புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
குரல் வளத்தால் நிமிர்ந்து நிற்கும் காலத்தை வென்ற கானங்கள்

குரல் வளத்தால் நிமிர்ந்து நிற்கும் காலத்தை வென்ற கானங்கள்

‘இன்னிசைக் கச்சேரிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடுகின்ற பாடகர்களின் குரல் தானத்திற்கு பெரிதாக அரியாசனம் ஏற்றி மதிப்பு கொடுக்கத் தேவையில்லை. குரல் எல்லோருக்கும் இருப்பதுபோல இந்தப் பாடகர்களுக்கும் இருக்கிறது. அக்குரலை தானம் செய்வதுபோல ஏதோ பாடுகின் றார்கள். மற்றபடி எந்த விசேடமும் அதில் இல்லை’.

இப்படி எண்ணுகின்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். இந்த எண்ணம் சரிதானா?

குரல் எல்லோருக்கும் தான் இருக்கின்றது. ஆனால் அந்த எல்லோராலும் பிறர் ரசிக்கும்படியாக பாட முடிவதில்லை. இறைவன் எல்லோருக்கும் ஏதோவொரு தகுதியை திறமையை, ஆற்றலை தந்திருப்பது போலவே பாடகர்களுக்குப் பாடும் தகுதியை அதற்கேற்ப குரல் வளத்தை தந்திருக்கிறான். அந்தக் குரல்வளத்தைப் பயன்படுத்தி பாடகர்கள் ஏற்ற இறக்கத்தோடு, குரலோசையை வளைத்தும் நெளித்தும், கூட்டியும்-குறைத்தும் சுருதிக்கேற்ப பாடி, ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று விடுகின்றனர்.

இந்த குரல்வளத்தை அதன் பயன்பாட்டை நாம் கொச்சைப்படுத்தவோ, தரம் தாழ்த்தி மதிப்பிடவோ கூடாது. தனக்கு இறைவன் அருட்கொடையாகத் தந்த குரல் வளத்தைப் பயன்படுத்தி பாடிய பாடல்களில் அநேகமானவை, காலத்தை வென்று இப்போதும் காதோரம் எதிரொலித்துக் கொண்டே, மக்களால் முணுமுணுக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. காலத்தை வென்று கதை பேசும் இந்த கானங்கள் சிலவற்றை இங்கு நோக்குவோம்.

தமிழ்த் திரையுலகில் எம்ஜியார் - சிவாஜி சூப்பர் ஸ்டார்களாக - வசூல் மன்னர்களாகக் கொடி கட்டிப் பறப்பதற்கு முன்னமே - டீ. யூ. சின்னப்பா - தியாகராஜ பாகவதர் ஆகிய இருவரும், அக்காலத்திய சூப்பர் ஸ்டார்களாகத் திகழ்ந்தனர் என்பதை பழைய தலைமுறையினர் இன்னும் மறக்கவில்லை. இவ்விருவரும் தம் சொந்தக் குரலில் அக்காலத்தில் பாடியே நடித்தனர். ஒரு படத்தில் 20 - 30 பாடல்கள் இருக்கும். ஒவ்வொரு பாடலும் மிக நீண்டும் இருக்கும்.

அக்காலத்தில் படங்கள் அதிகமாகப் பாடல்களுக்காகவே நீண்டகாலம் ஓடின ‘1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’ நம் இலங்கையில் - தலை நகரில் ஒரே தியேட்டரில் ஒரு வருடத்திற்கு மேல் தொடர்ந்து ஓடியிருப்பது நம் கவனத்திற்குரியது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வதென்ன? அக்கால தமிழ்ச் சினிமாப் படங்கள் பாடல்களுக்காக - பாடியவர்களுக்காக - பாடிய விதம் - குரல்வளம் போன்ற அம்சங்களுக்காகவே ரசிகர்களால் ரசிக்கப்பட்டிருக்கின்றன எனபதன்றோ? குரல்வளம் ரசிக்கும்படியாக இருந்தமையே இதற்கெல்லாம் அடிப்படை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இனி, நம் காலத் துக்கு வருவோம். திரையுலகில் டி. எம். செளந்தரராஜன், ஏ. எம். ராஜா, பீ. பி. ஸ்ரீனிவாஸ், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன், டி. ஆர். மகாலிங்கம் போன்ற பாடகர்கள் பாடிய பல பாடல்கள் - நெஞ்சம் மறக்காத பாடல்களாக இப்போதும் ரசிக்கப்படுகின்றன என்றால், அவற்றுக்கு பாடிய பாடகர்களின் குரல் இனிமையே காரணம். குரல் இனிமை என்றால் ஏற்ற - இறக்கத்தோடு, கூட்டியும் - குறைத்தும், இழுத்தும் - இழுக்காமலும் பாடிய விதத்தையே இங்கு குறிப்பிடுகிறோம்.

