கர வருடம் ஐப்பசி மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 10
SUNDAY NOVEMBER 06, 2011

Print

 
மட்டக்களப்பு நாட்டுக்கூத்தும் அதன் வளர்ச்சியில்

மட்டக்களப்பு நாட்டுக்கூத்தும் அதன் வளர்ச்சியில் வாகரை பே.சந்தியாம்பிள்ளை விதானையாரின் வகிபாகமும்
 

நிறைவில் நிறைந்த கலைஞர்

மட்டக்களப்புத் தமிழகம் கிராமியக் கலைகளின் சங்கமம் நகர்ப்புறவாசம் இன்னும் நாடாத அக்கிரமங்களில் உயிர் வாழும் கலைகளில் நாட்டுக்கூத்து முதன்மைபெற்றுத் திகழும். பாமர மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட இக்கலை பழந்தமிழர் நமக்கு விட்டுச் சென்ற முதுசங்கங்களில் ஒன்று என நாம் பெருமைப்படலாம்.

நாடு எனும் தமிழ்ச் சொல்லுக்கு கிராமம் என்றும் பொருள். இக்கருத்தின் அடிப்படையிலேயே கிராமத்து மக்களால் பேணி வளர்க்கப்பட்ட இக்கலை, நாட்டுக்கு கூத்து என வழங்கப்படுகிறது. ஆங்கில மொழியிலும் விountry எனும் சொல்லுக்கு கிராமம் என்றும் பொருள் இருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.

மட்டக்களப்புத் தமிழகத்தில் ஆடப்படும் கூத்துக்களின் வேரை தொல்பாக்கியம் (பொருளதிகாரம்) சங்க இலக்கியங்களை (புறநானூறு 24, 129 குறுந்தொகை 31,364, நற்றிணை; (50) சிலப்பதிகாரம் இந்திர விழா ஊர் எடுத்த காதை) ஆகிய நூல்களில் பரக்கக் காணலாம்.

கடைச் சங்கம், தமிழகத்தில் நிலவிய காலத்தில் (கி. மு. 500 - கி. பி. 200) அங்கு துணங்கை, குரவை, வரிக் கூத்துக்கள் (எட்டு வகை) சாக்கையர் கூத்து என்பன ஆடப்பட்டமை போன்று, அதே காலப் பகுதியில் ஈழத்திலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாநிலங்களிலும் அதே கூத்துக்கள் ஆடப்பட்டமையை மட்டக்களப்பின் சில கிராமங்களில் இன்னும் வழக்கில் இருக்கும் குரவைக்கூத்து ஒரு நநல்ல சான்றாகும். இக்கூத்து இன்று ‘குலவை போடுதல்’ என்று குறிக்கப்படுகின்றது.

மேலும் இரண்டாயிம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈழத் தமிழரும், தமிழகத் தமிழரும் ஒரே இனத்தவர் என்ற காரணத்தினால் இவ்விரு நாட்டிலும் இருந்து வரும் மொழி, கலை பண்பாடு என்பவை சூழ்நிலைக்கேற்ப சில மாறுபாடுகளுக்குட்பட்டிருப்பினும் அவை எல்லாம் அடிப்படையில் ஒன்று என்பதையும் வரலாறு காட்டுகின்றது.

குதித்து ஆடுதலால் கூத்து எனப் பெயர் பெற்ற ஆடற்கலை சங்க காலத்திலும் அதன் பின்பும் கூத்து, நாடகம், நாட்டியம் என்றே அழைக்கப்பட்டது. ஆயினும், காலகதியில் அவற்றிடையே உருவான நுண்ணிய வேறுபாடு கூத்து) எனும் பழங்கலையிலிருந்து நாடகம், நாட்டியம் எனும் கலைகளைப் பிரித்து வைத்தது போல தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் ஊடுருவிய ஆரிய பண்பாட்டு மயமாக்கல் கூத்தை வடமோடி தென்மோடி எனப் பிரித்து வைத்தது.

