புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
"அந்த மேரி மாதாவே நேரில் வந்தமாதிரி தெரியவே அந்தம்மா காலைக் கட்டிக் கொண்டேன்''

"அந்த மேரி மாதாவே நேரில் வந்தமாதிரி தெரியவே அந்தம்மா காலைக் கட்டிக் கொண்டேன்''

பிரபல வர்த்தகர்

கே. பழனியாண்டி

கொழும்பில் எத்தனையோ பணம் படைத்த வர்த்தகர்கள் இருக்கின்ற போதிலும் ஊடகவியலாளர்களுக்கும் வாசகர்கள், நேயர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர்தான் பழனியாண்டி. பழைய சோனகத்தெரு வர்த்தகர் சங்கத் தலைவர் என்ற வகையில் அடிக்கடி ஊடகங்களின் கவனத்தைக் கவரும் பழனியாண்டி, மிகச் சாதாரண நிலையில் இருந்து கிடுகிடுவென வளர்ந்து, கோடீஸ்வரரானவர். இந்தவகையில் ஏ.வை.எஸ். ஞானத்தின் சாம்பலில் இருந்து வீரியத்துடன் கிளம்பிய அதே விடாமுயற்சியைக் கைவரப்பெற்றவர் என இவரைக் கொள்ள முடியும். மிகச் சாதாரண நிலையில் இருந்து தடைகளைத் தாண்டி உச்சிக்குச் செல்வதென்றால் அவர் எத்தனை மகா உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மலைப்பு ஏற்படுகிறது. பழமொழிகளையும், தத்துவ வார்த்தைகளையும், சான்றோர் வாக்குகளையும் நாம் படித்திருக்கிறோம். அவற்றை எல்லாம் நிதர்சனமாக்கிக் காட்டியிருக்கிறார் உழைப்பின் உச்சமான நமது பழனியாண்டி..

‘பண்டாரவளை டவுன் ஸ்கூலுக்கு எல்லாப் பையன்களும் படிக்கப் போறதை பார்த்த எனக்கு அவங்க ளைப் போலவே டவுனுக்கு படிக்கப் போக ஆசை ஏற்பட்டது. அப்பாக்கிட்ட அதற்கு அனு மதி கேட்டேன்.

தான் வாங்கிய முதல் காருடன்...

அதற்கு அவர், ‘நீ டவுன் ஸ்கூலு க்கு படிக்கப் போயிட்டா யாருடா தங்கச்சியை பார்த்துக்கிறது? நாங்கள் வேலை செய்கிற இடத்து க்கு யாரு தேத்தண்ணி கொண்டுவாரது? நீ பேசாம வீட்டுலயே இரு...’ என்று சொன்னார்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது...’ என்று தனது அந்தக் கால அனுபவங்களை திரை விலக்கி எம்மோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார் பழனியாண்டி. தனது பூர்வீகம் பற்றி இப்படி விபரிக்கிறார் அவர்.

“பண்டாரவளையில் இருந்து எட்டு கிலோ மீற்றர் பயணித்தால் நான் பிறந்து வளர்ந்த கிரேக்க எஸ்ட்டேட் உங்களை வரவேற்கும். மிகவும் அழகான ஊர். அந்த தோட்டத்து லயத்தில் தான் நான் பிறந்தேன்.

என் அப்பா பெயர் குழந்தான் கவுண்டர், அம்மா பாப்பம்மா. இந்தியாவிலிருந்து வெள்ளைக்காரனால் கூலியாக அழைத்துவரப்பட்டவர்தான் என் அப்பா. தோட்டங்கள் என்றால் லயன்களுக்கு ஒவ்வொரு பெயர் வைத்து அழைப்பார்கள்.

அது மாதிரி எங்கள் தோட்டத்திலயும் மேட்டு லயம், கங்காணி லயம் என்று இருந்தன. எங்கள் லயத்தை குழந்தான் லயம் என்றுதான் அழைப்பார்கள்.

ஆழிக்குமரன் ஆனந்தன் விடாமல் காலிமுகத்திடலில் நடனமாடியபோது... நடுவில் ஆனந்தன்- வலது மூலையில் நம்மவர்.

