விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

Print

 
எம்மவர் எழுதிய மோகனாங்கி முதல் நாவல்

எம்மவர் எழுதிய மோகனாங்கி முதல் நாவல்

தமிழில் வரலாற்று நாவல்கள்

உரைநடை இலக்கிய வடிவமாக கருதப்படும் நாவல் இலக்கியங்கள் ஆங்கிலத்திலிருந்தே தமிழுக்கு அறிமுகமாயின. அந்த வகையில் ஆங்கிலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஆங்கில வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டுவிட்டன. இவை ஆங்கில மொழி பேசுகின்ற ஏனைய நாடுகளுக்கும் பரவின. முக்கியமாக பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகளில் ஆங்கில மொழி ஆட்சி மொழியாக இருந்தது. ஆங்கிலம் படித்தவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர்.

இவர்கள் தமது ஆங்கில அறிவைப் பயன்படுத்தி ஆங்கில வரலாற்று நாவல்களை வாசித்தனர். இவர்களுள் சிலர் தமிழிலும் இவ்வாறான நூல்களை எழுதினால் என்ன என சிந்தித்தனர். இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த ஆங்கிலம் படித்த தமிழர்களே முதன் முதலில் தமிழில் புனைகதை எழுதினர். வரலாற்று நாவல்களும் இவர்களாலேயே எழுதப்பட்டன.

வரலாற்று நாவல்கள் உலகில் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது பிரெஞ்சுப் புரட்சியாகும். புரட்சிக்கு பின்னரான காலம் ஐரோப்பிய சமூகத்திலும் இலக்கியத்திலும் நவீன சிந்தனையை தோற்றுவித்தது. தேசியப் பற்று மக்கள் மத்தியில் அதிகரித்தது. நமது வரலாறு தொடர்பாக அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக மக்கள் காணப்பட்டனர். அவர்களின் ஆவலை நிறைவுசெய்ய வேண்டிய பணி எழுத்தாளர்களுக்கு இருந்தது. இந்தக் காரணங்களினாலேயே ஐரோப்பாவில் முதலில் வரலாற்று நாவல்கள் தோற்றம் பெற்றன. லூக்காக்ஸின் கருத்துப்படி சமூகத்தில் வரலாற்று நாவல்கள் தோன்றுவதற்கும் வரலாற்று உணர்வு தோன்றுவதற்கும் பிரெஞ்சுப் புரட்சியே அடிப்படைக் காரணமாக அமைந்தது எனலாம்.

வரலாற்றிலிருந்து பெறப்பட்ட சம்பவங்களையும் கதை மாந்தரையும் கொண்டு எழுதப்படுவது வரலாற்று நாவல்களாகும்.

வரலாற்று நாவல் என்னும் போது வரலாற்று நிகழ்வுகளை ஒழுங்கான முறையில் தரவுகளுடன் எடுத்துக்காட்டுவதாக இருத்தல் வேண்டும். மையக் கருத்தை சிதைக்காத வகையில் வரலாற்று சூழல் சித்திரிக்கப்பட வேண்டும்.

இத்தினையாம் நூற்றாண்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது என்பதை வரலாற்று நாவல் சுட்டிக் காட்டுகின்றது. இதன் கருப்பொருள் பொதுவான அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சிகளாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தில் வாழ்ந்த உண்மை மனிதனின் கதையாக இருக்கலாம். கற்பனை மனிதனாகவும் இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மையாக இருக்க வேண்டும். இவ்வாறுதான் வரலாற்று நாவல்கள் வரையறை செய்யப்படுகின்றன.

யதார்த்த நிகழ்ச்சிகளும் கற்பனையும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு இழைக்கப்படுவது தான் உண்மையான வரலாற்று நாவல் என பி. வி. வேலாயுதன்பிள்ளை குறிப்பிடுகின்றார்.

வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களைத் தான் வவரலாற்றுப் புனைவு நாவல்கள் எனக் குறிப்பிடுகின்றோம். இதில் கதை மாந்தர்களில் சிலராவது வரலாற்று நாயகர்களாக இருக்க வேண்டும் என திறனாய்வாளர் கே. எம். தரகன் குறிப்பிடுகின்றார்.

வரலாற்று நாவல்கள் பற்றி சி. கிuttலீr பிiலீlனீ (பட்டர்பீல்ட்) இப்படிச் சொல்கிறார். வரலாற்று நாவலில் நடந்த சம்பவங்கள் உண்மையாக நடந்ததுதான் என வாசகர்கள் எண்ணத்தக்க வகையில் எழுதப்படல் வேண்டும்.