இவ்விதம் கூறுபடுத்தப்பட்ட பழந்தமிழ்க் கூத்துக்களில் ஒன்று (தென்மோடி) தமிழகத்தின் தெற்கில் குறிப்பாகப் பாண்டிய நாட்டில் தோற்றம் பெற்றது. எனக்கொள்வதற்கு அதன் அடைமொழியே (தென்) ஆதாரமாக அமையும். இதுபோன்று இன்னுமொரு தமிழர் கூத்து (வடமோடி) தனது தனித்துவத்தை இழந்து விட்டமைக்கு அக்காலத்தில் வழக்கில் இருந்த ஆசியக் கூத்து, இராமாயண புறம் 2ம், 378ம் பாடல்கள்) பாரத இதிகாசக் கதைகள் ஆகியவை அம் மக்கள் மீது செலுத்திய செல்வாக்கே காரணம் எனலாம். இங்கு எடுத்துரைக்கப்பட்ட கூத்துக்கள் இரண்டும் (வடமோடி, தென்மோடி) பல்வேறு அம்சங்களில் வேறுபடினும் அவை பண்டையத் தமிழர் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட அகத்தினை (தென் மோடி) புறத்திணை (வடமோடி) சார்ந்தவை என்று கூறும் பண்டிதர் வீ. சி. கந்தையா அவர்கள் அக்கூத்துக்கள் மட்டக்களப்புத் தமிழகத்தில் அரங்கேற்றப்படும் களரிகள், சிலப்பதிகார உரையில் காணப்படும் பழந் தமிழ் நாடக அரங்கின் காணப்படும் இலக்கணங்களுடன் பொருந்தி, பழம் பெருமையை நினைவூட்டும் என மொழிவார். (மட்டக்களப்புத் தமிழகம் புதிய பதிப்பு - பக். 51 - 52) தமிழகத்தில் வடமோடி, தென்மோடி என அழைக்கப்பட்ட இக்கூத்துக்கள் காலப் போக்கில் மங்கி மறைந்து. அந்நியரான நாயக்கர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி. பி. 12ம் நூற்றாண்டு) மீண்டும் உயிர்த்தெழுந்த போது, அது தெருக்கூத்து (தெரு எனும் சொல்லுக்கு வெளி என்று பொருள்) எனும் பெயர் பெற்றது. இத் தெருக்கூத்தே மாற்றங்களுடன் மட்டக்களப்புத் தமிழகத்தில் ஆடப்படும் நாட்டுக் கூத்துக்கள் என்பார் டாக்டர் ஏ. என். பெருமாள் (இந்து கலாசாரத் திணைக்களத்தின் தமிழ் கலைவிழா சிறப்பு மலர் - 1994)

ஈழத்தில் கூத்து என்றதும் மட்டக்களப்புத் தமிழகத்தையே பலரும் நோக்குவர். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அத் தமிழகத்தின் வாழ்விடங்களில் ஒன்றாக உள்ள கோறளைப்பற்று வடக்கு என்னும் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் (காயான்கேணி முதல் கதிரவெளி வரை) கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்ட எத்தனையோ நாட்டுக் கூத்துக்களில் ஒன்றுகூட வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரியவில்லை. இயற்கை வளம் நிறைந்த இப் பிரதேசம் அன்று அபிவிருத்தியில் மிகவும் பின் தங்கியிருந்தமையே இதன் காரணம் என்பது வெளிப்படை.

மட்டக்களப்புத் தமிழகத்தின் ஏனைய பிரதேசங்கள் போலன்றி கோறளைப் பற்று வடக்கில் ஆடப்படும் அனைத்துக் கூத்துக்களும் வடமோடியாகும். அவற்றில் இராம நாடகம் பதினெட்டாம் போர், அபிமன்யு நாடகம் பதின் மூன்றாம் போர், குருக்கத்திரன்போர், சராசந்திரன் போர், நச்சுப் பொய்கை, துரோணர் சபதம், இஸ்தாக்கியார் நாடகம், பப்பிரவாகன் நாடகம், மயில் இராவணன் நாடகம், ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கோறளைப்பற்று வடக்கில் ஆண்டு தோறும் வடமோடிக் கூத்துக்கள் பல அரங்கேற்றப்பட்டி ருப்பினும் நச்சுப் பொய்கை, துரோணர் சபதம், இளவரசி சரித்திரம் என்னும் மூன்று வடகோடி நாட்டுக்கு பாடியவர் என்னும் பெருமைக்குரிவர் அமரர் பேதுருப்பிள்ளை சந்தியாப்பிள்ளை விதானையாராவர்.

