கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04
SUNDAY FEBRUARY 26, 2012

Print

 
'மூன்று பேரூந்துகளில் பயணித்து கற்ற கல்வி

'மூன்று பேரூந்துகளில் பயணித்து கற்ற கல்வி

கலாபூ'ண சிகரத்தை தொட வைத்தது'
 

கிண்ணியா கே. எம். எம். இக்பால்

வpடிவெள்ளி, தாமரையின் ஆட்டம் முதலிய விருது பெற்ற நூல்களை எழுதி பெருமைக்குரிய எழுத்தாளராக விளங்கும் இக்பால் மனித அனுபவங்களை சிறப்பாக வெளிப்படுத்துவதில், முத்திரை பதித்தவராகவும் விளங்குகிறார். ஆழிப் பேரலை மண்ணில் அரங்கேற்றிய அவலங்களை விளக்கி ‘நடுக்கடலில்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டார்.

மூதூர் மக்கள் இடம் பெயர்ந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ‘தியாகி’ என்ற நூலையும் மூன்று மீனவர்களுக்கு கடலில் ஏற்பட்ட துயர அனுபவங்களை விளக்கி ‘கடலில் நடுவில்’ என்ற நாவலையும் எழுதினார். இம் மூன்று நூல்களுமே, இன ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.

நமது காலகட்டத்தில் நிகழ்ந்த மாபெரும் மனித அவலமான வன்னி மக்களின் இடப் பெயர்வை தத்ரூபமாக சித்திரித்து எழுதப்பட்ட இந்த நாவல் எதிர்காலத்தில் இம்மண்ணில் வாழ இருக்கும் எம்மக்களுக்கு பெறுமதிமிக்க ஆவணமாக அமையும். இடம்பெயர்ந்த வேளையில் நிகழ்ந்த பல்வேறு இன்னல்களையும், மக்களின் உள்ளக்குமுறல்களையும் எழுத்துருவில் படைத்த இக்பாலைச் சந்தித்தேன்.

கேள்வி:- அதிகமான நூல்களை எழுதியுள்ள நீங்கள் உங்களது வித்யாரம்பம் பிறப்பி டத்தைப் பற்றிக் கூறுங்களேன்.

பதில்:- நான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எனது ஆரம்பக் கல்வியை மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கற்றேன். இடைநிலைக் கல்வியை மூதூர் மத்திய கல்லூரியில் பெற்றேன்.

ஒரே தடவையில் க. பொ. த (சாதாரண) பரீட்சையில் சித்தியடைந்த நான் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு க. பொ. த (உயர்தரம்) கற்கச் சென்றேன். அக்காலத்தில் மூதூரில் உயர்தர வகுப்பு நடைபெறவில்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் உயர்தர வகுப்பு அப்போது ஆரம்பிக்கப்படவில்லை.

மூதூரிலிருந்து வந்தாறுமூலைக்கு செல்வதற்கு மூன்று பேரூந்துகளில் பயணம் செய்யவேண்டியிருந்தது. மூதூரிலிருந்து வெருகல வரையில் ஒரு பேரூந்திலும், வெருகலில் இருந்து பனிச்சங்கேணி வரையில் ஒரு பேரூந்திலும், அங்கிருந்து மட்டக்களப்புக்கு இன்னொரு பேரூந்திலும் அப்போது நாங்கள் பயணித்தோம்.

வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். வந்தாறுமூலையில் நான் தமிழை ஒரு பாடமாகக் கற்றேன். தமிழ் மொழி மீதான ஈடுபாடும், தமிழ் இலக்கியத்தில் அதிக ஆர்வமும் எனக்கு ஏற்பட தமிழ்பாடம் காரணமாக அமைந்தது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் அம்பலவானர் சிவராசா, பேராசிரியர் அமீரலி ஆகியோர்களிடம் கல்வி கற்றதை பெருமையாகக் கருதுகின்றேன். தற்போது பேராசிரியராக விளங்கும் துரை மனோகரன் அப்போது சிரேஷ்ட மாணவராகக் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். புவியியல் பேராசிரியர் கஸ்புல்லாவும் நானும் ஒன்றாகப் படித்து, இன்றுவரை நெருங்கிய நட்பைப் பேணுகின்றவர்களாக உள்ளோம். பட்டப்பின்படிப்பை நான் திறந்த பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தேன்.

கேள்வி:- உங்கள் தொழில் பற்றிக் கூறுங்களேன்.

