கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
கா'pபுல் உலூம் அரபுக் கல்லூரி

கா'pபுல் உலூம் அரபுக் கல்லூரி

இலங்கையின் தென்கிழக்கில் தீன் மொழி அரபியிலும் தேன் மொழி தமிழிலும் தேர்ந்த மக்கள் வாழும் திருநகர் நிந்தவூர், நிலவளமும், நீர்வளமும், நிறைந்தவூர் இந்தவூர் கிழக்கே கடலையும், மேற்கே செங்கதிர் செழித்த செந்நெல் விளையும் பசுமை நிறைந்த வயல் நிலங்களையும். தெற்கே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தையும், வடக்கே காரைதீவுக் கிராமத்தையும் எல்லைகளாகக் கொண்டு செழிப்புடன் விளங்குகிறது இவ்வூர்.

இவ்வூர் மக்களின் பிரதான தொழில்கள் விவசாயமும், மீன்பிடியும், தற்போது வர்த்தகத்திலும் மேம்பட்டு விளங்குகிறார்கள். அரச உத்தியோகத்தர்கள் கணிசமான உள்ளனர். இவ்வூர் ஈன்றெடுத்த ஏற்றமிகு அறிஞர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உயர் பதவிகளில் அமர்ந்து இவ்வூருக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வூருக்குப் பக்கத்தில் இந்நாட்டின் உயர்கல்விப் பீடமான தென்கிழக்குப் பல்கலைக்கழகமும், ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் தேசிய கல்விக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியனவும் அமைந்திருப்பது இவ்வூர் மக்களின் கல்வியார்வத்துக்குக் காரணமாகிறது எனக் கூறலாம்.

உலகியற் கல்வியைப் போன்றே சமயக் கல்வியிலும் மிகவும் தேர்ச்சி பெற்ற உலமாக்களும் நிந்தவூரைச் சேர்ந்த முதலியார் மர்ஹ¤ம் அல்-ஹாஜ் எம். எம். இப்றாகிம் (பா.உ)வும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நிதி அமைச்சரும், நீதி உதவி அமைச்சரும், சமூக சேவைகள் உதவி அமைச்சருமான மர்ஹ¤ம் அல் - ஹாஜ் எம். எம். முஸ்தபா சட்டத்தரணியும் இங்கு வாழ்ந்துள்ளனர். தற்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பனர்களான அல்-ஹாஜ் எம். ரி. ஹஸன் அலி, அல்-ஹாஜ் எம். சி. பைசால் காசிம் மற்றும் அல் குர்ஆனை மனனமிட்ட கண்ணியமிக்க ஹாபிழ்களும் இங்கு உள்ளனர். இத்தகைய உலமாக்களதும், புத்தி ஜீவிகளதும் தூண்டுதலால் உருவான கல்விச்சோலைதான் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி.

இக்கல்லூரி அமைந்துள்ள நிலம், முன்னர் மையவாடியாகவும், காசான்பற்றைக் காடாகவும் இருந்தது. இதைத் துப்புரவாக்கி கிராம முன்னேற்றச் சங்கத்தினர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கென ஒரு கட்டடத்தை அமைத்தனர். இவ்வேளை, சம்மாந்துறையிற் பிறந்து நிந்தவூரில் வசித்து வந்தவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் எம். பி. அலியார் ஹஸறத் அவர்களின் தந்தையுமான மர்ஹ¤ம் இஸ்மாலெப்பை முஹிதீன் பாவா என்ற பெருந்தகையின் மனதில், இங்கே ஓர் அரபுக் கல்லூரியை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. இந்த எண்ணத்தை, அப்போது நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவராக இருந்த மர்ஹ¤ம் அல்ஹாஜ் அமீர் மேர்ஷாவிடம் தெரிவித்தார்.