ஒருவரைப் பற்றி எழுதப்படும் கதைகள், எல்லாம் சுவாரசியம் இல்லாதவையாக இருக்கலாம். ஆனால் அக்கதைகள் உண்மையானவை போல இருக்க வேண்டும். அதில் சித்திரிக்கப்படும் மாந்தர் ஒரு காலத்தில் வாழ்ந்தனர் என வாசகர்கள் என்னும் வகையில் இருக்க வேண்டும் என்பது கல்பந்த பாலகிருஷ்ணன் என்ற திறனாய்வாளரின் கருத்தாகும்.

எனவே வரலாற்று நாவல்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அவை நடப்பியல் தன்மையும் கற்பனையில் உருவாக்கப்பட்ட அற்புதத் தன்மையும் கொண்டவையாக அமைகின்றன எனக் கருத முடியும். யதார்த்தமும் கற்பனையும் கலந்துவிடும் இந்நாவல்களை வரலாற்று நாவல் என்றும் வரலாற்றுப் புனைவு நாவல் என்றும் அழைக்கலாம். நம்பமுடியாத சாகசத்தன்மை, ஆள் மாறாட்டம், லட்சியக்காதல், வீரப் பண்பு போன்ற கற்பனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட புனைவுக் கூறுகளும் உண்மையான வரலாற்று நிகழ்வுகளும் கலந்து எழுதப்படும் நாவல்களை வரலாற்று நாவல்கள் என்று வரையறுக்கலாம்.

மேற்கண்ட வரையறைகளையுடைய நாவல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இங்கிலாந்தில் வால்டர்ஸ்காட், அமெரிக்காவில் ஜேம்ஸ் பெனிமோர் கூப்பர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கீழைத்தேய நாடுகளில் முக்கியமாக பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் வரலாற்று நாவல்கள் ஆங்கில நாவல்களை அடியொட்டியே எழுதப்பட்டன. மேற்கத்தைய கலாசாரத்தை எதிர்த்தவர்கள் கூட வரலாற்று நாவல்களால் ஈர்க்கப்பட்டனர். ஆங்கில வரலாற்று நாவல்களை அப்படியே அடியொட்டி சுதேச மொழிகளிலும் நாவல்களை எழுதினர்.

தேச மொழிகளில் எழுதப்பட்ட நாவல்கள் காலனித்துவ நாடுகளின் வரலாற்று சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டன. இதனால் காலனித்துவ நாடுகளில் தேசியம் தொடர்பான சிந்தனை வலுப்பெற்றது. இதனால் மக்கள் மத்தியில் நாட்டுப் பற்று வளர்ந்தது. காலனித்துவத்துக்கு எதிரான இயக்கங்கள் தோற்றம் பெற்றன. உரைநடை இலக்கியங்கள் வாசிப்பதற்கு இலகுவாக இருந்தன. இதனால் சுதேசிய மொழிகளில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்களை மக்கள் விரும்பிப் படித்தனர்.

தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்று நாவலாக ‘மோகனாங்கி’ கருதப்படுகின்றது. திருகோணமலையைச் சேர்ந்த நி. த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரே இந்த நாவலை எழுதினார். தமிழில் முதலாவது வரலாற்று நாவலை வெளிக்கொண்டுவந்த பெருமை ஈழத்து எழுத்தாளருக்குரியதாகும். 1895 ஆம் ஆண்டு மோகனாங்கி நாவல் வெளியாகியிருந்தது. இதன் மூலம் ஈழத்து இலக்கியத் துறையின் தொன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது. தமிழக எழுத்தாளர்கள் வரலாற்று நாவல்களை எழுதுவதற்கு முன்பே எம்மவரான தி. த. சரவணமுத்துப் பிள்ளை மோகனாங்கி என்ற வரலாற்று நாவலை எழுதிவிட்டார்.

மோகனாங்கி நாவல்தான் தமிழில் தோன்றிய முதல் வரலாற்று நாவல் என்பது வரலாற்று ஆய்வாளர்களதும் இலக்கிய திறனாய்வாளர்களது முடிவாகும். திருகோணமலையைச் சேர்ந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றவர். இவர் மாநிலக் கல்லூரியில் இருந்த கீழைத்தேயச் சுவடிகள் நூல் நிலையத்தில் நூலகராக பணியாற்றினார். வேலை நேரந் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் தமிழக நாயக்க மன்னர்களின் வரலாற்றை பொழுது போக்காக படித்தார். பொழுதுபோக்கு பின்னர் ஆய்வாக விரிவடைந்தது.

