விஜய வருடம் தை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 08
SUNDAY February 09 2014

Print

 
கொழும்பு கம்பன் விழா-2014

கொழும்பு கம்பன் விழா-2014

இவ்வாண்டுக்கான கம்பன்புகழ் விருது பெறுகிறார் உலகப்புகழ் பாடகி பம்பாய் nஜய ஸ்ரீ

கொழும்புக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா எதிர்வரும் பெப்ரவரி 13, 14, 15, 16 ஆம் திகதிகளில் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன்கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 34 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு கம்பன் விழாவும் வழமைபோல ஊர்வலத்துடன் ஆரம்பமாகிறது. ஊர்வலத்தைத் தொடர்ந்து மாலை 5.30 யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையில் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மலேசிய அமைச்சர்

இவ்விழாவில் மலேசியக் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளரும் மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சருமான மாண்புமிகு டத்தோ எம். சரவணன் தலைமையில் மலேசிய இலக்கியப் பிரமுகர் குழுவினர் கலந்து சிறப்பிக்கின்றனர். இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல்நாள் மாலை நிகழ்வில் சிறப்புரை ஆற்றும் மலேசிய அமைச்சர் 16 ஆம் திகதி மாலை வழக்காடுமன்ற நீதிபதிகளுள் ஒருவராகவும் கடமையாற்றுகிறார்.

நூல், இறுவட்டு வெளியீட்டுகள்

இவ்வாண்டுக் கம்பன் விழாவில் இரு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. அருணாசலக் கவிராயர் எழுதிய “இராமநாடகக் கீர்த்தனை” மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் எழுதிய கம்பனோடு கால் நூற்றாண்டு ஆகியவையே அந்நூல்களாகும்.

சமூகநிதியுதவி

அமரர் எல். அலமேலு ஆச்சி ஞாபகமாகத் தமிழ் நாடு ஏ. எல். சிதம்பரம் நிறுவிய அறக்கட்டளை நிதியை இவ்வாண்டு மட்டக்களப்பு யோகர் சுவாமி மகளிர் இல்ல அமைப்பு பெறுகிறது.

‘கம்பன்புகழ் விருது’

பெறும் கலைமாமணி

பம்பாய் ஜெயஸ்ரீ

கொழும்புக்கம்பன் கழகம் உலகளாவியத் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு ‘கம்பன் புகழ் விருதினை” ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இவ் விருது இவ்வாண்டு, புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி கலைமாமணி பம்பாய் ஜெயஸ்ரீக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு திருமதி. பம்பாய் ஜெயஸ்ரீ ஆங்கில சினிமா ஒன்றில் பாடிய பாடல் “ஒஸ்கார்” விருதின் இறுதிக் தேர்வு வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.

சேவைக்காக உயர் கெளரவம்

பெறும் நம்நாட்டுப்

பெருமக்கள் அறுவர்

தம் செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் கொழும்புக் கம்பன்கழகம் கெளரவித்து வருகிறது. அவ்வரிசையில் இவ்வாண்டு கெளரவத்துக்குரியவர்களாக, எஸ். ரி. ஆர். நிறுவன அதிபர் எஸ். தியாகராஜா, புகழ்பெற்ற சிங்களக் கவிஞர் பராக்கிரம கொடிதுவக்கு, ஜாமியா நZமியா கல்லூரி இயக்குநர் எம். ஏ. எம். சுக்ரி, கட்டட வரைஞர் ஆர். சிவராமன், தேவி ஜூவலர்ஸ் அதிபர் என். எஸ். வாசு, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபைத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

“ஆறுமுக நாவலர்” விருது

பெறும் பேராசிரியர் இரா.

செல்வக்கணபதி

கம்பன் விழாவில் வருடாந்தம் வழங்கவென அறக்கட்டளை விருதுகளைச் சிலர் ஏற்படுத்தியுள்ளனர். நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் என். கருணை ஆனந்தன் சிறந்த அறிஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘நாவலர் விருது’ இவ்வாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞரான பேராசிரியர் டாக்டர் இரா. செல்வக்கணபதிக்கு வழங்கப்படுகிறது.