பதில்:- நான் பதினேழு வருடங்கள் ஆசிரியராகவும் பதினெட்டு வருடங்கள் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளேன். மூதூர் மத்திய கல்லூரி, குச்சவெளி அந்நூரியா வித்தியாலயம், மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயம். கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்பித்துள்ளேன். கற்பிப்பதில் அதிக விருப்பம் எனக்கு இயல்பாகவே இருந்தது. புவியியல், தமிழ், அரசியல் ஆகிய மூன்று பாடங்களையும் ஒரே தடவையில் கற்பித்துள்ளேன். ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பாட்டு, பேச்சு, கட்டுரை, நாடகம், வில்லுப்பாட்டு முதலிய பலதுறைகளிலும் மாணவர்களைப் பயிற்றுவித்துள்ளேன். ஆசிரியர் சேவையில் மிக உயர்ந்த நிலையாக முதலாம் தரம் அமைந்துள்ளது. முதலாம் தரத்திற்கு ஆசிரியர்களாக தெரிவு செய்வதற்கு இதுவரை ஒரு தடவைதான் போட்டிப் பரீட்சை நடந்தது. திருகோணமலை மாவட்டத்தில் சுமார் நூறு பேர் எழுதிய அப்பரீட்சையில் தமிழ் பெண்மணி ஒருவரும் நானும் மாத்திரமே சித்தியடைந்தோம்.

அதன்பின்பு போட்டிப் பரீட்சையொன்றின் மூலம் சமூகக் கல்வி ஆசிரிய ஆலோசகராகத் தெரிவு செய்யப்பட்டேன். ஆசிரிய ஆலோசகர் பதவி, இலக்கிய நூல்களை எழுதும் வாய்ப்பையும், வரலாறு, புவியியல், குடியியல் முதலிய பல நூல்களை எழுதும் ஆற்றலையும் எனக்குத் தந்தது.

கேள்வி:- நீங்கள் எழுதிய நூல்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

பதில்:- நான் மொத்தமாக இதுவரை 42 நூல்களை எழுதியுள்ளேன். அவற்றுள் 12 நூல் இலக்கியம் சார்ந்தவை. ஏனைய நூல்கள் வரலாறு, புவியியல் பாடநூல்கள். எனது கல்வி சார்பான நூல்களை கொழும்பு லங்கா புத்தகசாலை அச்சடித்து நாடெங்கும் விநியோகின்றது. இலக்கிய நூல்களுள் ஏழு நூல்கள் சிறுவர் இலக்கியங்களாகும். இரு நூல்கள் சிறுகதைத் தொகுதிகளாகும். ஏனைய நூல்களாக ஒரு நாவலும், ஒரு கவிதை நூலும் ஒரு ஆய்வு நூலும் அடங்குகின்றன. நாளைய உலகம் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமாயின் இன்றைய சிறுவர்கள் சிறப்பான முறையில் பண்படுத்தப்படவேண்டும். சிறுவர்களின் உள்ளங்களைப் பண்படுத்த சிறுவர் இலக்கியங்கள் மிகவும் ஏற்றவை என்பது எனது கருத்தாகும்.

எனது சிறுவர் நாவல்களுள் ஒன்றான விடிவெள்ளி தமிழ், முஸ்லிம், சிங்கள இன ஒற்றுமையைப் போதிக்கின்றது. காயமுற்று வீழ்ந்து கிடந்த சிங்கள படைவீரர் ஒருவரை தமிழரும், முஸ்லிமும் காப்பாற்றும் விதம், விடிவெள்ளியில், விளக்கப்பட்டுள்ளது. இன்னொரு சிறுவர் நாவலாகிய ‘புதா சுகமா?’ என்ற சிறுவர் நாவல், முல்லைத்தீவைச் சேர்ந்த ரவி என்ற மாணவனின் சோகவரலாற்றை சித்தரிக்கின்றது. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரவி மீது அதிகமான பாசத்தை தமயந்தி என்ற சிங்கள தாதிப்பெண் பொழிகின்றாள். அவள் ரவியிடம் ‘புதா சுகமா....?’ என்று அன்புடன் அடிக்கடி கேட்கின்றாள். வன்னி இடப்பெயர்வில் தமிழ் மக்கள் அடைந்த துயரங்களில் முஸ்லிம்களும், சிங்களவர்களும பங்குகொள்கின்றனர்.

