புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
ஹட்டனில் நான்கு தலித் நூல்கள் அறிமுக விழா

ஹட்டனில் நான்கு தலித் நூல்கள் அறிமுக விழா

ஹட்டன் தமிழ்ச் சங்கம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் நகர சபை மண்டபத்தில் தமிழகத்தின் முன்னணி தலித் சிந்தனையாளர் வே. அலெக்ஸின் நான்கு தலித் வரலாற்று நூல்களின் அறிமுகமும், தலித்திய சிந்தனை கருத்தாடல் அரங்கமும் நடைபெறவுள்ளது.

தலித் வரலாற்று நூல்கள் நான்கினையும் ஹட்டன் தமிழ்ச் சங்க தலைவர் சு. முரளிதரன் அறிமுகம் செய்து உரையாற்றுவார்.

கருத்தாடல் அரங்கில் : மலையக நாட்டார் இலக்கியம் - தலித்திய பார்வை. ஆய்வாளர் ஸ்டாலின் சிவஞான ஜோதி.

மலையகத்தில் தலித்திய சிந்தனை – நிதர்சன நோக்கு ஆய்வாளர் எம். அகிலன்

தமிழ் சூழலில் இலக்கியங்கள் - தலித்திய முனைப்புகள்

ஆய்வாளர் ஜெ. லெனின் மதிவாணம்.

தலித்திய வேர்கள் - தமிழகமும் – மலையகமும்

பெ. முத்துலிங்கம் (தலைவர் சமூக அபிவிருத்தி நிறுவகம்)

ஆகிய தலைப்புகளில் கருவுரைகளை முன்வைப்பார்கள். தமிழகத்தின் முன்னணி தலித் சிந்தனையாளர் வே. அலெக்ஸ் சிறப்புரை ஆற்றுவார்.

கருவுரை சம்பந்தமாக கருத்துரைகளை தொழிற்சங்கவாதி ஓ. ஏ. இராமையா, எழுத்தாளர் தி. ரா. கோபாலன், சாரல் நாடன் - அந்தனி ஜீவா - பானா தங்கம் – சிவனு மனோகரன் - கல்வியாளர்கள் க. மெய்யநாதன், மொழிவரதன், மு. நேசமணி, சமூகவியலாளர்கள் மோகன் சுப்பிரமணி, ஜோன் ஆகியோர் முன் வைப்பார்கள்.


ஸ்ரீதர் பிச்சையப்பா - ஒரு ஞாபகக் குறிப்பு

சிரித்து சிந்தை குளிரவேண்டுமென்றால் அந்த நாட்களில் ஸ்ரீதரை சந்திக்கச் செல்வதுண்டு.

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆண்டிவால் தெருவில் அறிவிப்பாளர் ஜவஹர் பெர்னாண்டோவின் மினி – சினி வீட்டில் ஸ்ரீதரென்ற நகைச்சுவை அரசனை முதன் முதலில் சந்தித்தேன்.

நடிப்புலகில் ஒரு துடிப்புமிக்க இளைஞராக அப்போது ஸ்ரீதர் இயங்கிக் கொண்டிருந்தார்.

நமது தாயகம் உட்பட தமிழக சினிமா - கலை இலக்கிய தகவல் களஞ்சியமாக ஸ்ரீதரை இனங்கண்டேன்.

பிரியமானவர்களைக் கண்டால் பேரன்புடன் கட்டியணைத்து பிரிய மனமின்றியே பேசிக்கொண்டிருப்பார்.

அடுக்கு மொழியில் மிடுக்குடன் நாம் பேசுவோம். சிலேடையில் சிந்து பாடுவோம்.

தேர்ந்த நடிகனாக திகழ்ந்த ஸ்ரீதருக்கு எனது நட்பு இசையோடு நாட்டம் ஏற்பட உந்து சக்தியானது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருவிழாக்களில் கே. சி. பாலேந்திராவின் ‘ரெயின்போ’ இசையில் நான் பாடும்போது மேடைக்கு முன்னால் ரசிகர் கூட்டத்துடன் ஸ்ரீதரும் அன்று பெய்த மழையில் நனைந்துகொண்டே என் பாடலை ரசித்தபடி இருப்பார்.

கலைஞன் ஸ்ரீதருடன் கதைத்தால் கவலையெல்லாம் பறந்து போகும். நகத்தை கடித்துக் கடித்து நகைச்சுவை வழங்கும் ஸ்ரீதரின் அழகு நினைவில் இன்றும் நிழலாடுகிறது.