அமீர் மேர்ஷா அரபுக் கல்லூரியை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார். இதன் படி 21.10.1981ல் இக்கல்லூரி 17 மாணவர்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருதை சேர்ந்த மெளலவி ஏ. டபிள்யூ. எம். அலியார் ஹஸறத் இதன் முதல் அதிபராகக் கடமையாற்றினார்.

இக் கல்லூரி வசதிகள் குறைந்த ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. போதிய இடவசதியும் இல்லாதிருந்தது, இவ்வேளையில் அரபு நாட்டுக் கொடை வள்ளல் அஷ் ஷெய்க் ஸாமில் இங்கு வருகை தந்தார். இக்கல்லூரியின் பழைய கட்டடத்தையும் இங்கு நிலவிய இடப்பற்றாக்குறையையும் அவதானித்த அவர் 901கீ301 அளவுடைய மூன்று மாடிக் கட்டத்தை அமைத்துத் தர முன்வந்தார். அவரது நிதியின் மூலம் புதிய கட்டட வேலைகள் தொடங்கப்பட்டன. ஊர் மக்களும் பொருட்கள், நெல், பணம் ஆகியவற்றை வழங்கியுதவினர். கட்டடத்தைப் பூரணமாகக் கட்டி முடிப்பதற்கு மேலும் நிதி தேவைப்பட்ட போது மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் (பா.உ) வினது உதவி நாடப்பட்டது. அவர் பெருமனது கொண்டு கட்டங்கட்டமாக பல இலட்ச ரூபாய்களை வழங்கினார். அல்லாஹ்வின் பேருதவியால் கட்டட வேலைகள் நிறைவுற்று 15.05.2006 இல் அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எல். எம். அதாவுல்லாஹ் (பா.உ) வினால் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

இக் கல்லூரியின் காணியைப் பெற்றுக் கொள்வதற்குத் துணை புரிந்த அக்காலப் பகுதியில் உதவி அரசாங்க அதிபர்களாக இருந்த அல்-ஹாஜ் கே. எம். எம். ஷரீப், அல்-ஹாஜ் இப்றா லெப்பை, அமைச்சராக இருந்த அல்- ஹாஜ் ஏ. ஆர். எம். மன்சூர் ஆகியோரை எம்மால் மறக்கமுடியாது.

நிந்தவூரில் மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஹாஜ் மெளலவி என். இஸ்மத் (ஷர்கி) அவர்கள் இதன் தலைவராக இருந்து அளப்பரிய பணி செய்துள்ளார்.

நிந்தவூர் ஜம்இய்யதுல் உலமாவின் தற்போதைய தலைவர் அல்-ஹாஜ் மெளலவி ஏ. எல். இமாம் (பலாஹி) தற்போது இதன் தலைவராகவும், அல்-ஹாஜ் ஏ. எல். எம். மக்கீன் செயலாளராகவும், ஜனாப் எஸ். எம். கலீல், பொருளாராகவும், அல்-ஹாஜ் மெளலவி எம். ஏ. சி. எம். அப்துல் றகுமான் (ஸஹ்தி) நிர்வாகச் செயலாளராகவும், கட்டட குழு தலைவராக அல்-ஹாஜ் ஏ. எம். இப்றாகிம் (முத்துறைவர்) அதன் பொருளாளராகவும் அல்-ஹாஜ் ரி. எல். ஏ. ஜப்பார் அதன் செயலாளராக அல்-ஹாஜ் எம். ஜிப்ரி, செயற்படுகின்றனர்.

இதுவரை 75 பேர் இங்கு பயின்று மெளலவிகளாக வெளியேறியுள்ளனர். இவர்கள் அரசினர் பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும், பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் விரிவுரையாளர்கள ¡கவும், நீதிபதியாகவும், டாக்டர்களாகவும், அரச, தனியார் நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்களாகவும், வெளிநாட்டு தூதுவராலயங்களில் கடமை புரிவோராகவும், அரபுக் கல்லூரிகளில் அதிபர்களாகவும், விரிவுரையாளர்களாகவும், பள்ளிவாயல்களில் கதீபுகளாகவும், இமாம்களாகவும், வெளிநாட்டு தஃவா நிலையங்களின் முக்கிய செயற்பாட்டாளராகவும் பணியாற்றுகின்றனர்.