பத்து காம்புரா கொண்ட அந்த லயத்தில் இரண்டாவது வீடுதான் எங்களுடையது. என் குடும்பத்தில் மொத்தம் எட்டுப் பேர்.

இரண்டாவது நான் தான். எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே என் அண்ணன் இறந்துவிட வீட்டு வேலைகள் அனைத்தையும் என் பொறுப்பிலே விட்டுவிட்டார்கள்.

அதன் பிறகு எனது இரண்டு வயது தங்கையை நான் தான் பார்த்துக்கொள்வேன். இடையில் எங்கள் தோட்டத்து பாடசாலைக்கும் போய்வருவேன். எங்கள் லயத்தில் இருந்து இரண்டு கட்டை நடந்தால் அந்தப் பாடசாலை வரும். அங்கே ஒரே ஒரு டீச்சர்தான் இருந்தாங்க. அவங்க பெயர் புஸ்பா டீச்சர்.

அவங்கதான் எனக்கு ‘அ’ எழுத கற்றுக் கொடுத்தாங்க. வீட்டில் வேலை அதிகமா இருக்கு ஸ்கூல்ல கொஞ்ச நேரம் ஓய்வா இருக்கலாம்னு அங்கே போனா... புஸ்பா டீச்சர் தன் வீட்டு வேலைகளை என்னிடம் தான் கொடுப்பாங்க.

வகுப்பிலே எத்தனையோ மாணவர்கள் இருக்க அவங்க என்னை தெரிவு செய்ததற்கு ஒரு காரணம் இருக்கு! வயதுக்கு மீறிய வேலை செய்யக்கூடிய ஆளாக நான் இருந்தேன்.

புஸ்பா டீச்சர் சாப்பிட்டு வைக்கும் சாப்பாட்டு தட்டுகளையும், சட்டிகளையும் கழுவுவது, வீட்டை பெருக்கி சுத்தமாக்குவது என்று ஏகப்பட்ட வேலை. இது தவிர என் வீட்டுலயும் காலையிலயே ரொட்டி சுட்டு, தேங்காய் சம்பல் அரைப்பது அனைத்தும் நான்தான்.

அப்பா, அம்மா, மனைவி மகன், மகளுடன் பழனியாண்டி பின்வரிசையில் சகோதரர்கள் மற்றும் சகோதரி.

தோட்டத்தில வேலை செய்யும் எனது பெற்றோருக்கு சாப்பாடு கட்டி தேத்தண்ணி போத்தலோடு தேயிலைக் காட்டுக்கும் போய்விடுவேன். இப்படி கஷ்டப்பட்டதால் நானும் மற்ற மாணவர்கள் போல ஸ்கூல் சீருடை அணிந்து பண்டாரவளை டவுனுக்குப் போய் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்விட்டது.

அப்போ எனக்கு ஒன்பது வயது. ஸ்கூல் போக வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுப் பார்த்தேன். அதற்கு அவர் இப்போ உனக்கு படிக்கிற வயதில்லை... வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இங்கேயே இரு என்றார். ஆனாலும் நான் அதற்கு சம்மதிக்கவில்லை.

எப்படியும் பண்டாரவளைக்கு போய் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாய் இருந்தேன். ஒரு நாள் காலை வீட்டுக்கு தெரியாமல் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி வீட்டில இருந்த பழைய கால்சட்டையையும், சட்டையையும் எடுத்து அணிந்துகொண்டு புத்தகப் பையை தோளில் மாட்டிக்கொண்டு பண்டாரவளைக்கு படிக்கப் போகும் பையன்களோடு நானும் பின்னாலேயே சென்றேன்.

பாடசாலையில் சேர்வதாக இருந்தால் பெற்றோர்களோடுதான் வரவேண்டும், இப்படி தனியாக வந்தால் சேர்க்கமாட்டார்கள் என்று மாணவர்கள் கூறியதை நான் கண்டுகொள்ளவில்லை.

அவர்களோடு நடந்தேன். ஏழு மைல் நடைக்குப் பிறகு சென் மேரிஸ் பாடசாலைக்குள் அந்த மாணவர்களோடு நுழைந்து, நானும் அவர்களோடு அமர்ந்துகொண்டேன்.