கடலின் நடுவில் என்பது எனது முதல் நாவலாகும் முஸ்லிம்கள் இருவரும் தமிழர் ஒருவரும் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்குச் செல்கின்றனர். கடலின் நடுவிலே அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களை மிகவும் விறுவிறுப்பாக சித்தரிக்கின்றது இந்த நாவல். இக்கதை மித்திரன் பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்தது. எனது மூன்று சிறுவர் நாவல்கள் நவமணி பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தன. சுனாமி பற்றிய அனுபவங்களை நடுக்கடலில் என்ற சிறுகதைத் தொகுப்பு மூலமும் மூதூர் மக்களின் இடம்பெயர்வை ‘தியாகி’ என்ற சிறுகதைத் தொகுப்பு மூலமும் வெளியிட்டேன். எனது ‘நடுக்கடலில்’ நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஹ்மானும். எனது கவிதை நூலாகிய ‘இதய ஒலி’ நூலுக்கு கலாபூசணம் புண்ணியாமீனும் அணிந்துரைகளை எழுதியுள்ளனர்.

கேள்வி:- உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், பட்டங் கள் பற்றி சொல்லுங்களேன்.

பதில்:- சர்வோதய அமைப்பு 2005 இல் நடத்திய சிறுவர் கதைப் போட்டியில் எனது நூலாகிய ‘விடிவெள்ளி’ முதலிடத்தைப் பெற்றது. அதன் வெளியீட்டு விழா பண்டாரநாயக்கா மண்டபத்தில் நடந்தது. ஒபெட் அமைப்பு நடத்திய அஷ்ரப் நினைவு தினப் போட்டியில் முதல் இடத்தை எனது கட்டுரை பெற்றது. கிண்ணியா சாகித்திய குழு நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் கிடைத்தது. இலங்கை இலக்கியப் பேரவை எனது விடிவெள்ளி, தாமரையின் ஆட்டம் ஆகிய நூல்களை சிறந்த நூல்களாகத் தெரிவு செய்தது. 2010 இல் கிழக்கு மாகாண சபை எனது ‘தாமரையின் ஆட்டம்’ நூலை சிறந்த நூலாகத் தெரிவு செய்து விருது வழங்கியது. இன ஒற்றுமையை நூலாகிய புதா சுகமாவை, கலாசார அமைச்சு கொள்வனவு செய்து என்னைக் கெளரவித்தது. எனக்கு இதுவரை நான்கு பட்டங்கள் கிடைத்துள்ளன. கிண்ணியா சாகித்தியக் குழு 2009 கலை வேந்தன் பட்டத்தையும், 2010 கலைப்பரிதி பட்டத்தையும் மார்சல் ஆட்ஸ் சர்வதேச பல்கலைக்கழக கெளரவ கலாநிதிப் 2011 இல் இலங்கை அரசு கலாபூஷணம் பட்டத்தையும் வழங்கியது.

கேள்வி:- உங்களது ஏனைய சேவைகளைக் கூறுங் களேன்..

பதில்:- 2002 இல் பண்டாரநாயக்கா மகா நாட்டு மண்டபத்தில் நடந்த உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டிலும் 2010 இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டிலும் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தேன். அகரம் சஞ்சிகைக்கு இரண்டு வருடங்களாக வரலாறு பாடவினாவிடைகளை எழுதி வருகிறேன்.

கேள்வி:- உங்கள் குடும்பம் பற்றி கூறுங்கள்-

எனது தந்தை மர்ஹ¤ம் எம். எம். கே. முகம்மது மூதூர் மத்திய கல்லூரி அதிபராகப் பணிபுரிந்தவர் சிறந்த கவிஞர் எனது மனைவியின் பெயர் ஜாஹிறா, மனைவியின் தந்தையான அப்துல் வதூத்தும் ஒரு அதிபராகக் கடமையாற்றியவர் நிசாத், ஜீனத்பானு, அகீலாபானு ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கேள்வி:- உங்களின் பரிசுபெற்ற சிறுவர் நாவலாகிய விடிவெள்ளி பற்றி கூறுங்களேன்.

பதில்:- இது இன ஒற்றுமையை வலியுறுத்தும் கதை, விமலதாச என்ற காயப்பட்ட சிங்கள இராணுவ வீரரை ரவியும், இஸ்மாயில் பரியாரியும் காப்பாற்றுகின்றனர். 2005 இல் சர்வோதய அமைப்பு நடாத்திய சிறுவர் கதைப் போட்டியில் இது முதலிடத்தைப் பெற்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய குழுவே பரிசுக்குரிய கதையைத் தெரிவு செய்தது. அவர்களுள் ஒருவர் பண்டாரநாயக்கா மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் விடிவெள்ளியை நாங்கள் ஏன் முதலாவது பரிசுக்காக தெரிவு செய்தோம் என்பதை விளக்கினார். இந்த விழாவில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார். அன்று தான் அவர் ஜனாதிபதி வேட்பாளராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். முதற் பரிசாக 20,000 ரூபா கிடைத்தது. சர்வோதய அமைப்பு அவுஸ்திரேலியா சர்வதேச அபிவிருத்தி அமைப்புடன் (திus திiனீs)இணைந்து இந்நூலை அச்சடித்து பல பாடசாலைகளுக்கு இலவசமாக விநியோகித்தது. இந்நூலுக்கான சித்திரங்களை சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ. டபிள்யூ. என். எம். நெளபரும் எனது மகள் அகீலாபானுவும் வரைந்துள்ளார்கள்.