அத்துடன் பல்வேறு துறைகளிற் தேர்ச்சிபெற்று தஃவாப் பணியிலும், கல்விப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். (ஆற்றல் மிக்க உலமாக்கள் தற்போது விரிவுரையாளர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்) ஷரீஆக் கற்கை நெறியுடன் அல்-ஆலிம் ஆரம்பப், இறுதிப் பரீட்சைக்கான பாடங்களும், (க.பொ.த) சாதாரணம், உயர்தரப்பரீட்சைக்கான பாடங்களும் இங்கு போதிக்கப்படுகின்றன.

மெளலவிப் பரீட்சை எழுதியபின் நான்கு மாதகாலம் புனித தப்லீக் ஜமாஅத் பணியில் மெளலவிகள் ஈடுபடும் நடைமுறை இங்குள்ளது.

ஆரம்ப காலத்தில் இங்கு ஹிப்ளு வகுப்பும் இருந்துள்ளது. இதில் பயின்று ஐந்து பேர் ஹாபிழ் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது ஷரீஆக் கற்கைப் பிரிவு மாத்திரமே உள்ளது.

இக்கல்லூரி இஸ்லாமிய ஷரீஆக் கோட்பாட்டின் படி ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைக் கற்பிப்பதையும், நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், ஆகியோரின் வழிமுறையைப் பின்பற்றி வாழும் இளம் சமூகத்தை உருவாக்குவதையும், சமூகத்துக்கு நற்பணியாற்றும் ஆளுமைமிக்க உலமாக்களை உருவாக்குவதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள கட்டடத்தில் நிருவாகப் பகுதியும், வகுப்பறைகளும், விடுதியும் அமைந்துள்ளன. பள்ளிவாயல், நூலகம், கூட்ட மண்டபம், சமயலறை, உணவு மண்டபம் ஆகியவற்றுக்குத் தனித்தனியே வசதியான கட்டடங்கள் இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இக்குறைகள் விரைவில் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக உதவியவர்களுக்கும், உதவிக் கொண்டிருப்பவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! ஆமீன்!

நன்றி நவில்கின்றோம்

எமது கல்லூரியின் புதிய மாடிக் கட்டடம் குறுகிய காலத்தில் கம்பீரமாக காட்சி தரும் வகையில் உருவாக காணியும், நிதியுதவியும், நேர்த்தியான ஆலோசனைகளும் பொருளுதவிகளும், போற்றத்தக்க பங்களிப்புக்களும் வழங்கிய அனைத்து கொடைவள்ளல்களுக்கும், குறிப்பாக சவூதி அரேபிய நாட்டை சேர்ந்த கொடைவள்ளல் அஷ்ஷெய்ஹ் மர்ஹ¤ம் அஸ்ஸாமில் மற்றும் கெளரவ மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் அல்-ஹாஜ் ஏ. எல். எம். அதாவுல்லாஹ் (எம்.பி) அவர்களுக்கும், பாராளுமன்ற பிரதிநிதிகள், பொறியியலாளர், புத்திஜீவிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கட்டுமானப் பணியாளர்கள், அதிபர், விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைத்து பிரிவினர்களுக்கும் எமது மன நிறைவான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு ஆரோக்கியமும், அருள்வாழ்வும் பெற பிரார்த்திக்கின்றோம்.

ஆளுநர் சபை,

காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி, நிந்தவூர்

தயாரிப்பு:

ஏ.எல்.ஏ. றபீக் பிர்தெளஸ்

படங்கள்:- நிந்தவூர் தினகரன் விசேட நிருபர்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]