அப்பாடா பாடசாலையில் வந்து சேர்ந்திட்டேன். இனி பிரச்சினை இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டபோது, அந்த வகுப்பிற்குள் ஒரு டீச்சர் நுழைந்தார்.

நண்பர்களுடன் (இவரை அடையாளம் தெரிகிறதா?)

கையோடு அவர் கொண்டு வந்த பெயர் பதிவேட்டில் உள்ள பெயர்களை ஒவ்வொன்றாக வாசிக்க சமுகமளித்திருந்த மாணவர்கள் எழும்பி தமது வருகையை உறுதிப்படுத்தினார்கள். பிறகு என்னை கண்டு கொண்ட அந்த டீச்சர் என்னை எழுப்பி விசாரிக்கத் தொடங்கினார்.

நான் பாடசாலைக்கு வந்த விதத்தை கூறினேன். கோபமடைந்த அந்த டீச்சர் இப்படி இடையில் வந்தெல்லாம் சேரமுடியாது. ஜனவரி தொடக்கத்தில்தான் வரவேண்டும். அதுவும் பெற்றோருடன் வரவேண்டும் என்று அவர் கூறியதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பிறகு என்னை அவர் வெளியே போகச் சொல்ல, ‘நான் படிக்க வந்திருக்கேன் வெளியே போகமுடியாது’ என்று நான் பிடிவாதமாக மறுக்க, அவரோ இங்கே பிரச்சினை செய்ய வேண்டாம் வெளியே போங்க என்று சொல்ல ஒரு சுவாரசியமான நாடகமே அங்கு அரங்கேற ஆரம்பித்தது.

எனக்கு தனியே போக வழி தெரியாது என்றும் எங்க தோட்டத்து மாணவர்களோடு தான் போகவேண்டும் என்றும் நான் சொன்னேன். ‘பாடசாலை முடிய ஒன்றரை மணியாகும். அதுவரை நீ வெளியே நில்! என்றார் டீச்சர். என்னை அவர் வெளியே அனுப்ப நான் புத்தகப் பையோடு வெளியே வந்தேன்.

வீட்டுல காலை ஆறு மணிகெல்லாம் சாப்பிட்டுவிடுவேன். அதனாலே பசி வயிற்றை கிள்ளியது. வீட்டிலும் சொல்லாமல் வந்து விட்டோமே என்ற பயம்வர எனக்கு அழுகை வந்தது.

தேம்பி தேம்பி கொண்டே அந்தப் பாடசாலைக்கு முன்பாக இருந்த தண்ணீர் குழாயில் தண்ணீரை குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டு பாடசாலை படிக்கட்டில் அமர்ந்தேன். (நான் தண்ணீர் குடித்த அந்தக் குழாய் இன்னும் இருக்கிறது)

நேரம் காலை பத்து மணியை தாண்டியிருக்கும். பாடசாலையில் சேர முடியாமல் போய்விட்டதை நினைத்த போது துக்கம் தொண்டையை அடைத்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அப்போது படிகளில் டக் டக் என்ற ஓசை எழுப்பிய படி யாரோ நடந்து வருவதை அவதானித்த நான் திரும்பிப் பார்த்தேன்.

நீளமான வெள்ளை அங்கியை அணிந்து கழுத்தில் பெரிய சிலுவை தொங்கவிட்டபடி சென் மேரீஸ் சுக்கு எதிரில் நிற்கும் மாதா சிலையே உயிர்பெற்று வந்தது போல வெள்ளை வெளேர் என்ற நிறத் தோடு ஒரு அம்மா என் எதிரே நின்றார்.

நான் இது நிச்சயம் அந்த மாதாவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் காலை கட்டிப் பிடி த்து அழுதேன். ஆபத்தில் இருப்போரை அன்னை மாதா அரவணைப்பாராமே! அது போலவே என்னையும் அந்த மாதா கீழே குனிந்து தூக்கி எடுத்தார்.