மேற்குறிப்பிட்ட தமிழ்த்திரையுலகப் பாடகர்களின் காலத்தை வென்று கான மிசைக்கும் பாடல்களுக்குப் பல உதாரணங்களை இங்கு தொட்டுக்காட்ட முடியும். எனினும் பதச்சோறாக ஓரிரு பாடல்களை மட்டும் பதம் பார்ப்போம்.

“அன்னம் இட்ட வீட்டிலே - கன்னக்கோல் சாத்தவே...” டி.எம்.எஸ்ஸின் ஆரம்பகால பாடல் “காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்....” ஏ. எம். ராஜாவின் இப்படிப் பல பாட ல்கள். கண்டசாலாவின் “தேவதாஸ்” பாடல்கள் இப் போதும் காதோரம் ஒலிக்கின்றனவே’ ஆஹா... “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்புமனங்களில் சிரிக்கின்றான்” இந்த சீர்காழியை மறக்க முடியுமா? “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே” ஜெயராமன் கண்ணிழந்த சிவாஜியாக நெஞ்சில் நிழலாடுகிறாரே! “கோடி கோடி இன்பம் பெறவே - தேடிவந்த செல்வம் - கொஞ்சும் சதங்கை..” இதைப் பாடிய மகாலிங்கத் தின் ஸ்ரீவள்ளி”யை (பழசும் - புதுசும்) மறக்கத்தான் முடியுமா?

இவ்வாறு பாடகிகளில் பீ. சுசீலா, ஜிக்கி, ஜானகி, பானுமதி, ஈஸ்வரி அப்பப்பா.. இவர்களது பாடல்களை எல்லாம் உதாரணங்காட்டி எழுதுவதானால், ஒரு புத்தகமே எழுதலாம். “மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...” என்ற பீ. சுசீலாவின் இப்பாடலை மட்டும் பதச்சோறாக நினைத்துப் பாருங்கள். மயங்கி விடுவீர்கள்.

மேற்கண்ட தமிழ்த் திரையுலகப் பாடக, பாடகிகளின் காலத்தை வென்ற கானங்களை எல்லாம் குரல்தானத்திற்கு மதிப்பளிக்கத் தேவையில்லை என்று ஒதுக்குவது அடி முட்டாள்தனம் அல்லவா?

சரி சினிமாப் பாடல்களை விட்டு வெளியே வருவோம்,

பெங்களூர் ரமணியம்மாள் என்றொரு பாடகியிருந்தார். “பால் மணக்குது, பழம் மணக்குது பழனி மலையிலே....” என்றொரு இந்து சமய பக்திப் பாடலை பாடி முழு தமிழ் கூறும் நல்லுலகையும் தன் குரலால் கட்டிப் போட்டார். சமீபத்தில் மறைந்த எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய “காற்றினிலே வரும் கீதம்...” இந்தியத் தலைவர்கள் பலரையும் கிறங்கச் செய்த பாடல் இது. எம். எஸ். சுப்புலட்சுமி, கே. பி. சுந்தராம்பாள் போன்ற இசைக் கோகிலங்கள் கர்நாடக இசை கலந்து பாடிய பாடல்கள் குரல்வளத்திற்காகவே கொடி கட்டிப் பறந்தன. இதை மறுக்க முடியுமா? நம் இசைமுரசு நாகூர் இ. எம். ஹனீபா ஆரம்ப காலத்தில் பல முறை இலங்கைக்கு வந்ததுபோனவர்.