கேள்வி:- நீங்கள் கலாநிதி,கலை வேந்தர், கலைப்பரிதி முதலிய பட்டங்களை ஏற்கனவே பெற்றிருக்கிaர்கள். 2011 இல் அரச விருதான கலாபூஷணம் பட்டத்தைப் பெற்றுள்Zர்கள். இந்த விருதைப் பெற்றபோது உங்கள் உணர்வு எவ்வாறு இருந்தது?

பதில்:- கலைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களது சேவையை அங்கீகரிக்கும் முகமாக அரசு வருடந்தோறும் கலாபூசணம் பட்டத்தை வழங்குகின்றது. எவ்வளவோ அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் கலைச்சேவை செய்த கலைஞனின் உள்ளம் இதன் மூலம் பூரிப்படைகின்றது, எமது கலைச்சேவை அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்ற நிறைவு கலைஞர்களில் உள்ளத்தில் ஏற்படுகின்றது. இந்த விடயத்தில் நான் இரண்டு கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன். கலைஞனுக்கு 81 வயதில் இந்த விருதை வழங்காமல் 51 வயதில் வழங்குவதன் மூலம் பல இடர்பாடுகளைத் தவிர்க்க முடியும். அடுத்தது, வழங்கப்படும் விருதை வடிவமைக்கும் முன்பு அரசு, இந்து கலாசார, இஸ்லாமிய கலாசார அதிகாரிகளுடன் கலந்துரையாடவேண்டும்.

கேள்வி:- உங்களது இன்னொரு சிறுவர் நாவலாகிய ‘புதா சுகமா’ நூலைப் பற்றி சொல்லுங்கள்.... தலைப்பே வித்தியாசமாக உள்ளதே!

பதில்:- மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்ந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட துயர அனுபவங்களை விளக்கி நான் ‘தியாகி’ என்ற சிறுகதைத் தொகுதியை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன் . 2009இல் இடம்பெற்ற வன்னி மக்களின் இடம்பெயர்வு உலகில் ஏற்பட்ட பெரும் அவலங்களுள் ஒன்றாக அமைகின்றது.

அந்த இடப் பெயர்வில் இடம்பெற்ற ஒவ்வொரு மனிதருக்கும் பின்னால், பெரும் சோக வரலாறு இருந்தது. வன்னி இடம்பெயர்வில் இடம்பெற்ற பதினோராம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் அவலத்தை இந்நூல் சித்தரிக்கின்றது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அம்மாணவனை, சிங்கள தாதிப் பெண்ணாகிய தமயந்தி, தன்மகன் போல நேசிக்கின்றான். ‘புதா சுகமா....’ என்று அடிக்கடி கேட்டு, தன் அன்பை வெளிப்படுத்துகின்றாள். அந்த நூலில் நான் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதியைச் சொல்கிறேன்...

‘வன்னி மக்கள் அனுபவித்த துயர அனுபவங்கள்

இன்று வாழும் ஏனைய மக்களாலும் பகிரப்பட

வேண்டும் என்பதற்காகவும், எதிர்கால மக்களாலும்

அறியப்படவேண்டும் என்பதற்காகவுமே ‘புதர் சுகமா?’

என்ற இந்நூலை எழுத முனைந்தேன்’

கேள்வி:- உங்களது வாழ்க்கையில் இலக்கியத்துறை சார்பான ஒரு அனுபவத்தைக் கூறுங்களேன்!

பதில்:- 2002 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா மண்டபத்தில் உலக இஸ்லாமிய இலக்கிய மகாநாடு நடைபெற்றது. இந்த மகாநாட்டுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் பல நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்கள்....

மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டில் பேராளராக நான் கலந்துகொண்டதை மறக்க முடியாத அனுபவமாகக் கருதுகின்றேன். இம்மாநாட்டிலேயே கவிக்கோ அப்துல் ரகுமானைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

‘தமிழ் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு இஸ்லாமியர் ஆற்றிய தொண்டு’ என்ற தலைப்பில் நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். மகாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலும் ஆய்வரங்குக் கோவையிலும் எனது ஆக்கங்கள் இடம்பெற்றன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]