ஏன் அழுகிறாய் என்று இங்கிலீஸ்ல கேட்க அதற்கு நான் தமிழில் பதில் சொல்ல அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறேன் என்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு அந்த பாட சாலையின் ஒரு அறைக்குள் சென்றார். அங்கே அவருக்கு உதவியாக இருந்த ‘மேரி’ என்ற பெண்ணை அழைத்து எனது பிரச்சினை என்னவென்று கேட்டு சொல்லுமாறு கூறினார்.

என்னிடம் நடந்த விடயங்களைக் கேட்டு அவள் அந்த அம்மாவிடம் கூறினாள். பிறகு எனக்கு உடனடியாக பணிசும் டீயும் தந்தார்கள். நான் அந்த பணிசை மடித்து அந்த தேனீரில் நனைத்து இரண்டு கடியில் சாப்பிட்டுவிட்டதை பார்த்த அந்த வெள்ளைக்கார மதர் சிரித்தார்கள்.

பிறகு நாலாம் வகுப்பு டீச்சரை அழைத்தார்கள். அவர் வந்து என்னைப் பார்த்ததும் நிலைமையை புரிந்துகொண்டு நடந்த சம்பவத்தை மதரிடம் கூற அதற்கு அவரோ என்னை தேர்வு செய்து வகுப்பில் சேர்த்துக்கொள்ளும்படி பணித்தார். எனக்கான தேர்வில் நான் முதல் மார்க் வாங்க என்னை முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதியளித்தார்கள்.

அதன்பிறகு எனக்கான டிரஸ், நோட்புக் போன்றவற்றை வாங்குவதற்கான ஒரு பெரிய பட்டியலை நீட்ட அதெல்லாம் வாங்க என்னிடம் பணமுமில்லை, என் வீட்டுல தரவும் மாட்டார்கள் என்று சொல்ல.

என்னை அரவணைத்த அந்த மதர் எனக்கான அனைத்து பொருட்களையும் வாங்கித் தரும்படி மேரியிடம் சொன்னார்.

மேரி என்னை அழைத்துக்கொண்டு பண்டாரவளை டவுனுக்கு போய் மெயின் வீதியில் இருந்த வேலுப்பிள்ளை புடவைக் கடையில் எனக்கான சீருடையையும் பேன்சி கடையில் சப்பாத்தும், பராசக்தி அம்மன் கடையில் அப்பியாச புத்தகமும் வாங்கி ஒரு மூட்டையாக கட்டி கொடுத்தார். அதன் பிறகு பாடசாலை முடிந்து வீட்டிற்கு போகும்போது மாலை நான்கு மணியாகிவிட்டது.

அதற்குள் நான் பண்டாரவளைக்கு படிக்கப் போன கதை என் வீட்டாருக்கு தெரிந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் என்னை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். வீட்டில் நுழைந்ததும் ஏன்டா சொல்லாம போன என்று அப்பா கேட்க நான் நடந்த விபரத்தை சொன்னேன். அவர்களுக்கு நான் பாடசாலை போவதில் துளியும் விருப்பம் இல்லை.

எங்கே தான் வேலை செய்யும் இடத்திற்கு சாப்பாடு கொண்டுவர ஆளில்லாமல் போய்விடுமோ என்ற கவலை அப்பாவுக்கு.

இரவில் நான் கொண்டு போன பாடசாலை உடையை அணிந்து பார்த்தேன். ரொம்பவும் அழகாக இருந்தது. அடுத்த நாளிலிருந்து பண்டாரவளைக்கு படிக்கச் செல்லத் தொடங்கினேன். ஊரிலிருந்து எட்டுக் கிலோ மீட்டர் நடப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

பண்டாரவளையிலேயே தங்கி படித்தால் நல்லது என்று நினைத்த நான் அங்கேயே ஒரு கடையில் வேலை செய்ய முடிவெடுத்தேன். பாடசாலை முடிந்து புத்தகப் பையுடன் பண்டாரவளை நகரத்தில் வல்லிபுரம் கடை, மாரிமுத்து கடை என்று கடை கடையாக ஏறி வேலை கேட்டேன். என்னைப் பார்த்த கடை முதலாளிகள் உனக்கெல்லாம் இங்கே வேலை கிடையாது போ! போ! என்று துரத்தினார்கள்.

