புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்

முன்னேற்றமும், அபிவிருத்திப் பணிகளும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி தொடர்பாக பல்கலையின் உபவேந்தர் கலாநிதி எம்.எஸ்.எம். இஸ்மாயில், பதிவாளர் எச். அப்துல் சத்தார் ஆகியோர்களுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1995ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி மறைந்த மாமனிதர் மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் சிந்தனைச் சுனையின் அமுத ஊற்றாக அவரது பிறந்த தினத்தன்று அப்போதைய கல்வியமைச்சர் ரிச்சர்ட் பத்திரன மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் புடைசூழ்ந்த நிலையில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வளாகத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக திறந்து வைக்கப்பட்டது. இப்போது சுமார் 240 ஏக்கர் காணியில் ஒலுவில் பிரதேசத்தில் உள்ள களியோடை ஆற்றின் தவழ்ந்து வரும் நீரோடை அருகே உள்ள விசாலமான நிலப்பரப்பில் பெருமளவு பெளதீக வளங்களுடன் நிலை பெற்றுள்ளது.

கிழக்கே வங்கக் கடலின் மேனியைத் தொட்டு வரும் தென்றல் பல்கலையின் முழு வளாகத்தையும் ஸ்பரித்துச் செல்கின்றது.

ஆரம்பத்தில் கலை, கலாசாரப் பிரிவு, வர்த்தக முகாமைத்துவ பீடங்கள் இருந்த போதும் பின்னர் சம்மாந்துறையில் பிரயோக விஞ்ஞான பீடமும், நான்காவதாக இஸ்லாமிய அறபு மொழிக் கற்கைகள் பிரிவும் காலப்போக்கில் ஏற்படுத்தப்பட்டன.

இதுவொரு தேசிய பல்கலைக்கழகம் என்பதை வலியுறுத்தும் அம்சமாக இங்குள்ள சகல பீடங்களிலும் மூவின சமூகங்களையும் சார்ந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

சுமார் 2500 மாணவர்களில் 800 சிங்கள மாணவர்களும் 350 தமிழ் மாணவர்கள் 1250 முஸ்லிம் மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். இவர்களின் விரிவுரையாளர்களாக மும் மொழியிலும் தேர்ச்சி பெற்ற 150 விரிவுரையாளர்களும் சுமார் 250 கல்வி சாரா உத்தியோகத்தர்களும் பல்கலைக்கழகப் பணியில் உள்ளனர்.

மரபு ரீதியான கல்விக் கொள்கையில் இருந்து மீண்டு காலத்தின் தேவை கருதி விஞ்ஞான யுகத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய கல்விக் கொள்கையை தென்கிழக்கிலும் அமுல்படுத்த வேண்டுமென்ற அவாவுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும், உயர் கல்வி அமைச்சரும், ஜனாதிபதியும் பூரண ஒத்துழைப்பை வழங்கியதன் காரணமாக புதிய தொழில் சார் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இதன்படி 2013 ஆம் ஆண்டில் Quantity Surveyor (Q.S) கணிய அளவையியல் துறைசார் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்னும் பத்தாண்டுகளுக்கு கணிய அளவையியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் அதிக தேவைப்பாடு காணப்படுகின்றது என்று வலியுறுத்திய கலாநிதி இஸ்மாயில், இப்பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பீடமொன்றை உருவாக்குவதற்கும் கலை, வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கான புதிய கணனிக் கற்கை நெறிகளையும், சுற்றுலாத் துறை சார் கல்வியையும், தாதியர் பயிற்சிக் கற்கை நெறிகளையும் ஆரம்பிப்பதற்கு ஆர்வம் காட்டப்பட்டுள்ளதாகவும் தொழில் சார் பாட நெறிகளை ஆரம்பிக்கும் விடயத்தில் இலங்கையில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாக தென்கிழக்குப் பல்கலைக் கழகம் அமைவதாகக் குறிப்பிட்டார்.

உபவேந்தர் இஸ்மாயிலிடம் ஏன் இந்தப் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் ஆரம்பிக்க முடியாது என்று கேட்ட பொழுது.

மருத்துவத் துறையை ஆரம்பிப்பதற்குத் தேவையான வளங்களின் தட்டுப்பாடு எமக்குள்ளது. மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் வளப்பற்றாக்குறை காரணமாக சிக்கல்கள் காணப்படுகின்றன. அந்தப் பல்கலைக் கழகங்கள் மருத்துவ பீடத்துறையில் எதிர்கொள்ளும் சவால்களை நாம் அனுபவமாகப் பெற்றுக்கொண்டு எதிர் காலத்தில் இத்துறைக்கான பீடம் ஒன்றை உருவாக்க எண்ணியுள்ளோம் என்றார்.