“விபுலானந்தர் விருது”

பெறும் சங்கீத பூஷணம்

சு. கணபதிபிள்ளை

தமிழ்நாடு திருக்குவளை இராம ஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர், சிறந்த இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கவென நிறுவியுள்ள ‘விபு லானநந்தர் விருது’ இவ்வாண்டு புகழ்பெற்ற இசைப்பேரறிஞர் சங்கீத பூஷணம் சு. கணபதிப்பிள்ளைக்கு வழங்கப்படுகிறது.

“மகரந்தச்சிறகு விருது”

பெறும் கவிஞர்

சோலைக்கிளி

கழகத்தின் கம்பன் புகழ்விருது பெற்ற கவிஞர் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் ஈழத்துக் கவிஞர்களை கெளரவிப்பதற்காக நிறுவிய ‘மகரந்தச் சிறகு’ விருது இவ்வாண்டு இலங்கை யின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவ ரான கவிஞர் சோலைக்கிளிக்கு வழங் கப்படுகிறது.

“நுழைபுலம் ஆய்வுவிருது”

பெறும் பேராசிரியர் தி.

வேல்நம்பி

புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் நினைவாக அவரின் குடும்பத்தினர் நிறுவியுள்ள அறக்கட்டளை மூலம், சிறந்த ஆய்வு நூல் ஒன்றுக்கு ‘நுழைபுலம் ஆய்வு’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்குரிய சிறந்த ஆய்வு நூலாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேரா. தி. வேல்நம்பி எழுதிய “திருக்குறளும் முகாமைத்துவமும்” எனும் நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

“ஏற்றமிகு இளைஞர்விருது”

பெறும் சங்கீத வித்துவான்

அ. ஆரூரன்

தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவியுள்ள ‘ஏற்றமிகு இளைஞர்’ விருதினை, சிறந்த இளம் சங்கீத வித்துவான் இசை விரிவுரையாளர் அ. ஆரூரன் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இளையோர் ஊக்குவிப்புப்

போட்டிகளுக்கான பரிசளிப்பு

அமரர் துரை. விஸ்வநாதன், அமரர் பொன். பாலசுந்தரம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட பேச்சுப போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் பரிசில்களும் விழாவின் முதல் நாளன்று வழங்கப்படவுள்ளன.

கம்பன் விழா நிகழ்ச்சிகள்

இவ்வாண்டுக் கம்பன்விழாவில் தனியுரை, விவாத அரங்கம், பட்டிமன்றம், சிந்தனை அரங்கு, கவியரங்கம், உரையரங்கம், இலக்கிய ஆணைக்குழு, வழக்காடு மன்றம், நாட்டிய வேள்வி, அஞ்சலியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு கலைமாமணி

நர்த்தகி நடராஜின் சிறப்பு

நாட்டிய அரங்கம்

இவ்வாண்டு கம்பன் விழாவின் முதல் நாள் மாலை அரங்கில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை நர்த்தகி நடராஜின் ‘இரணியன் வதை’ எனும் பொருளிலாள நாட்டிய நிகழ்ச்சி முதல் நாள் மாலை இடம்பெறவுள்ளது.

விழாவில் கலந்துகொள்ளும்

உள்நாட்டு வெளிநாட்டு

அறிஞர்கள்

இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்ளத் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் இரா. செல்வக்கணபதி, பேராசிரியர் வி. அசோக்குமாரன், புலவர் இரெ. சண்முகவடிவேல், வழக்கறிஞர் த. இராமலிங்கம், டாக்டர் ரி. ரெங்கராஜா ‘கம்பகாவலர்’ தி. முருகேசன் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து அகில இலங்கைக் கம்பன் கழக முன்னாள் தலைவர் தி. திருநந்தகுமார் ஆகியோர் வருகை தருகிறார்கள்.

இவர்களோடு சென்னைக் கம்பன் கழகம், புதுவைக் கம்பன்கழகம், வேலூர்க் கம்பன் கழகம், இராமேஸ்வரம் கம்பன் கழகம், திருச்சிக் கம்பன் கழகம் ஆகிய வற்றின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

புத்தக்கண்காட்சி

விழா நடைபெறும் நான்கு நாட்களிலும் மண்டபவாயிலில் பூபாலசிங்கம் புத்தகசாலை, புத்தகக் கண்காட்சி ஒன்றினை நடாத்தவுள்ளது.

கம்பன்விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச்சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]