என் கதையை கேட்க எவரும் தயாராக இல்லை. நிறைய கடைகளின் படிகளில் ஏறி களைத்துப் போன நான் கடைசியாக ஒரு கடையை பார்த்து விடுவோமே! என்று மெயின் வீதியில் எழுத்திரெண்டாம் இலக்க கடையான யமுனா ஸ்டோர்ஸில் நுழைந்தேன். அங்கே உள்ள சீட்டில் அமர்ந்திருந்த முதலாளியிடம் சென்று என் கதையை சொன்னேன்.

சாப்பாடும் படுத்து தூங்க கொஞ்சம் இடமும் இருந்தா போதுங்க. பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் உங்க கடையிலேயே வேலை செய்கிறேங்க என்று நான் சொன்னதை பொறுமையாக கேட்ட அந்த கடை முதலாளி. எனக்கு வேலைதர சம்மதித்தார்.

இதன்பின் அங்கேயே தங்கி படிக்க ஆரம்பித்தேன். ஒரே ஆண்டில் டபுள் புரமோசன் வாங்கி இரண்டாம் வகுப்பில் சேர்ந்தேன். அதன் பிறகு இன்னொரு புரமோசன் பெற்று ஐந்தாம் வகுப்புக்கு மாறினேன்.

ஆனால் என் முதலாளியின் பிள்ளைகளோ யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்வில் பெயிலாகி விட்டதால் முதலாளி ரொம்பவும் கவலையில் இருந்தார். எனக்கு, சுந்தரம் என்ற பெயரை வைத்தது அவர்தான். என் முதலாளியின் பெயர் சொக்கலிங்கம். அதன் பிறகு முதலாளி என்னை கடையின் கல்லாவில் உட்கார வைத்து காசாளராக்கினார்.

பிறகு ஒருநாள் முதலாளி என்னிடம் வந்து, இனி நீ இந்தக் கடையில் மட்டும்தான் வேலை செய்யணும், ஸ்கூலுக்கு போகக் கூடாது. அப்படிப் போகணும்னா நீ இந்தக் கடையை விட்டு இப்பவே போயிடலாம் என்றார்! அவரின் வேண்டுகோளை ஏற்று படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அங்கேயே தங்கினேன்.

கல்லாவில் உட்கார்ந்திருப்பது கடையை கூட்டிப் பெருக்குவது, முதலாளிக்கு ‘டீ’ வாங்கி வருவது என்று அனைத்து வேலையையும் நானே செய்தேன்.

பொருட்களை எடுத்து கட்டி எடைபோட்டு கொடுப்பதில் நான் அப்படியொரு வேகம் காட்டியதாக என்னோடு பணியாற்றியவர்கள் கூறினார்கள்’ என்று தனது இளம் பிராயம் பற்றி இனிக்க இனிக்க பேசிய பழனியாண்டி தலைநகரில் வர்த்தகராக தான் உயர்ந்தது பற்றி இப்படி சொல்கிறார்.

‘கொழும்புக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவு ஒரு நாள் நிறைவேறியது. பதின்மூன்றாவது வயதில் கொழும்புக்கு வந்தேன். 203, கனகராஜன் கம்பனி என்ற கடையில் வேலைக்கு சேரந்தேன். முதலாளிக்கு ‘டீ’ வாங்கி கொடுப்பது போன்ற எடு பிடி வேலைகளைத்தான் எனக்குத் தந்தார்கள். அதன் பிறகு சேல்ஸ்மேனாக வேலைசெய்தேன்.

மாதம் இருபது ரூபா சம்பளம் தந்தார்கள். மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தவுடன் மெசஞ்சர் வீதியில் இருந்த கிங்ஸ்லி கொலேஜில் ஆங்கிலம் படித்தேன்.

ஆனால் கடையில் இருந்தவர்கள் இதை விரும்பவில்லை. நான் அளவுக்கு மீறி வேலை செய்வதாக குற்றம் சாட்டினார்கள். அதனால் எனக்கு அந்தக் கடையில் இருக்கப் பிடிக்கவில்லை. கடையைவிட்டு விலகி விட முடிவு செய்தேன்.

