கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26
SUNDAY FEBRUARY 19, 2012

Print

 
சிவராத்திரி தரும் சிவ சிந்தனை

சிவராத்திரி தரும் சிவ சிந்தனை

மஹா சிவராத்திரிப் புண்ணிய தினத்தில் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக ஜோதிலிங்கமாகக் காட்சியளித்தார். ஜோதிலிங்கத்தில் ஐந்து சிவ முகூர்த்தங்களாகிய ஈசாளம் தத்புருஷம், அசோரம், வாமதேவம், சத்யோ ஜாதம் ஆகிய திருமுகங்கள் உள. ஜோதியின் அடி அல்லது முடியைக் காணாத பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனே பெரியார் என ஏற்றனர். இங்கே ஆணவம், கன்மம், மாயை ஆகியன ஒழிந்தன. சிவ தத்துவமே மேலோங்கிற்று.

பூவுலகில் வாழும் நாம் சிவ சிந்தனையுடன், சிவ பூஜா துரந்தரராய் சிவத்தியாளகரராய் வாழ வேண்டும். அந்த வாழ்வே எமக்கு உரியது என்பதனை மேலே கூறிய விடயங்கள் எமக்கு விளக்கம் அளிக்கின்றன.

மஹா சிவராத்திரியில் ஜோதி வடிவத்தை லிங்கோற்பவரை வணங்குகின்றோம். ஜோதியானது சிவன் அக்கினி வடிவினை என்பதனைக் கூறுகின்றது. ஸ்ரீ நடராஜரின் திருக்கரத்தில் தீச்சுடர் உள்ளது. நெருப்பு சுடும் அல்லவா? தத்துவார்த்த ரீதியில் இதனை நாம் நோக்கினால் மும்மலங்களினின்றும் விடுபட்ட நல்ல மனிதனாய் இரு என்று பொருள் கூறும்.

சாதாரண மணிதர்களாகிய நாம் வீட்டில் வழிபாடு, ஆலய வழிபாடு, யாத்திரை என எல்லாம் செய்கின்றோம். அவை என்றும் எமக்கு நன்மை பயக்கும்.

ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக நாவலர் அச்சுவேலி சிவஸ்ரீ குமராசாமிக் குருக்கள் முதலான பல சிவசீலர்களும் எமக்குக் கூறுவது என்ன? அதனை அவர்களே வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்வு சைவ வாழ்வு.

சைவன் என்றால் தீஷபெற்று மூவேளை சந்தியாவந்தனஞ் செய்ய வேண்டும். சத்தியாவந்தனத்தில் திருநூறு தரித்தல் தேவதர்ப்பணம் பிதிர்தர்ப்பணம், ஜபம் என்பன அடங்கும். சந்தியாவந்தனம் அல்லது சைவ அனுட்டானம் மூலம் ஒருவன் சைவ சிந்தனைக்கு உட்படுகின்றான். மனநிறைவு பெறுகின்றான். இதய சுத்தம் ஆகி தேவ ஒளி ஆரம்பிக்கின்றது.

காலையில் அனுட்டானங்களை முடித்து சிவபூஜை செய்கின்றாள். சிவன் அருள் பெறுகின்றான். அடுத்து கோவில் வழிபாடு செய்கின்றாள். மூர்த்திகள் திருவுருவங்களை மனதார வாழ்த்தி வளப்படுவதன் மூலம் மனநிறைவடைகின்றான். கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை எல்லாமே திருவருட்சக்தியைக் கோருகின்றன. இதுவே ஒருவனின் சைவ வாழ்வு எனக் கூறலாம். சைவவாழ்வில் விரத அனுட்டானம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. விரதம், விரத அனுட்டானம் என்பன என்றும் எமக்கு நன்மை பயக்கும். மாசி மாதம் என்றால் அதி உன்னத சிவ விரதமான மஹா சிவராத்திரியே எம் மனதிலே தோன்றும்.

உலகெங்கும் உள்ள சைவர் மஹசிவராத்திரி விரதத்தை நோற்கின்றார்கள். தற்போது உள்ள வாழ்வுச் சூழலுக்கு அமைய அவர்கள் விரதம் இருக்கிறார்கள்.

மஹாசிவராத்திரியின் முன்தினம் நண்பகல் ஒருவேளை உணவருந்தி சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து இரவு சிவ தர்சனஞ் செய்த மறுநாள் பாறணை செய்வதே முறையானது. ஆனால் பல விதகாரணங்களால் மஹா சிவராத்திரி அன்று உபவாசம் இருப்பது வழமையில் உள்ளது. நோயாளிகள், வசதி இல்லாதோர் சிவராத்திரி தினத்தில் மதிய போசனம் மட்டும் உண்டு விரதம் இருப்பர். சிவனடியார்கள் யாவரும் இரவு நான்கு ஜாமம் பூஜைகளையும் தரிசிப்பர் மஹாசிவராத்திரி தினத்தில் அடிமுடி தேடிய படனம் ஆலயங்களில் படிக்கப்படும்.

மஹாசிவராத்திரியின் மறுநாள் பாறணைத்தினம், அத்தோடு அமாவாசையும் உள்ளதால் வீட்டில் பிதிர்வழிபாடு என்று துளசி நீர் கொண்டு இறைத்து வழிபடுவர். கோவிலிலும் இவ்வாறான வழிபாடு உண்டு. பாறணை தினத்தில் அர்ச்சனை வழிபாடு, ஸ்ரீ பஞ்சாட்சர மந்திர ஜபம், திருமுறைப்பாராயணம் என்பன செய்யப்படும். சிவாசார்யாருக்கு அரிசி, காய்கறி தட்ஷணை கொடுத்து அவர் ஆசியையும் பெற்று சிவனடியார்க்கு உணவு கொடுத்துத் தாமும் உணவை உண்டு மஹாசிவராத்திரி விரதத்தை நிறைவு செய்வது வழக்கம். அன்று பகல் தூங்காது சிவ சிந்தனையுடன் இருத்தல் வேண்டும்.

நாம் இதுகாறும் சிவசிந்தனையுடன் இருந்தோம். மஹாசிவராத்திரி விரதம், சிவ அனுட்டானம், சிவபூஜை, பற்றி நோக்கினோம். மஹா சிவராத்திரி விரத முடிவில் அமாவாசை உள்ளதால் பிதிர் வழிபாடு செய்தோம்.

ஆளுமையில் சிவன் அருள்பெற்று தேவ ஆசி, பிதிர் ஆசி, குரு ஆசியுடன் நாம் நல்வாழ்வு வாழ்வோம்.

“ஓம் நமசிவாய”


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]