1902 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 17 ஆம் நாள் மட்டக்களப்பு பெரிய உப்போடையில் அந்தோனிப்பிள்ளை பேதுருப்பிள்ளை உடையாரின் மூத்த மகனாகப் பிறந்த சந்தியாப்பிள்ளை அவர்கள் வீட்டில் சூசைமுத்து என்றே அழைக்கப்படலானார்.

இளவயதில் மட்டக்களப்பு மண்ணுக்கேயுரிய கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்த சூசைமுத்து, தமது ஏட்டுப் படிப்பினால் அதனை விருத்தி செய்ததோடு இந்திய இதிகாசங்களாக இராமாயணம், பாரதம், மற்றும் நிகண்டு ஆகியவற்றையும் ஆர்வமுடன் கற்றார். அந்நூல்களில் அவருக்கிருந்த அறிவும் ஈடுபாடுமே பிற்காலத்தில் மூன்று நாட்டுக்கூத்துக்களை இயற்றுவதற்கு வழிவகுத்தது எனலாம்.

இத்தகையதொரு சூழ்நிலையில் 1907 ஆம் ஆண்டளவில் வாகரை - பனிச்சங்கேணி பிரதேசங்களின் பொலிஸ் தலைமையாகக் கடமையாற்றிய அமரர் அ. போதுருப்பிள்ளை அவர்கள் முப்பதுகளின் ஆரம்பத்தில் உடையார் என்னும் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்ட போது அவரின் மூத்த மகன் அமரர் பே. சந்தியாப்பிள்ளை (சூசை முத்து) அவர்களை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பதவிக்கு நியமித்தது.

ஆரம்பத்தில் பொலிஸ் தலைமையாகவும் பின் கிராம அதிகாரியாகவும் (Villagலீ சிலீaனீசீan) ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் (1932 - 1957) மூன்று பட்டங் கட்டிமாரின் உதவியோடு பணியாற்றிய அமரர் அவர்கள் தமது வேலைப் பளுவுக்கு மத்தியிலும் நாட்டுக்கூத்தில் தமக்கிருந்த ஈடுபாட்டை விட்டுவிடவில்லை. இதற்கு அவரது மாமனாரும் இந்திய இதிகாசங்கள் இரண்டிலும் பாண்டித்தியம் பெற்றவருமான அமரர் க. செ. கணபதிப்பிள்ளை உபாத்தியாயர் வாகரை ஊரியன் கட்டைச் சேர்ந்த அண்ணாவியார் அமரர் வி. வயிரமுத்து ஆகியோருடன் அவருக்கிருந்த நெருக்கமான உறவே காரணம் எனலாம்.

எனினும் ஊரில் எங்கு கூத்து அரங்கேற்றப்பட்டாலும் அங்கு முதல் ஆளாக அழைக்கப்படும் கெளரவத்தைப் பெற்றிருந்த விதானையார் அக் கெளரவத்தைப் பற்றிக் கவலைப்படாதவராய் மத்தளம், சல்லரி சத்தம் கேட்டதும் தமது வெள்ளிப் பூண்போட்ட கருங்காலித் தடியுடன் கூத்து நடைபெறும் இடத்தில் பிரசன்னமாகி விடுவார்.

வாகரை வாணன் (தொடரும்)

இளவரசி சரித்திரம் என்னும் பெயரைக் கொண்ட நாட்டுக் கூத்தே விதானையாரின் முதல் இலக்கியப் படைப்பாகும். தாம் தம் பதவியிலிருந்து 1957 ஐப்பசி 17ல் ஓய்வு பெற்ற பின் ஒரு கற்பனைக் கதையை மூலமாக வைத்து வடமோடி நாட்டுக் கூத்துக்குரிய அனைத்து இலக்கணங்களும் பொருந்த அவர் இயற்றிய இக் கூத்தினை அவரது மாமனார் அமரர் க. செ. கணபதிப்பிள்ளை அவர்கள் வாசித்து வேண்டிய திருத்தங்களைச் செய்து கொடுத்தபின் அதனைப் பழக்கி அரங்கேற்றும் பொறுப்பை ஏற்ற அண்ணாவியார் தம்பியப்பா, அப்பணியை நிறைவு செய்ய முடியாமல் போனது துரதிஸ்ரம் என்றே கூறுதல் வேண்டும்.