முதலாளியிடம் விசயத்தை சொன்னேன். அதற்கு முதலாளி ‘நீ விலகிப் போய் என்னடா செய்யப் போற?’ என்றார். அதற்கு நான் இனி எந்த முதலாளிக்கிட்டேயும் வேலை பார்க்க மாட்டேன் என்றேன். அதற்கு அவர் தள்ளுவண்டி இழுக்கப் போறியா, இல்ல மூட்டை தூக்கப் போறியா? என்று ஒரு ஏளனச் சிரிப்போடு கேட்டார்.

நான் எனது சம்பள பாக்கி ஆயிரம் ரூபாவை தருமாறு கேட்க, முதலாளி நாளையே உனது சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றார். மறுநாள் ஆயிரம் ரூபா கைக்கு வர ஒரு சிறிய ரசீது புத்தகம் அச்சிட்டு எடுத்தேன். எழுபத்தைந்து ரூபாய்க்கு ஒரு பேக் வாங்கினேன்.

அப்புறம் அண்ணாதுரை (முன்னாள் தமிழக முதல்வர்) பாவிக்கும் கட்டை மை பேனா நூறும், இந்திய பெல்ட் நூறும் வாங்கினேன். மை பேனாவின் விலை ஒன்று இரண்டு ரூபாய் தான்.

அனைத்தையும் பேக்கில் போட்டு எடுத்துக் கொண்டு பொரளை, மருதானை பக்கமாக நடந்தேன். அங்கு வியாபாரம் பெரிதாக நடக்கவில்லை. அதன் பிறகு கண்டி பஸ்ஸில் ஏறி வரக்காப்பொலையில் இறங்கினேன். வியாபாரம் ஓஹோவாக இருந்தது. அப்புறம் கேகாலை, அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. கையில ஒரு முப்பது ரூபாய் இலாபம் வந்து விட்டது. இப்படி தினமும் முப்பது, அறுபது, நூறு என்று இலாபம் படிப்படியாக உயர்ந்தது.

அதன் பிறகு ஒரு நாள் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்தேன். அதில் சீதுவை கோழித் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு தவிடு தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கம்பனியும் அரச கம்பனி என்பதால் கொழும்புக் கடைகளுக்கு சென்று தவிடுகளின் விலை போன்றவற்றை விசாரித்துச் சென்று அந்த கம்பனியோடு பேசி நானே அந்த கம்பனிக்கு தவிடு சப்ளை செய்தேன்.

அதில் எனக்கு இருபத்தைந்தாயிரம் இலாபம் கிடைத்தது. பழைய சோனகத் தெரு 151ம் இலக்க கடையை வாடகைக்கு எடுத்து சுந்தரம் ஸ்டோர்ஸ் என்ற பெயருடன் தொடங்கினேன்.

அதற்குப் பிறகு அந்தக் கடையை சொந்தமாக வாங்கினேன். பிறகு படிப்படியாக எனது வியாபாரம் கிளைவிட்டு வளர ஆரம்பித்தது’ என்று தான் வர்த்தக உலகுக்கு வந்த பாதையை திரும்பி பார்க்கும் பழனியாண்டியிடம் அவரின் குலதெய்வம் பற்றி விசாரித்தோம்.

‘எங்க ஊரு முருகன் தான் என் குல தெய்வ சாமி, என் பெயரும் முருகன் பெயரும் ஒன்று என்பதும் எனக்கும் முருகனுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்திற்கு ஒரு காரணம் தான்.

நான் பண்டாரவளைக்கு படிக்க வந்த அந்த முதல் நாள் என் குல தெய்வம் முருகனை கும்பிட்டு உண்டியலில் பத்து சதம் போட்டேன். முருகா உனக்காகவும், எனக்காகவும்தான் படிக்கப் போறேன் என்று வேண்டிக்கொண்டுதான் பாடசாலைக்குப் போனேன். இப்போது ஒரு நாற்பது வருசமா தைப் பூச திருவிழாவை நானே நடத்தி வருகிறேன். இதுவரைக்கும் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை பழனி ஆண்டவரின் திருப்பணிக்காக செலவிட்டிருக்கிறேன் என்கி றார் இந்தப் பழனியாண்டி.

