிட்டு செந்தில் சந்தோசம்

‘பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அரசியலில் குழந்தையென்று என்னைக் கூறுவதில் நான் சந்தோஷமடைகின்றேன். பிரபா கணேசன் போன்று நான் துரோகம் செய்தவன் அல்ல. மகாத்மா காந்தி, தான் மறைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில நாளேடொன்றிற்கு பேட்டியளிக்கும் போது அரசியலில் நான் ஒரு குழந்தை. அரசியலில் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்று கூறியுள்ளார். மகாத்மா காந்தியை விட நான் பெரியவன் அல்ல’

இவ்வாறு ஊவா மாகாண மின்சக்தி, எரிபொருள் தோட்ட உட்கட்டமைப்பு, இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை, சமூக நலன்புரி, நெசவுத் தொழில், கைத்தொழில் அமைச்சர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கூற்றுக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

வரலாற்றைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவருக்குச் சந்தேகமிருப்பின் என்னிடம் கேட்டுக்கொள்ள முடியும். பிரபா கணேசனுக்கு இ. தொ. கா.வைப் பற்றி தெரியாவிட்டால் என்னிடம் கேட்டு அதையும் தெரிந்து கொள்ளலாம். அவரது தகப்பனான வி. பி. கணேசனுக்கு அரசியல் ரீதியிலான அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொடுத்தது இ. தொ. கா. வே. என்பதை பிரபா உணர்ந்து கொள்ள வேண்டும். பிரபா கொடுத்த பேட்டியொன்றில், இ. தொ. கா. 1994 ல் ஒரு கட்சியில் போட்டியிட்டு விட்டு, கட்சி தாவியவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, சுயநன்மை கருதி இ. தொ. கா தலைமைத்துவம் அரசுடன் இணையவில்லை. இ. தொ. கா.வின் தேசிய சபை நிருவாக சபை ஆகியன கூடி எடுத்த முடிவுக்கமையவும், பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இ. தொ. கா.வை வலியுறுத்தி, அழுத்தங்களைக்கொடுத்ததினால் சமுதாய நலன் கருதி, இ. தொ. கா. அரசுடன் இணைந்தது. தலைமைத்துவம் மட்டும் தன்னிச்சையாக தான் சார்ந்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு அரசை ஆதரிக்கவில்லை.

இ. தொ. கா. எடுத்த முடிவு சரியானதென்று, அடுத்த வரும் தேர்தல்கள் அனைத்திலும், இ. தொ. கா. வை வெற்றிபெற வைத்ததன் மூலம் மக்கள் ஊர்ஜிதப்படுத்தினர்.

ஆனால், பிரபாவைப் போன்று, சொந்த சலுகைகளுக்காக கட்சியைவிட்டு, இ. தொ. கா. போகவில்லையென்பதையும் பிரபா தெரிந்துகொள்ளல் வேண்டும்.

பிரபாவுக்கு எதிராக, பிரபா ஏற்கனவேயிருந்த கட்சி கொழும்பு உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்நோக்கி, ஆறு பேர் வெற்றிபெற்றனர்.

பிரபாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியாகவுள்ளது.

வி. பி. கணேசன் அவர்களுக்கு ஒரு மரியாதை இருந்து வந்தது. அந்த மரியாதை தற்போது அது மனோ கணேசனுக்கு மட்டுமேயிருக்கின்றது. அதைத்தான் கொழும்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தெட்டத் தெளிவாக்கியுள்ளன.

வி. பி. கணேசன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். அவரது அரசியலையே தான் பின்பற்றுவதாக கூறியிருக்கின்ற பிரபா, கடந்த 7ஆம் திகதி தினகரன் வார மஞ்சரி பேட்டியின் போது, அவ்விடயம் தெரிய வந்தது. அது உண்மையாயின் வி. பி. கணேசனின் அரசியலை பின்பற்றுவதனால் பிரபா ஏன் ஐ. தே. கட்சிப் பட்டியல் மூலம் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

கடந்த நான்கு மாதங்களில் மூன்று கூட்டங்களை ஊவா மாகாணத்தில் நான் நடத்தினேன். அக்கூட்டங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர். கொழும்பில் பிரபாவினால் குறைந்தபட்சம் ஆயிரம் பேரையாவது கூட்டி, கூட்டமொன்றினை நடத்த முடியுமா? இந்நிலையில் எந்த முகத்துடன், என்னை விமர்சிக்க பிரபா வரவேண்டும்.

