புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

Architect 2012 நிகழ்வுகள்;

Architect 2012 நிகழ்வுகள்;

இம்மாதம் 22ஆம் திகதி முதல்

இலங்கைக் கட்டிடக் கலைஞர்கள் நிறுவகம் (SriLanka Institute of Architect SLIA)  தனது 30வது வருடாந்த நிகழ்வை இம் மாதம் 22ம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடாத்துகின்றது. நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த வருடாந்தக் கொண்டாட்டம் பல அம் அம்சங்களைக் கொண்டுள்ளது.

‘இலங்கையை மீள வளர்த்தெடுத்தல், கட்டிடங்கள் அமைந்த சூழலில் கட்டிடக் கலைஞனின் பங்களிப்பு எனும் தொனிப் பொருளினாலான Architect 2012 வருடாந்த நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் அங்குரார்ப்பண வைபவத்துடன் ஆரம்பமாகின்றது. இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் படைப்புக்களையும் தயாரிப்புக்களையும் காட்சிப்படுத்தும் ஆக்கம் மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படும். இதன் முக்கிய அங்கமாக விளங்கும் பெப்ரவரி 23ஆம் திகதி அன்று இடம்பெறும் தேசிய மாநாட்டில் பல உள்ளூர் மற்றும் வெளியூர் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். பெப்ரவரி 25ஆம் திகதி இரவு இடம்பெறும் இராப்போசன விருந்துபசாரத்துடன் இந்த ஆண்டு நிகழ்வுகள் நிறைவுக்கு வருகின்றன.

இந்த வருட நிகழ்வுகள் பற்றி விளக்கமளித்த இலங்கைக் கட்டிடக் கலைஞர்கள் நிறுவகத்தின் தலைவரான கட்டிடக் கலைஞர் ரஞ்சன் நடேசபிள்ளை ‘இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் அரசாங்கத்தின் இலக்கை மனதில் வைத்து இவ்வருட தொனிப்பொருளைத் தெரிவு செய்தோம்’ என்றார்.

நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த வருட நிகழ்வில் உள்ளூரைச் சேர்ந்த கெளரவ அதிதிகளும் சர்வதேச கட்டிடக் கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர். இதன் முக்கியமான 29ஆவது கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் தரம் வாய்ந்த கட்டிடப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் நூற்றுக்கு மேற்பட்ட உள்ளூர் கட்டிடக் கலைஞர்களும் பங்கு கொள்கின்றனர். இலங்கையின் கட்டிடக்கலை மற்றும் நிர்மாணத்துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பிரபல்யம் பெற்றதுமான இக்கண்காட்சியை 70,000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கடந்த காலங்களில் பார்வையிட்டுள்ளனர்.

Architect 2012 நிகழ்வின் தேசிய மாநாட்டில், நகர வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் ஜான் கெல், நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல கட்டிடக்கலைஞரான பேராசிரியர் வான் டெர் வேர்ஃவ் ஆகியோருடன் இந்தியாலிருந்து வருகை தரும் பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் நளினி தாக்கூர் ஆகியோர் பங்குகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இவர்களுடன் தற்போது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் நகர அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவராகவும் விளங்கிய ஜானக குருகுலசூரியவுடன் தேசமான்ய வைத்யோதி கட்டிடக் கலைஞர் ஆஷ்லி டி வொஸ். கட்டிடக்கலைஞர் பேராசிரியர் எல். எஸ். ஆர். பெரேரா, கட்டிடக்கலைஞர் கலாநிதி ஜானக வைத்யோதி, கட்டிடக்கலைஞர் மதுர பிரேமதிலக, கட்டிடக்கலைஞர் திசார தனபதி, கலாநிதி திருமதி அனிலா பண்டாரநாயக்க ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.