“இப்பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் பயில்வதனாலும், வெவ்வேறு கலாசாரப் பின்னணிகளைக் கொண்டிருப்பதாலும் இங்கு ஏதும் பிரச்சினைகள் தோன்றியுள்ளதா?

“முப்பது வருடங்கள் இந்நாட்டில் யுத்தம் நடைபெற்றுள்ளது. இங்கு வந்திருக்கின்ற மாணவர்கள் 20 - 22 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பிறந்து வாழ்ந்து வளர்ந்தது எல்லாம் யுத்த காலத்தில். இவ்வாறான நிலையில்தான் மூவினங்களையும் சார்ந்த மாணவர்கள் இங்கு வந்து ஒருவரை மற்றவர் புரிந்து கொண்டு ஒரு குழுவின் கலாசாரப் பண்பாட்டுக் கோலங்களைக் கண்டறிந்து இதுவரை அறியாதவற்றை எல்லாம் சமூக சார் ரீதியாக அறிந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பல்கலைக்கழகம் சமூக ஒற்றுமையின் அச்சாணியாக விளங்குவதனால் இங்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை. போஸ்டர்களும் இல்லை. அரசியல் பிரச்சினைகளும் இல்லை. எல்லாமே அன்பு மயம்.

ஏனைய சில பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது எமது பல்கலைக்கழகம் அமைதிப்பூங்காவாக ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.

இங்கு பெளத்த கோயில் ஒன்றும் இந்துக்கோயில் ஒன்றும் கட்டப்பட்டு பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லாமலும் சாதி மதச் சண்டைகள் இல்லாமல் எல்லோரும் மனித குலம் என்ற எண்ணம் எல்லாத் தரப்பினரிடையேயும் வேரூன்றி ஆல மர விருட்சமாகக் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களில் உள்ள சில கற்கை நெறிகள் பிரயோகத் தொழில் சார் நெறிகளாக இல்லாமையால் பட்டம் பெற்ற பின்னர் கற்ற கல்விக்குரிய தொழில் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகின்றது. இந்த நிலைமை தொடரத்தான் வேண்டுமா என்று நாம் அவரிடம் கேட்டோம்.

“பல்கலைக்கழகங்களில் ஆரம்பம் தொட்டே கல்வி நெறிகள் பிரமிட் வடிவில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் எனக் காணப்பட்டுத்தான் வந்தன. ஆனால் இன்றைய அரசாங்கமும், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவும் எடுத்துக் கொள்ளும் முயற்சியினால் கல்விக் கொள்கை தலை கீழாக மறு வடிவம் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2015 க்குப் பின்னர் கலைப்பிரிவு மாணவர்களை விட விஞ்ஞான பிரிவு மாணவர்களை அதிகப்படுத்தியும், புதிய தொழில்சார் கற்கை நெறி மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரித்துத் தரப்படுத்துவதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இப்பல்கலைக்கழகத்துக்கு அரசின் ஒத்துழைப்பு: பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது என்று கேட்ட போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

கடந்த மூன்றாண்டுகளில் அரசு என்றுமில்லாத அளவு எமக்கு நிதி வசதிகளையும் ஏனைய உதவிகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி செய்து வருகின்றது என்பதை விசேடமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த உரையாடலின் போது பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.ஏ. சத்தாரும் அவர்களும் பயனுள்ள விடயங்களை முன்வைத்தமைக்கு அவருக்கும் தினகரன் வாரமஞ்சரி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இறுதியாக மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தை இப்போது நினைவுக்கு வருகிறது.

“நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இப்பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டத்துறை சார் வருகை விரிவுரையாளராகத்திகழ வேண்டும். ஒலுவிலில் பல்கலைக் கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின் போது அணிவகுத்துச் செல்லும் காட்சியை எனது ஒலுவில் இல்லத்தில் குடியிருந்து வாழும் காலத்தில் காண வேண்டும்” என்ற வார்த்தைகள் காலத்தால் மறக்கடிக்கப்படாமல் இன்னும் என் இதயத்தில் ஆட்கொண்டிருப்பதுதான் சோகமான ஒரு செய்தியாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.