கர வருடம் கார்த்திகை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 முஹர்ரம் பிறை 08
SUNDAY DECEMBER 04, 2011

Print

 
சிவாஜp - பாலாஜp கூட்டணியில் உருவான காவியங்கள்

சிவாஜp - பாலாஜp கூட்டணியில் உருவான காவியங்கள்

தமிழ் திரை உலகில்

திரையுலகில் சாதனைகள் பல புரிந்து சரித்திரம் படைத்த நடிகர் திலகம் சிவாஜியின் திரையுலக வரலாற்றில் அவரை வைத்து ஏறக்குறைய 16 படங்கள் வரை தயாரித்த நடிகர் தயாரிப்பாளர் கே. பாலாஜிக்கும் சிவாஜிக்குமிடையே இருந்த நட்பு மற்றும் படங்கள் பற்றிய ஓர் ஆய்வே இதுவாகும். இவர்களுக்கிடையில் நட்பு 1960 களில் தொடங்கியது. சிவாஜியின் சிபாரிசினால் பாலாஜிக்கு படவாய்ப்புகள் வந்தன. அத்துடன் சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த ‘பலே பாண்டியா’, ‘படித்தால் மட்டும் போதுமா’ உட்பட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்ததுடன் பாலாஜிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.

சிவாஜியை கதாநாயகனாக்கி ஏ. சி. திரிலோகசந்தரை இயக்குநராக்கி கே. ஆர். விஜயாவை கதாநாயகியாக்கி ‘தங்கை’ என்ற படத்தை எடுத்தார் பாலாஜி.

வித்தியாசமான விறுவிறுப்பான கதையமைப்பைக் கொண்ட ‘தங்கை’ நூறு நாட்கள் ஓடியது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த கே. பாலாஜி தொடர்ந்து சிவாஜி கணேஷனை மட்டுமே வைத்து படங்களைத் தாயரிக்க முடிவு செய்தார்.

தன்னுடைய ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ மூலமாக தொடர்ந்து படங்களை தயாரித்தார். ‘தங்கை’ 1967 இல் வெளிவந்த நிலையில் 1967 செப்டெம்பர் மாதமளவில் சிவாஜி, சரோஜாதேவி, நடிக்க ‘என் தம்பி’ என்ற படத்தை துவங்கினார். இந்தப் படத்தில் பாலாஜி சிவாஜிக்குத் தம்பியாக பிரதான வேடத்தில் தோன்றி நடித்தார். அண்ணன் - தம்பி பாசத்தினை வேறொரு கோணத்தில் சொல்லப்பட்ட ‘என் தம்பி’ 1968 ஜூன் மாதம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்தது.

சிவாஜி, கே. ஆர். விஜயா, பாலாஜி உட்பட பலர் நடித்த ‘திருடன்’, 1969இல் வெளியாகி பாலாஜிக்கு தொடர் வெற்றியை தந்தது.

கறுப்பு வெள்ளைப் படங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் பாலாஜி முதன் முதலாக ஒரு கலர் படத்தை தயாரிக்க விரும்பினார். அதற்காக இன்னொரு கதையை அதிக விலை கொடுத்து வாங்கியதுடன் அதில் கதாநாயகனான சிவாஜிக்கு இணையாக ஏற்கனவே ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் முதன் முதலாக தோன்றி நடித்த ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்தார். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக பல்வேறு இன்னல்களை அடையும் மிக அழுத்தமான பாத்திரத்தில் ஜெயலலிதா தோன்றி நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ 150 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1970 இல் வெளிவந்த இந்தப் படத்தின் வெற்றியானது கே. பாலாஜியைப் போலவே சிவாஜியையும் உற்சாகப்படுத்தியது.

பாலாஜி தயாரிப்பில் 1972 இல் சிவாஜி ஜெயலலிதா இணைந்து நடித்த ‘ராஜா’வில் சிவாஜி அழகு தோற்றத்தில் ஸ்டைல் நடிப்பில் மிக அற்புதமாக அழகாக தோன்றி நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

அதே ஆண்டில் மீண்டும் சிவாஜி ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘நீதி’ படமும் வெற்றிபெற்றது.

இங்கே இன்னொரு முக்கிய விடயத்தினையும் கூறியேயாக வேண்டும். அதாவது பாலாஜி பிற மொழியில் சக்கைப் போடு போட்ட படங்களை அதிக விலைக்கு வாங்கியே மறுபடியும் தமிழில் தயாரித்தார். இதனால் அவர் தயாரிப்பில் வெளியான படங்கள் வெற்றிக்கு உத்தரவாதமாக அமைந்தன.

தொடர் வெற்றிப் படங்களை எடுத்துவந்த கே. பாலாஜி 1974 இல் எடுத்த ‘என் மகன்’ 1976 இல் வெளியான ‘உனக்காக நான்’ ஆகிய படங்களினால் சறுக்கினார். சிவாஜி இரண்டு வேடங்களில் நடித்த ‘என் மகன்’ மற்றும் சிவாஜியுடன் ஜெமினி இணைந்து நடித்த ‘உனக்காக நான்’ ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. இதனால் சற்று மனம் தளர்ந்து சோர்ந்து போன பாலாஜி அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிபெற செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பின் மிகப் பெரிய வெற்றியடைந்த ஒரு வேற்று மொழி கதையை வாங்கினார். இப்படத்தில் வழமை போலில்லாமல் சிவாஜி கணேஷனுக்கு வித்தியாசமான வேஷம். சிவாஜி நேசிப்பதாக இருந்த பெண்ணை அவர் தம்பி விரும்புவதையறிந்து எல்லாவகையிலும் தியாகியாக மாறிவிடும் பாத்திரமேற்று நடித்த ‘தீபம்’ படம் இமாலய வெற்றி பெற்றது.

இப்படம் 1977இல் வெளியானது. இப்படம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். முதலமைச்சராவதற்கு முன் நடித்த கடைசிப் படமான மீனவ நண்பனுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓடியமை குறிப்பிடத்தக்கது. 1978 இல் சிவாஜி, லட்சுமி நடிப்பில் வெளியான தியாகம் படமும் வெள்ளி விழா கொண்டாடிய நிலையில் பாலாஜி கமல்ஹாசன், ரஜனிகாந் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களை வைத்தும் வெற்றிப் படங்களை எடுத்தார்.

பாலா. சங்குப்பிள்ளை


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]