கிரேக் எஸ்டேட் நண்பர்கள் பற்றி கேட்டதற்கு, தனக்கு நிறைய பேர் நண்பர்களாக இருந்ததாகவும் கந்தன், பெரியசாமி, பழனிமலை உள்ளிட்ட பலரை ஞாபகப்படுத்தலாம் என்றும் சொன்னார் பழனியாண்டி.

‘இதில் கந்தன் ரொம்பவும் குறும்பு. பாடசாலையை விட்டு வீடு வரும் போது மரத்தில் ஏறி குருவி முட்டை எடுப்பான். குருவிகளை அடித்து கொல்வான். இன்று அவர்கள் யாரும் அந்த எஸ்டேட்டில் இல்லை. இந்தியாவிற்கு சென்றுவிட்டார்கள். அவர்களோடு பாடசாலை முடிந்து வீடு வரும்போது எங்கள் தோட்டத்து துரை காரில் வலம் வருவார்.

அவரை பார்த்ததும் நாங்கள் எல்லோரும் ‘சலாம்’ போடுவோம் அவரும் பதிலுக்கு சலாம் சொல்லிவிட்டு செல்வார். அப்போது நான் என் நண்பர்களிடம், ‘இந்தத் துரை போற அதே காரை நானும் வாங்கி இந்த ஊரைச் சுற்றுவேன்’ என்று சொல்லியிருக்கிறேன். சொன்ன மாதிரியே பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு காரை வாங்கி கிரேக்க எஸ்டேட்டை சுற்றிப் பார்த்தேன்.’ என்றவரிடம் கல்யாணம் பற்றி கேட்டோம்.

எனது குடும்பத்தாரின் விருப்பப்படியே எனது உறவுக்கார பெண்ணை திருமணம் முடித்தேன். மணமகளின் ஊரான நயாபத்த எஸ்டேட்டின் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. கொழும்பு வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டார்கள். பண்டாரவளை சில்வா ஸ்டூடியோவில் வேலைசெய்த ஒரு புகைப்படக்காரர் வந்து திருமணப் படங்களை எடுத்தார்.’

என்று கூறும் பழனியாண்டியிடம், அது ஒரு காலம் என்று நீங்கள் இன்றும் நினைத்து ஏங்குவது எதைப் பற்றி என்று கேட்டேன்.

நான் என் நண்பர்களோடு ‘பத்தினியம்மா கான்’ என்ற இடத்துக்கு குளிக்கப் போவேன். அது ஒரு அருவி. அங்கே

படைப்பாளர்

கே.வேலாயுதம்

ஒரு பெரிய இரும்புக் குழாய் பொருத்தியிருப்பார்கள். அதில் விழும் நீரில் குளிப்பது ஒரு இதமான சுகம். இன்று நினைத்தாலும் உடம்பில் அந்த நீர் பட்ட ஜில்... ஜில்... குளிர்ச்சியை உணர முடிகிறது.’

என்று அந்த அருவியின் அழகை இன்றும் மறக்க முடியாத பதிவாக சொல்லும் பழனியாண்டியிடம் வாழ்க்கையைப் பற்றி கேட்டோம்.

‘இருக்கும் வரை சந்தோசமாக வாழ வேண்டும். வாழ்க்கை வசந்தமாக இருப்பதற்கு மனசுதான் காரணம். ஒருசிலரிடம் கோடிக் கணக்கில் பணம் இருக்கும். ஆனால் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் தவிப்பார்கள். ஒரு சிலரிடம் ஐந்து சதம் கூட இருக்காது. ஆனால் குடும்பத்தினருடன் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

எனவே வாழ்க்கை மகிழ்ச்சியானதா துன்பமானதா என்பதை மனசுதான் தீர்மானிக்கிறது. எனக்கு அந்த மகிழ்ச்சியான மனசு இருக்கிறது. அதனால் என் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே பயணிக்கிறது என்கிறார் இந்த வர்த்தகர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.