நவீன ஓவியத்தின் அகரத்தை ஸ்ரீதரிடமே அறிந்து கொண்டேன். நவீன ஓவியம் தீட்டுவதில் ஸ்ரீதரின் திறமை தீட்சண்யமானது. ஒருவரை ஒருசில நிமிடங்களில் வரைந்துவிடும் உன்னத ஆற்றல் ஸ்ரீதருக்கு உரியதாகும். அதனால்தான் ஸ்ரீதர் பிச்சையப்பாவை பற்றிய ஒரு குறிப்பில் கவிஞர் அல்-அஸ¤மத் ‘பீரீதர் பிக்காசோ’ என்று புகழாரம் சூட்டியது எனக்கு ஞாபகம்.

வாசிப்பு ஸ்ரீதருக்கு சுவாசிப்பு மாதிரி உயிர்.

இசை நிகழ்ச்சியின் சிறு இடைவெளியிலும் கதை புத்தகத்தை கையில் எடுத்துவிடுவார். அந்த நாளில் நாவல் என்றால் ஸ்ரீதருக்கு அதிக ஆவல்.

நவீன ஓவியத்தை போலவே புரியாத புதிராக காதிலே கடுக்கன் தலையிலே குடுமி, பத்து விரல்களிலும் முத்து மோதிரம். கழுத்தில் மாலைக்கு மேல் மாலை, வயிற்றின் நடுவே ஒரு பை; இப்படி ஆளே மாறிப்போனார்.

கலைகளை ரசிப்பதிலும் திறமையான கலைஞனை நேசிப்பதிலும் வாழ்த்துவதிலும் ஸ்ரீதர் எனது ஜாதி.

தினகரனில் தொடராக ஓடக்குழல் எனும் முதல் புதுக்கவிதை - கதையை நான் எழுதியபோது முதலாவது என் செவியில் விழுந்த வாழ்த்து ஒலி இனியவன் ஸ்ரீதருடையதுதான்.

என்னை சந்திக்கின்ற போதெல்லாம் ஓடக்குழலின் நாதத்தையும் எனது கீதத்தையும் ஒப்புவிக்காத நாளில்லை.

இளையராஜாவின் பாடல்கள் ஸ்ரீதரின் குரலுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. இஞ்சி இடுப்பழகி பாடலை ஸ்ரீதர் பாடும்போது நெஞ்சு இதமாக இனிக்கும்.

ஒரு மாதத்திற்கு முன்பு தினகரன் ஆசிரிய பீட முன்னாள் பிரபல ஓவியர் நண்பர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் ‘ஆராதனை’ தொலைக்காட்சி நாடகம் சம்பந்தமான கலந்துரையாடலில் இறுதியாக நண்பன் ஸ்ரீதரை சந்தித்தேன்.

வேட்டி சட்டையுடன் மிக எளிமையான அந்தப் பழைய ஸ்ரீதரை பார்த்தேன். நாம் நடந்துவந்த கடந்தகால சுவடுகளை எண்ணிக் களித்தோம்.

ஆனால்.... அப்போது ஸ்ரீதரின் அந்தத் துடிதுடிப்பு ஓய்ந்திருந்தது. வாட்டசாட்டமான உடம்பு வாடியிருந்தது.

ஏதோ வஞ்சிக்கப்பட்டது போல் விரக்தி தெரிந்தது.

மாத்திரையில் இனிப்பு பூசி கொடுப்பதுபோல் ‘உன் கலா யாத்திரையை கவலையின்றி தொடர்ந்து செல்’ என்று ஊக்கப்படுத்தினேன்.

லட்சோப லட்ச ரசிக உள்ளங்களின் துரதிர்ஷ்டம்.... நினைத்தால் ஓர் ஓவியம் – நினைத்தால் ஒரு நாடகம் – பாடல் - கவிதை என்று அனைத்துத் துறையிலும் ஆற்றல் பெற்ற எனது இனிய நண்பன் இள வயதிலேயே கலா இதயங்களை துடிக்க வைத்து துயில்கொள்கிறான்.


இன்று கொழும்பு தமிழ்ச் சங்க நிறுவனர் தின வைபவம்

கொழும்புத் தமிழ்ச் சங்க நிறுவனர் தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தலைமையில் நடை பெறும்.

தமிழ் வாழ்த்தினை செல்வன் ப. கோகுல், செல்வன் எஸ். மிதுஷன்ஹரி பாட, தொடக்கவுரையை சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா ஆற்றுவார்.

‘தமிழரின் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் சிறப்புரையை கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல் துறையை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேஷமூர்த்தி நிகழ்த்துவார்.

இவ்வருட சங்க சான்றோர் விருதை - வர்த்தக துறை பிரமுகர் - எஸ். பி. சாமி, பெறுகிறார்.

ஆடல் அரங்கத்தில் ‘நாட்டியக் கலைமணி’ திருமதி விமலச்சந்திரனின் நர்த்தன நிர்ணயா மாணவிகள் நிகழ்த்துவார்கள்.

நன்றியுரை பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்துவார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.