இதன்பின் விதானையார் இயற்றிய மற்றுமொரு நாட்டுக் கூத்தின் ¦பெயர் நச்சுப் பொய்கை என்பதாகும். மகாபாரதத்தின் கதை ஒன்றைத் தழுவி அவர் இயற்றிய இந்நாட்டுக் கூத்து மட்டக்களப்பு எகெட் நிறுவகத்தின் அனுசரணையுடன், மின் விளக்கின் வெளிச்சத்தில் 02.08.2008 ஆம் ஆண்டு வாகரை கண்டலடியில் அண்ணாவியார் திரு. த. இளையதம்பி அவர்களால் அரங்கேற்றப்பட்டது.

துரோணர் சபதம் என்னும் நாட்டுக் கூத்து விதானையாரின் இறுதிப் படைப்பாகும். எழுபதுகளின் இறுதிப் பகுதியில் பாடப்பட்ட இந்த நாட்டுக் கூத்து இக் கட்டுரையாசியரால், மேடை நாடகமாக எழுதப்பட்டு மட்டக்களப்பு வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தினரால் 1968 ல் மட்டக்களப்பு, மாநகர சபை மண்டபத்தில் அப்போதைய நகர சபைத் தலைவர் அமரர் ஜே. எல். திசவீரசிங்கம் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட வீரமாமுனிவர் விழாவில் அரங்கேற்றப்பட்டது.

இவ்விதிகாச நாடகத்தில் முக்கிய வேடங்களில், அன்று பிரபல்யம் பெற்று விளங்கிய மட்/ இளங்கதிர் நாடக மன்றத்தைச் சேர்ந்த திருவாளர்கள் ரைற்றஸ் கென்றி, பாலசுப்பிரமணியம் செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்) கணசானந்தம் ஆகியோர் நடித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பலரினதும் பாராட்டைப் பெற்ற இந்நாடகம் 1970 ல் தமிழ் நாட்டில் நூலுருப்பெற்ற பின் அதனை வாசித்து மகிழ்ந்த விதானையார் அவர்கள் அந்நாடகத்தை ஒரு நாட்டுக் கூத்தாகப் பாடி அழியா இலக்கியகர்த்தாவானார்.

இந்நாட்டுக்கூத்து, விதானையாரின் மைந்தரில் ஒருவரான அமரர் ச. சத்தியரெத்தினம் அவர்களின் நிர்வாகத்தில் 1983 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அண்ணாவியார் திரு. க. இளையதம்பி அவர்களால் வாகரையில் அரங்கேற்றம் கண்டது.

பொறுப்பு வாய்ந்த அரச உத்தியோகத்தராகவும் நாட்டுக்கூத்துப் புலவராகவும் வலம் வந்த விதானையார் தமது பாட்டனார் வல்வெட்டித்துறை அந்தோனிப்பிள்ளை அவர்களைப் போல சித்த ஆயுள்வேத வைத்தியராகவும் சிறந்து விளங்கினார். ‘கைப்பிடிக்கு’ சூசைமுத்து என்று ஊரே சொல்லுமளவிற்கு பேர் பெற்று விளங்கிய விதானையார் அவர்கள் அவ் வைத்தியத்தை ஒரு சமூகப் பணி போலவே மேற்கொள்ளலானார்.

இவ்விதம் மூன்று துறைகளிலும் ஏற்றம் பெற்றுத் திகழ்ந்த விதானையார் அவர்கள் தமது எழுபத்தேழாவது வயதில் 23.08.1979ல் இயற்கை எய்தினாலும் அவரது மூன்று நாட்டுக்கூத்துக்களும் அவரது அழியாப் புகழில் சான்றுகளாக விளங்கும் என்பது திண்ணம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]