கொழும்பின் அபிவிருத்தி வேலைகளுக்கு எவ்வகையிலும் பிரபாவினால் உரிமை கோர முடியாது. அவ் அபிவிருத்தி வேலைகள் அனைத்தும், பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷவின் தொலைநோக்கு சிந்தனையினால் ஸிளிதி மூலம் முன்னெடுக்கப்பட்டவைகளாகும். பிரபாவினால் தனித்து கொழும்பில் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் மேற்கொள்ள முடியாது. என்னைப் பற்றி எதனையும் விமர்சிக்க முடியாமல் தலையில் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு சுற்றுகிறார் என்று பிரபா கூறுகிறார். அது எனது ஸ்டைல், இதுபோன்று தேவையற்ற விடயங்களைக் கூறுவதை, உடனடியாக பிரபா நிறுத்திக்கொள்ளல் வேண்டும்.

செந்திலுக்கு தொண்டமான் என்ற பெயர் எப்படி வந்தது என்று பிரபா கேட்டுள்ளார். செளமிய மூர்த்தி தொண்டமானின் கொள்ளுப்பேரன் நான். அந்நிலையில் நான் அப்பெயரை வைத்துக்கொள்வதில் என்ன தப்பு இருக்கின்றது. அதனை நான் கெளரவமாகவே கருதுகின்றேன்.

சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கு பண்டாரநாயக்க என வரும்போது இந்திராகாந்திக்கு காந்தி எனும் போது குயின்ஸ் எலிசபெத் குடும்பத்திற்கு அப் பெயர் வரும் போது எனக்கு செந்தில் தொண்டமான் என்று வருவதில் தப்பு இல்லை.

இ. தொ. கா. சூரியனைப் போன்றது. சூரியனைப் பார்த்துக் குரைப்பதன் மூலம் சூரியனுக்கு எப்பாதிப்பும் ஏற்படாது. தொடர் விமர்சனங்கள் வருமாயின் சூரியன் உக்கிரமடைந்து அக்கினியாகி பிரபாவின் அரசியல் வாழ்க்கையையே அடியோடு எரித்து விடும்’ என்று கூறினார்.

(பதுளை தினகரன் விசேட நிருபர் எம். செல்வராஜா)


பத்திரிகையில் விளம்பரம்தேடி மக்களைக் கவரும் முயற்சி;

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? பாவம் செந்தில்; அவரை விட்டுவிடுங்கள்!

குழந்தை என்பதை ஏற்ற பின்னரும் விவாதம் தேவையா?

அரசியலில் செந்தில் தொண்டமான் ஒரு குழந்தையென்று நான் கூறி யதையிட்டு அவர் சந்தோசமடைவதாக கூறிய பின்னரும் அவருடன் நான் வாக்குவாதப்படுவதில் எவ்விதமான அர்த்தமுமில்லை. அவர் எனக்கு இணையான ஜாரியும் கிடையாது. ஆனாலும் அவர் கடந்த ஞாயிறு என்னை பகிரங்க தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைத்தார். நான் அதற்கு அன்று மாலையே வரத்தயார் எனத் தெரிவித்திருந்தேன். அதை அப்படியே மறைத்து, மறந்துவிட்டு இன்று என்னமோ தேவையில்லாத விடயங்களையும், சம்பந்தமில்லாக் கருத்துக்களையும் முன்வைக்கிறார். பாவம் அவர், என்னை அவருடன் இணைத்து செய்தி போடுவதை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் பிரபாகணேசன் எம்.பி.