தி. த. சரணவத்துப்பிள்ளை தனது ஆராய்ச்சியின் முடிவில் வரலாற்று நாவல் ஒன்றை எழுதினார். அதுதான் மோகனாங்கி நாவலாகும். வெறும் கற்பனை நாவலாக இல்லாமல் உண்மைச் சம்பவத்தை சித்திரிக்கும் நாவலாக இது அமைந்துள்ளது.

பதினேழாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் திருச்சியிலிருந்து ஆட்சிபுரிந்தவர் சொக்கநாத நாயக்கர். அப்போது தஞ்சையில் இருந்து ஆண்டவர் விஜயராகவ நாயக்கர். இவருடைய பெண் மோகனாங்கி மீது காதல் கொண்ட சொக்கநாதர், மாறு வேடத்தில் சென்று அவளைச் சந்தித்து உறவாடித் திரும்பி வந்து, முறைப்படி திருமணம் பேசத் தமது முக்கிய மந்திரி ஒருவரைத் தூது அனுப்புகிறார். ஆனால் விஜயராகவரின் இரண்டாவது மனைவியின் தம்பி அழகிரி என்பவன் மோகனாங்கியை மணக்க விரும்புகிறான். இவன் சமஸ்தானம் புரோகிதர் ஒருவரின் துணையோடு சூழ்ச்சிசெய்து தூதுசென்ற மந்திரியை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். இந்தச் சம்பவம் காரணமாக சொக்கநாதர் தஞ்சாவூர் மீது போர் தொடுக்கிறார். கடுமையாக நடந்த இந்தப் போரில் தஞ்சை வீரர்கள் தோல்வியடைய விஜயராகவ நாயக்கரே வாளேந்திவந்து எதிர்த்து, அவரும் மாள அவர் ஏற்கனவே செய்திருந்தபடி அரண்மனைக்கு வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது அந்தப்புரத்தில் உள்ளவர்களும் உயிர் துறக்கிறார்கள்.

போர் தொடுத்த சமயத்தில் மோகனாங்கி தன் தந்தையிடம் சென்று சமாதானம் செய்யுமாறு எவ்வளவோ மன்றாடிக் கேட்கிறாள். ஆனால் விஜயராகவர் பிடிவாதமாயிருக்கிறார். அச்சமயத்தில் மோகனாங்கி தனக்கு சொக்கநாதர் கொடுத்த ராஜமுத்திரை பதித்த மோதிரத்தைக் காட்டி, தான் சொக்கநாதருக்கு மனைவியாகிவிட்டதாக கூறி வெளியேறுகிறாள். அரண்மனை தீக்கிரையாகும் சமயத்தில் மோகனாங்கியும் தோழியும் மாத்திரம் தப்பிவிடுகிறார்கள். போரில் வெற்றிகொண்ட சொக்கநாதர் மோகனாங்கியுடன் திருச்சிக்கு வந்து கோலாகலமாகத் திருமணம் நடத்தி வாழ்கிறார்.

இந்த நாவலை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை தமது சரித்திர ஆய்வுகளில் கண்ட உண்மைச் சம்பவங்களுக்கு உருக்கொடுக்கும் வகையிலேயே எழுதியுள்ளார். கதையம்சங்களுக்கு முக்கியத்துவமும் கலைநயமும் கொண்டு இது எழுதப்பட்டுள்ளது. நட்சினை இந்திய சரித்திரம் எழுதிய பகடாது நரசிம்மலு நாயுடு என்பவர் தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதும்போது சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி நாவலைத் தமது வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளார். இது மோகனாங்கி நாவலுக்கு பெருமை சேர்க்கிறது. மோகனாங்கி என்ற பாத்திரந்தான் பின்னர் ராணி மங்கம்மாளாக உருப்பெற்றது. இந்த ஒரு பெயர்தான் நாவலில் கண்ட புனைபெயர். மற்றைய கதை மாந்தர் எல்லாரும் சரித்திரத்திலுள்ளவாறே உண்மைப் பெயரோடு உலாவுகிறார்கள்.

மோகனாங்கி என்ற வரலாற்று நாவல் பற்றியும் அதை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை பற்றியும் டில்லிப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ச. சீனிவாசன் ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம் என்ற தனது நூலிலே விரிவாக எழுதியுள்ளார்.

சங்ககால இலக்கியங்களிலிருந்து தமிழர் வரலாற்றை அறிந்துகொள்வது போன்று சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி நாவலில் இருந்து நாயக்கமன்னர் காலத்து விடயங்களை தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2008 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]