புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
லீப் வருடத்தில் நாம்.....

லீப் வருடத்தில் நாம்.....

விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலயங்களாகி அவை நாட்களாகின்றன. இந்த சுழற்சி உலகம் தோன்றியது முதலே உருண்டு கொண்டிருக்கிறது. அதற்கேற்ப நாமும் சுழன்று கொண்டிருக்கிறோம்.

முந்நூற்று அறுபத்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வருடங்கள் விடிந்தாலும் முந்நூற்று அறுபத்து ஆறாவது நாள் புலரும் ஒரு ஆண்டும் இருக்கிறது என்பது நாம் அறிந்தது.

இதனையே நாம் 'லீப் வருடம்' என்று அழைக்கிறோம். உலகில் பொதுவாக வழக்கிலுள்ள கிறிஸ்துவுக்கு பின்னரான நாட்காட்டி நடைமுறையின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மேலதிக நாள் ஆண்டின் இரண்டாவது மாதமான பெப்ரவரி மாதத்தில் பூக்கிறது. இத் தகைய ஆண்டினையே 'லீப் வருடம்' என்கிறோம். இதைக் கணிப்பதற்கு இலகுவான வழிமுறை ஒன்று உள்ளது. எந்த ஆண்டினை நான்கு எனும் எண்ணால் மிகுதி இல்லாமல் வகுக்க முடிகிறதோ அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இருப்பது ஒன்பது தினங்களைக் கொண்டதும் அவ்வாண்டு முந்நூற்று அறுபத்து ஆறு நாட்களைக் கொண்டதுமான லீப் வருடமாக விளங்கும் இந்த அடிப்படையில் 2016, 2020 ஆகிய ஆண்டுகளை லீப் வருடங்கள் என யூகிக்கலாம்.

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு தடவை பெப்ரவரி மாதத்துக்கு இந்த மேலதிக நாள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை ஆராய்ந்தால் அந்த கணிப்பீட்டு முறை மிகவும் வினோதமானதாக விளங்கும். அதேவேளை சுவாரஷ்யமாகவும் இருக்கும்.

பூமி ஒரு தடவை சூரியனைச் சுற்றி வர 365 நாட்களும் 5 மணித்தியாலயங்களும், 48 நிமிடங்களும், 487.5 செக்கன்களும் ஆகின்றன. எனினும் பொதுவாக நாம் நாட்களை மட்டுமே கணக்கிலெடுத்து மீதி நாள் மணி செக்கன்களை பொருட்படுத்ததாமல் விட்டு விடுகிறோம். இதன் பிரகாரம் எம்மால் மறந்து விடப்படும் இந்த நேர எண்ணிக்கை நான்கு வருடங்கள் முடிவில் 23 மணித்தியாலம் 15 நிமிடங்கள் 10 செக்கன்கள் ஆகிக்கின்றன. இது 24 மணித்தியாலங்களுக்கு 44 நிமிடங்களும் 50 செக்கன்களும் குறைந்த கிட்டத்தட்ட ஒருநாள் என கணக்கிடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்காட்டியில் ஒரு மேலதிக நாளாக உள்Zர்க்கப்படுகிறது. அந்த நாள் மாதங்களில் குறைந்த எண்ணிக்கையான நாட்களைக்கொண்ட பெப்ரவரி மாதத்தோடு இணைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே லீப் வருட பெப்ரவரி மாதம் 29 நாட்களைக் கொண்டதாவும் அந்த ஆண்டு 366 நாட்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது.

ஆனால் இந்த எண் சக்கரவித்தை இத்தோடு நிறைவு பெற்று விடுவதில்லை.

ஒவ்வொரு நான்கு வருடங் களுக்கும் ஒரு முறை மேலதிக நாள் இணைக்கப்படும் போது அங்கு குறைந்து காணப்படும் 44 நிமிடம் 50 செக்கன் அல்லது 2690 செக் கன்கள் முறையாக கணிக்கப்பட்டு அது 400 வருடங்களுக்கு 3 நாட்கள் எனும் அடிப்படையில் குறைக்கப்பட்டு சமப்படுத்துவதன் மூலம் இக்குறை தீர்க்கப்படுகிறது.

இதன் பிரகாரம் 100 வருடங்களில் 25 லீப் வருடங்கள் அமைந்திருந்தும் கூட 400 வருடங்களில் 97 லீப் வருடங்களே அமைந்துள்ளன. லீப் வருட விவகாரம் சுவை ததும்பினாலும் சில சமயங்களில் சங்கடமாகவும் சிலருக்கு இது அமைந்து விடுவதுண்டு. இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 29ம் திகதி பிறந்த ஒருவர் தனது முதலாவது பிறந்த திகதியை 2016ம் ஆண்டிலேயே காண்பார். அதே போல் இவ்வாண்டு பெப்ரவரி 29ம் திகதியன்று முகூர்த்தம் வைத்து இல்லறத்தில் இணையும் தம்பதிகளின் இளமை நீண்டகாலம் நீடித்து நிற்கும். ஏனென்றால் அவர்கள் தமது திருமணத்தின் வயதை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லவா கொண்டாடப் போகிறார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.