இனி பத்திரிகை விவாதம் தேவையில்லை. முடிந்தால் தொலைக்காட்சியில் நேரடியாக வரட்டும். துரோகத்தைப் பற்றி செந்திலுக்கு நான் கூறத்தேவையில்லை. அது அவர் தன்னைப் பார்த்து தானே கேட்க வேண்டியதொரு கேள்வி. மீண்டும் சொல்கிறேன் செந்தில் பாவம். அவரை பின்னாலிருந்து யாரோ தமது தேவைகளுக்காக அரைகுறை தகவல்களை வழங்கி ஏவி விடுகிறார்கள். அவற்றைக் கேட்டு விட்டு இப்படியாவது தனக்கு இலவசமாக பத்திரிகை பிரசாரம் கிடைத்து மக்களுக்குள் தானும் விசயம் தெரிந்த அரசியல்வாதி என்று காட்டிக்கொள்ளவே செந்தில் இவ்வாறான சம்மந்தமே இல்லாத விடயங்களை முன்வைத்து வருகிறார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். வளர வேண்டிய இளம் அரசியவாதி இப்படி தரம் குறைந்து விளம்பரம் தேடக்கூடாது. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவன் என்பதால்தான் அவருக்கு நான் இதனை மிகவும் பொறுமையாகக் கூறுகிறேன் என்றும் பிரபா கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

தனது கூட்டத்திற்கு ஜயாயிரம் பேர் வருவினமாம், உங்களுக்கு ஆயிரம் பேராவது வருவினமோ என்று கேட்பதே ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வி. அவர் அறிக்கையில் கேட்பதை விட்டுவிட்டு எனது அடுத்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றேன. வந்து ஐயாயிரத்தோராவது ஆளாக இருந்துவிட்டு பின்னர் கதைக்கட்டும்.

கொழும்பில் தமிழ் மக்களுக்கு அரசினால் மேற்கொள்ளப்படும் பெருமளவிலான உதவிகளை நானே முன்னின்று நடத்தி வைப்பது செந்திலுக்குத் தெரியாது போலும். கொழும்பில் தமிழ் மக்களுக்குத் தே¨யான பல திட்டங்களை அரசிற்குத் தெரிவித்து எனது திறமையால் பாதுகாப்புச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பல அமைச்சர்களின் துணையுடன் மேற்கொண்டு வருவதை நன்கு தெரிந்திருந்தும் செந்தில் அவற்றை மூடி மறைத்து குதர்க்கமாக அறிக்கையில் குறிப்பிடுவதும் அவர் அரசியலில் மட்டுமல்ல அறிக்கை விடுவதிலும் குழந்தை என்பதையே காட்டுகிறது. அவரது பெயர் வந்தது தொடர்பாக செந்தில் கொடுத்துள்ள விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் என்னைப்போல பலருக்கும் அதில் குழப்பம் இருந்தது. ஆனால் எமது வாக்குவாதத்தால் இன்று அது பலருக்குத் தெளிவாகியுள்ளது எனவும் பிரபா எம்.பி தெரிவித்தார்.

எனது தந்தை வி. பி. கணேசனுக்கும் இ. தொ. கா.விற்கும் எவ்விதமான சந்தர்ப்பமுமே கிடையாது. ஜவஹர்லால் நேருவினால் 1952 ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - இந்திய காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டு தொண்டமான் ஐயா இ.தொ.கா.வை ஆரம்பிக்க அkஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை ஆரம்பித்தார். எனது தந்தை தான் இறக்கும் வரை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸிலேயே இருந்தார். இது தெரியாத செந்தில் உண்மையிலேயே வரலாறு தெரியாத கத்துக்குட்டிதான்.

நான் விடுத்த தொலைக்காட்சி விவாதத்திற்கு செந்திலுக்கு அலைவரிசை கிடைக்காவிடில் நான் அதையும் ஏற்பாடு செய்து தருக்கிறேன். எனவும் பிரபா தெரிவித்துள்ளார். அத்துடன், பஸ்களை தோட்டக்களை அனுப்பி ஆட்களை சேர்ப்பவர்களுக்கு ஐயாயிரம் பேரைச் சேர்ப்பது கடினமல்ல. முடிந்தால் பஸ்களை அனுப்பாமல் ஒரு கூட்டத்தை ஐநூறு பேருடன் நடத்த முடியுமா எனவும் பிரபா எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.