புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
திவிநெகும மனைப் பொருளாதார தேசிய வேலைத் திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் வெற்றிகரமாக முன்னெடுப்பு

திவிநெகும மனைப் பொருளாதார தேசிய வேலைத் திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் வெற்றிகரமாக முன்னெடுப்பு

2010ம் ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், 2011ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலும் இலங்கை வழமைக்கு மாறாக அதிக மழை வீழ்ச்சியைப் பெற்றுக் கொண்டது. இதன் விளைவாக நாட்டின் பல பிரதேசங்களில், குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதுடன் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் சில வாரங்கள் தங்கினர்.

இதேநேரம் இந்த வெள்ளப் பெருக்கு நாட்டின் விவசாயப் பயிர்ச் செய்கையைப் பெரிதும் பாதித்தது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வேளாண்மையும், மரக்கறி, மற்றும் பழ பயிர்ச் செய்கையும் நீரில் மூழ்கி அழிவுற்றன.

இதன் காரணத்தினால் 2011ம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மரக்கறி மற்றும் பழ வகைகளின் விலைகள் அபரிமிதமாக அதிகரித்தன, இந்நாட்டில் மரக்கறி மற்றும் பழவகைகளின் விலைகள் இவ்வாறு முன்னொரு போதுமே அதிகரிக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சார்பாகப் பயன்படுத்தி அற்ப அரசியல் லாபம் தேடுவதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சி செய்தனர். "மரக்கறி மற்றும் பழவகைகளின் விலை உயர்வுக்கு அரசாங்கமே காரணம்" எனக் குற்றம் சாட்டினர். ஆனால் இக்குற்றச்சாட்டை நாட்டு மக்கள் சிறிதளவேனும் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றைய சூழலில் மரக்கறி மற்றும் பழ வகைகளின் விலை உயர்வுக்கான காரணத்தை மக்கள் நன்கு தெரிந்திருந்தனர். இதனால் எதிர்க்கட்சியினரின் குற்றச் சாட்டு புஸ்வாணமாகியது.

என்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மரக்கறி மற்றும் பழ வகைகளின் அபரிமித விலை உயர்வை கண்டு மெளனமாக இருக்கவில்லை. மாறாக இவ்விலை உயர்வு மக்களைப் பாதிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது அவற்றில் குறுகிய கால, நீண்டகால திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் உடனடி நிவாரணமாக இவ்வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படாத பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்டிருந்த மரக்கறி மற்றும் பழவகைகளை அரசாங்கம் இராணுவத்தினர் ஊடாக நேரடியாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாய விலையில் அவற்றைப் பெற்றுக் கொடுத்தது. அது மக்களுக்கு சிறந்த நிவாரணமாக அமைந்தது.

என்றாலும் இவ்வாறான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு மரக்கறி மற்றும் பழ வகைகளின் உற்பத்தி மிக மிக அவசியமானது என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அச்சமயம் நன்கு அறிந்து செயற்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திவிநெகும மனைப் பொருளாதார தேசிய வேலைத்திட்டத்தை 2011ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்து அம்மாதமே அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இத்தேசிய வேலைத்திட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இத்தேசிய வேலைத்திட்டம் தூரநோக்கோடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினுள் முதலில் பத்து இலட்சம் குடும்பங்களை சேர்த்துக் கொள்ளுவதற்கே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின் முதற்கட்டம் நிறைவுறும் போது 14 இலட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தினுள் இணைந்து கொண்டிருந்தன.

இத்தேசிய வேலைத்திட்டத்தினுள் சேர்த்து கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு மிக்க மனைப் பொருளாதாரத்தைக் கொண்டவையாக மேம்பட வேண்டும் என்றே அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் இத்திட்டத்தினுள் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு குடும்பமும் வீட்டுத் தோட்ட செய்கையிலும் சுயதொழில் முயற்சிகளிலும் ஈடுபடவும் ஊக்கு விக்கப்பட்டன. இதற்குத் தேவையான மரக்கறி மற்றும் பழச் செடிகளின் விதை வகைகளையும், பசளையையும், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுத்தது. இதன் காரணத்தினால் மக்கள் ஆர்வத்துடன் இத்திட்டத்தினுள் இணைந்து கொண்டனர்.

இதன் பயனாக திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டம் குறுகிய காலத்தில் பாரிய வெற்றியை அளித்தது. குறிப்பாக மரக்கறி மற்றும் பழவகைகளின் விலைகள் பெரிதும் குறைவடைந்தன. இது மக்களுக்கு சிறந்த நிவாரணமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவான அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சமயம் 21 இலட்சம் குடும்பங்களை இலக்கு வைத்தே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. திவிநெகுமத் தேசிய வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்தை விடவும் இரண்டாம் கட்டம் பாரிய வெற்றியை அளித்துள்ளது. இதன் பயனாக நாடு அரிசி, உளுந்து மற்றும் சோள உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்கின்றது. மரக்கறி மற்றும் பழ வகைகளின் விலைகள் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து செல்லுகின்றது. அத்தோடு தேங்காய், கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டைகளின் விலைகளும் குறைவடைந்துள்ளன.

"திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் முதலிரு கட்டங்களும் சிறந்த முறையில் வெற்றியளித்து நாட்டு மக்களுக்கு அபரிமிதமான பயன்களைப் பெற்றுக் கொடுத்திருப்பதால் ஒவ்வொரு குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில் இத்தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் முன்னெடுக்கப்படும் "என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

"2012 ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி அறிவித்தபடி 25 இலட்சம் குடும்பங்களை இலக்கு வைத்து இத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தை விரிவான அடிப்படையில் முன்னெடுப்பதற்காக மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31ம் திகதி வரையும் ஒவ்வொரு வீட்டுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி மனைப் பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

இத்தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு குடும்பத்தினதும் வீட்டுச் சூழல் மூலம் உச்ச பயனைப் பெறுவதற்கே எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் இம்முறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருத்தமான மனைப் பொருளாதார திட்டமே தயாரித்து வழங்கப்படவுள்ளது.

இதேநேரம் இம்முறை வர்த்தக நோக்கிலான மரக்கறி மற்றும் பழச் செய்கைகளிலும், அலங்கார மீன் வளர்ப்பு உள்ளிட்ட துறைகளிலும் அதிக கவனம் செலுத்தப்படவிருக்கின்றது.

அன்னாசி, பப்பாசி உள்ளிட்ட பழ வகைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கேள்வி உள்ளன. இவற்றின் உற்பத்தியை பெருக்குவதிலும் விசேட கவனம் செலுத்தப்ப்பட்டுள்ளன.

இவ்வாறு விரிவான அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டிருக்கும் இத்தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி சுப வேளையில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

ஆகவே திவிநெகும மனைப் பொருளாதார தேசிய வேலைத்திட்டம் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தையும் சுய தன்னிறைவு அடைந்ததாக மேம்படுத்தும். இது நாட்டையே பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையச் செய்யும் என்றால் மிகையாகாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.