அதன் பின் நீண்ட காலமாக வராமலிருந்து 1978 இல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அப்போதைய சபாநாயகராகவிருந்த மர்ஹ¥ம் பாக்கீர் மாக்கார் தலைமையில், அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நடந்தபோது இவ்விழாவில் இறை வாழ்த்துப் பாடல் பாட வந்தார். எவ்வித இசையுமின்றி “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று செல்லுவதில்லை” என்ற பாடலை இலங்கையில் முதல் முதல் பாடினார். இசை முரசுவின் குரல் வளம் அந்த மண்டபத்தில் ஒலித்த பாங்கினை இப்போது நினைத்தாலும், நெஞ்சம் இனிக்கிறது.

அடுத்து நிகழ்ச்சி நிரல்படி மேடைக்கு அழைக்கப்பட்டவர், இலங்கைக்கு முதல் விஜயம் மேற்கொண்டு வந்த மர்ஹ¥ம் காயல் ஷேக் முஹம்மத் ஆவார். “உலக முஸ்லிம்களே...” என்று இழுத்தார், சுமார் ஏழெட்டு நிமிடங்களுக்கு அந்த மண்டபமே ஸ்தம்பித்தது. குரல்தானத்திற்கு அரியாசனம் தேவையில்லை எனக் கூறுவோர் வெட்கித் தலைகுனியும்படி காயல் ஷேக்கின் குரல்வளம், இறைவன் தந்த கொடை எனத் துணிந்துரைக்கலாம்.

அதிகம் போவா னேன்? நம் இலங்கை சிங்களத் திரையுல கின் இசைத்துறையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மர்ஹ¥ம் முஹிதீன் பேக் இந்தியாவிலி ருந்து (தமிழகம் - சேலம்) வந்த புதிதில் சிங்கள மொழியே தெரியாத நிலை யில் தமிழில் சிங் கள உச்சரிப்பு களை எழுதிப் பாடி, படிப்படி யாகத் தன் குரல் இனிமையால் சிங்கள சகோதரர் களை எல்லாம் கட்டிப்போட்டதை எப்படிப் புகழ் வது? அங்குலி மாலனின் கதை சிங்களத்தில் “அங்குலிமாலா” திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, “புத்தம் சரணம் கச்சாமி” என்ற பாடலை ஒலிப்பதிவு செய்யும் வேளை, முஹிதீன் பேக் மாஸ்டர் “இது பக்தி மயமான பாடல். பக்திபூர்வமாக ஒரு தடவைதான் பாடுவேன். ஒழுங்காக தவறேதும் நடக்காமல் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டே பக்தி சொட்ட பாடினார். ஒருமுறை பாடிய அப்பாடலின் பிரதிகளே சந்தைக்கு வந்தன. ‘அந்தப் பாடல் இல்லாமல் வைசாகத் திருவிழா இல்லை’ எனக்கூறும் அளவிற்கு, அந்தக்குரல் இப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. சிங்கள சகோதர இதயங்களால் என்றுமே மறக்க முடியாத குரல் இது. இப்போது சொல்லுங்கள், குரல் வளத்திற்கு அரியாசனம் தரக்கூடாதா? 21 ஆம் நூற்றாண்டின் தலைவாசலை சற்றே எட்டிப் பார்ப்போம். ஏராளமான இளம் பாடகர்கள் தம் திறமையை வெளிக்காட்டிக் கொண்டு வெளிச்சத்திற்கு வர முனைப்பு காட்டி வருகின்றனர். சக்தி தொலைக்காட்சி ஊடகம், மூன்றாவது முறையாகப் புதியவர்களுக்கு மகுடம் சூட்டும் மங்கள விழாக்களை பிரம்மாண்டமான முறையில் நடத்தி வருவதைக் காண்கிறோம். இப்புதியவர்கள் இன்று சாதாரண பாடகர்களாகத் தென்படலாம். இப்புதியவர்களின் அணிவகுப்பில் இருந்துதான், நாளைய அசாதாரணப் பாடகர்கள் தோன்றப் போகின்றனர் என்பதை மறுக்கக்கூடாது. இவர்களை எல்லாம் வெறும் குரல் தானம் செய்பவர்கள்தாமே என்று ஒதுக்கிவிடக் கூடாது. அதை விடுத்து எல்லோரும் நலம் வாழ வாழ்த்துவோம், வாருங்கள்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.